நம்பிக்கை - கொடையா? கனியா?

year of faith திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் வரும் 2012 அக்டோபர், 11 ஆம் தேதி முதல் 2013 நவம்பர் 24 நாள் உள்ள ஓராண்டுக்கும் மேலான காலத்தை "நம்பிக்கை ஆண்டு" என பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த "நம்பிக்கை ஆண்டு" இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகளைக் கொண்டது.
1. வத்திக்கான் சங்கம் 1962-ல் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன.
2. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்விப் பணி பிரகடனத்தின் 20ஆண்டு என இவ்விரு நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டாட நம்மை அழைத்துள்ளார்.

ஆதிகால கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை அளவிட முடியாதது. நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் பலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1) மெசப்பத்தோமியாவில் உள்ள "ஊர்"(UR) என்னும் ஊரிலிருந்து புறப்பட்டாரே, ஆபிரகாம் அது நம்பிக்கை. 90 வயதிலும் தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற விசுவத்து தன் ஓரே மகன் ஈசாக்கை, பலி கொடுக்கத் துணிந்ததும் நம்பிக்கை.

எலியா இறைவாக்கினர், கார்மேல் மலையில் 400 போலி தீர்க்கதரிசிகளை எதிர்த்து நின்ற சவால் ஓர் ஆழமான நம்பிக்கை. கலிலேய கடலில் இயேசு நடந்து வந்தபோது, அவரைப் பார்த்து கடல் மீது நடந்து சென்றாரே, பேதுரு, அது நம்பிக்கை.

Noha's ark உலகில் உள்ள ஜீவராசிகளை ஜோடிஜோடியாக சேர்த்து, தானும், தன் குடும்பத்தினரும் தப்பிக்க, கட்டாந்தரையில் பெரிய கப்பலை (பேழை - ARK ) கட்டினாரே, நோவா, அது நம்பிக்கை. எகிப்தில் அரச வாழ்க்கையை விட, மெசியாவின் பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலாக செல்வம்" என்று கருதி தமக்கு பின்னால் ஆறரை லட்சம் மக்களை அழைத்து, செங்கடலைப் பிளந்து வழி நடத்திய மோசேயின் அசைக்கமுடியாத துணிவு ஒரு நம்பிக்கையின் செயல்.

"நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்"(எபி 12:2) இயேசுவைப் பின்பற்றி வாழும் நாம், நம்மில் காணப்பட வேண்டிய கனிகள் ஒன்பது, " அன்பு, மகிழ்ச்சி,அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், சாந்தம், நம்பிக்கை, தன்னடக்கம்" (மரியாதை, இச்சையடக்கம், கற்பு இவைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்) ஆவியானவரின் கனிகளில் ஒன்றான "நம்பிக்கை" ஒரு மனிதனில் காணப்பட வேண்டிய ஒரு பண்பு, மனிதனுக்கு தம்மைப் படைத்தவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அன்பு தொடங்கி தன்னடக்கம் வரையிலான 9 கனிகளும் கண்ணால் பார்க்கக்கூடியது அல்ல. மாறாக பிறர் நம்மில் காண வேண்டிய பண்புகள், தனி மனிதனுக்கும் நம்பிக்கை தேவை.

CanaaniteWoman பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்கிய பொழுது (மத் 17:14-21) சீடர்கள் " எங்களால் ஏன் பேய் ஓட்ட இயலவில்லை" என்பதற்கு இயேசு " உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்" என்கிறார். " உங்களால் முடியாதது என்று ஒன்றும் இராது" எனக் கூறுகிறார். நூற்றுவர் தலைவரின் பணியாள் குணமான பொழுது (லூக்கா 7:1-10) இஸ்ராயேல் மக்களில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை: என்கிறார். கானானியப் பெண்ணைப் பார்த்து (மத் 15:28) "அம்மா உமது நம்பிக்கை பெரிது" எனக்கூறினார். இப்படி பல நிகழ்வுகளில் தனி மனிதனின் நம்பிக்கை பெரியது எனச் சுட்டிக் காட்டுகிறார். " என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார் (யோவான்11:25)

நம்பிக்கை ஆவியானவரின் கொடைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கொடைகள் ஒன்பது. அவைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1) பேச்சு பற்றிய கொடை 2,அறிவு பற்றிய கொடை 3, அருள் அடையாளங்கள் செய்யும் கொடை.

கொடைகள் கடவுளால் வழங்கப்படுகின்றன. அவைகள் பிறருக்கு சென்றடைய வேண்டும். ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமரிடம் அதிகாரம், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் சொந்தப் பயனுக்காக இல்லை. அவை பிறருக்கு மட்டுமே பயன்படவேண்டும். ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் பணிகள் பிறருக்காக மட்டுமே. எந்த சூழலிலும் தன்னுடைய புலமையை திறமையை தனக்குத்தானே பயன்படுத்த முடியாது. அதுபோலத்தான் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்ட வேண்டும். 1. ஞானம் நிறை சொல்வளம் 2.அறிவு செரிந்த சொல்வளம் 3. நம்பிக்கை 4.பிணி தீர்க்கும் கொடை 5.வல்ல செயல்கள் 6. இறை வாக்குரைத்தல் 7. ஆவியை பகுத்தறியும் ஆற்றல் 8.பல்வகைப் பேச்சு 9. இதை விளக்கும் திறன். இவையனைத்தும் தானே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் நம்பிக்கையோடு வாழ வேண்டும் எனக்கூறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு கழைக்கூத்தாடி ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள இரண்டு குன்றுகளை ஒரு இரும்புக் கம்பியால் இணைத்துக்கொண்டு அதன் மீது தனியாக நடந்து சென்று பல சாகசங்களை செய்வதைப் பார்த்த மக்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். ஒரு நாளும். அவன் கம்பி மீது நடக்கும் நிகழ்வுகளில் தவறியதேயில்லை. தினந்தோறும் பலர் பாராட்டுவார்கள். காசு கொடுப்பார்கள்.

Balancing on wire ஒருநாள் அவன் கம்பி மீது நடக்கும் முன்னர் " யாரவது ஒருவர் உங்களுடைய குழந்தையை என்னிடம் தாருங்கள். நான் குழந்தையைச் சுமந்து, கம்பி மீது நடப்பேன்" என வேண்டினான். குழந்தைகளைக் கொண்டுவந்தவர்கள் அலறியடித்து ஓடிப்போனார்கள்.அவர்கள் கழைக்குத்தாடியின் சாகச நிகழ்ச்சிகைளை ரசித்தார்களே தவிர அவன் மீது "நம்பிக்கை" கொள்ளவில்லை. அதுபோலத் தான் நமது மக்களும் வாழ்வில் சோதகைகள் பிறருக்கு ஏற்படும்போது " கடவுள் மீது, இயேசுவின் மீதும், அன்னை மரியாவின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை" என்பார்கள். அதே சோதனை தனக்கு ஏற்படும்போது "கிளி ஜோஸ்யம்" பார்க்கசச் செல்வார்கள்

"பாம்புகளையும், தேள்களையும் மிதிக்க நமக்கு நம்பிக்கை என்னும் அதிகாரம் தந்திருக்கிறார் இயேசு. பின்னர் ஏன் பயம்? நடுக்காட்டிலே ஒருவன் செல்வதாக வைத்துக்கொள்வோம். அவனிடம் எந்தக் கருவியும் இல்லையென்றாலும் தன் சொந்த உடல்பலத்தை நம்பி அவன் செல்லலாம். அதற்கு அவன் பயந்தால் தன்னுடம் டார்ச் லைட், கம்பு, கத்தி, துப்பாக்கி எடுத்துச் செல்லலாம். இவையனைத்தும் தம்மிடம் இருந்தும் "ஓநாய்" வருவதைக் கண்டு அவன் பயப்படுவதற்குக் காரணம் என்ன? தம்மிடம் உள்ள கருவிகளை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான் என்பதே.

எனவே தனிமனிதனிடம் காணப்படுகின்ற "நம்பிக்கை" ஆவியின் கனிகள்.

ஒருவர் மற்றவர்க்கு நம்பிக்கையூட்டும் "நம்பிக்கை" ஆவியின் கொடை. முந்தியது தனக்காக. பிந்தியது மற்றவர்களுக்காக.

எனவே தான் கொடை மற்றும் கனிகளில் காணப்படும் ஒரே பண்பு " நம்பிக்கை" என்பதாகும்.

"சிந்தனைச் செல்வர்" பேராசிரியர் அ.குழந்தைராஜ், காரைக்குடி