விசுவாச வாழ்க்கையில் நாம் யார்?

உலகில் உள்ள எல்லா மனிதர்களும் 1. தாங்கள்அழகாக இருப்பதாகவும் 2 தாங்கள் பணக்காரர்களாக இருப்பதாகவும் 3 அதைவிட முக்கியமாக தாங்கள் அறிவாளி என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். முதல் இரண்டைவிட மூன்றாவது எல்லோருக்கும் பிடித்தமான ன்று. தங்கள்து பேச்சில் சில விசயங்களைத் தெளித்துவிட்டு, தம்பட்டம் அடிப்பவர்கள். இளைஞர்கள், பெரும்பாலும் கடவுள் இல்லை என்றும். அவர் இருப்பதை நிரூபியுங்கள் என்றும் சவால்(சவடால்) விடுவது பெரும்பாலும் சகஜம். மேடைப் பேச்சாளர்கள் நான் பிரதமரை கேட்கின்றேன், கர்நாடகம் என் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது எனப் பேசுவார்கள். ஏனெனில் நிச்சியமாக பிரதமர் பதில் அளிக்கப் போவதும்இல்லை, பதில் அளிக்க தேவையுமில்லை.

இதேமாதிரியான ஒரு கும்பல் இயேசுவைத் தொடர்ந்து போகிறது. இயேசுவை பின்பற்றிய சீடர்கள் அவரின் புதுமைகளைப் பார்த்து, நமக்கும் எதாவது செய்யமாட்டாரா? என்ற ஏக்கத்தோடு பார்த்தவர்கள், உடல் நலம் பெற விரும்பிய பலர், அவருடைய போதனையைக் கேட்கப் பலர், அவரைப் பிடிக்க சிலர் என்ற பட்டியலில் அவரை எப்படியாவது பேச்சில் சிக்க வைத்து அவரை மடக்கப் பார்த்தவர்கள் தான் இந்த பரிசேயர்கள். சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள்.

மாற்கு 12 ஆம் அதிகாரத்தில் இம் மூவரையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.(மாற்கு 12:13-34)

பரிசேயர்கள்

பரிசேயர்கள் பணத்தை மையமாக வைத்து, வாழ்பவர்கள்.. நம்முடைய திருத்தந்தை கூறுகிறார், இன்றைய உலகம் மனிதனை மையப்படுத்தவில்லை. மாறாக உலகம் பணத்தால் ஆளப்படுகிறது என்கிறார். சமய, சடங்குகள், சம்பிரதாயங்கள் சிலவற்றைப் பின்பற்றும் மறைமுக குளிர்சாதன சபை தேவையில்லை. மக்களோடு மக்களாக இணைந்து பணிபுரியும் வெளிஉலக சபை தான் முக்கியம் என்கிறார்.

இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்க எண்ணிய பரிசேயர்கள் "சீசருக்கு செலுத்துவது முறையா?" என நாட்டுப்பற்றோடு கேட்கவில்லை, மாறாக "சீசருக்கு வரி செலுத்த வேண்டாம்" என இயேசுக் கூறினால் அதை வைத்துக்கொண்டு, தேச துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கலாம் என நினைத்தனர். ஏனெனில் அவர்களின் உள்ளமெல்லாம் காசு, பணம் பணம் என்று அலைவார்ககள். சம்பாதிக்கும் பணம் வங்கியில் இருக்கும். வங்கி கணக்கு 1 கோடி, 2 கோடி, 10 கோடி என ஏறும். ஆனால் இவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள். கஞ்சனாக இருப்பார்கள். உள்ளத்திலே வறுமை, பண மோகம், ஏழைகளுக்கு இரக்கம் காட்டாத பரிசேகர்களாக நாம்?

சதுசேயர்கள்

இவர்கள் மறுபிறப்பு, உயிர்த்தெழுதல், ஆவி இம்மூன்றிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். இவர்களுக்கு இம்மை வாழ்வே சொர்க்கம். மறுமை வாழ்வின் மீது நம்பிக்கை இல்லை. இவர்களின் குழப்பம் ஏழு பேரை மணந்த ஒரு பெண்ணுக்கு, உயிர்தெழுதலுக்குப் பின் யாருக்கு இவள் மனைவியாக இருப்பாள் என்ற குழப்பம். இந்தமாதிரி குழப்பத்தில் உள்ள மனிதர்களும் இப்போது உண்டு.

மனிதபலவீனமான பெண்ணாசை கொண்டவர்கள் வாழ்க்கை என்பது உடலுறவு மட்டும் என நினைக்கிறார்கள். மனிதனில் காணப்படும் அன்பு, புனிதம், பரிவு, தன்னடக்கம், தூய்மை, வாய்மை போன்றவைகளில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

இதுபோன்ற மனிதர்கள் தற்போது ஏராளம். தில்லி மாணவியின் பாலியல் கொடுமை, மகளோடு உறவு கொள்ளும் தந்தை என்று செய்தித்தாள்களில் வன்கொடுமை செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. செய்தித்தாளில் பாதி செய்திகள் இது போன்றவே!. இதுபோன்று சதுசேயத்தனம் மிக்கவர்களின் நாமும் ஒருவரா?

மறைநூல் அறிஞர்

இவர் மறைநூல்களை கரைத்துக் குடித்திருப்பார். பூஜை, சம்பிரதாயங்களுக்கு முக்கியம் அளிப்பார். அருகில் உள்ள மனிதனைக் கண்டும், காணமலும் இருப்பார். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத கடவுளுக்குப் புஜை செய்வார். நல்ல சமாரியன் உவமையில் வரும் குரு லேவியைப் போல ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால் திருப்பலி, நன்மை வாங்குதல், பாவ சங்கீர்த்தனம், ஜெபமாலை, விவலிய வாசிப்பு போன்றவைகளில் இவருக்கு நிகர் இவரே. மறைநூல் அறிஞரின் கேள்வி முதன்மையான கட்டளை எது? இயேசு இவர்களிடமே கேட்கிறார். அவரின் பதில் சற்று கூடுதலாக பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதையே மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

இவர்கள் போலிக்குருக்கள். சொல்வார்களே தவிர, செய்யமாட்டார்கள். நாமும் பிறரைப் பார்த்து பிறரை அன்பு செய்ய தர்மம் கொடு, திருவிவிலியம் வாசி, உபவாசம் இரு என்போம். ஆனால் நாம் இருக்கமாட்டோம். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்னும் மூன்று இச்சைகளுக்கு அடிமையாகி, இயேசுவிடமிருந்து விலகிச் செல்கிறோமா? அல்லது அவைகளைத் தவிர்த்து இயேசுவோடு ஐக்கியமாகிறோமா? நம்மை நாமே எடைபோட்டுப் பார்ப்போம்.

அப்போது நமக்குத் தெரியவரும், நாம் யார் என்று?

சிந்தனைச் செல்வர், பேராசிரியர், அ.குழந்தைராஜ்