தங்கநிலவுக்குத் தாலாட்டு

  merry christmas to all           
பூக்கள் மலரும் முன்பனிக்காலத்தில்
 நிலவு தூங்கும் நிசப்த நேரத்தில்
  மண்ணக மாட்டுத் தொழுவமதிலே
   மாசில்லாக்கன்னிமரி மணிவயிற்றினிலே
    மாணிக்கமாய் கருவுருவான மாதவமே
   தாலேலோ.... தாலேலோ...தாலேலோ...

தேடக் கிடைக்காத தெவிட்டாத் திரவியமே
 எம்மைத் தேடி வந்து திகைக்க வைத்தாயே!
  நாளும், பொழுதும் ஏங்கிய எமக்கு
   எல்லையில்லா ஆனந்தமயமான ஏந்தலே
    எழில் வதனத்தால் சொக்கவைக்கும் சுகமே
   தாலேலோ.... தாலேலோ...தாலேலோ...

விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்த வசந்தமே
 கற்பனையைக் கடந்த உயிரோவியமே
  சிந்தைக்கு எட்டாத சீராளனே
   சீடர் எமக்காய் சிசுவானாய்
    மாந்தர் எமக்காய் மகவானாய்
   தாலேலோ.... தாலேலோ...தாலேலோ...

பாவிகளைத் தேடிவந்த பரம்பொருளே
 பாவஇருள் நீக்கிய பகலவனே
  பொன்னினும் மணியினும் மேலான முத்தே
   உம் பிஞ்சுக்கரத்தால் எம்மைத் தொட்டு
    ஆசீரளித்து அரவணைப்பாய்
   தாலேலோ.... தாலேலோ...தாலேலோ...