கிறிஸ்மஸ் மனமாற்றத்தின் விழா

அருட்சகோதரி.ஜோவிட்டா

நாம் புது வாழ்வு பெற, பாவத்திலிருந்து விடுபட, மனம் மாறி உறவில் வளர்ந்திட இயேசு அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2:7). கடவுள் நிலையில் உரிமை பெற்ற இயேசு தம்மைத் தாழ்த்தினார். அவரின் அன்புப் பரிசு- அன்பின் பகிர்வுதான் கிறிஸ்துமஸ் பெருவிழா.

பாவிகளான நாம் வாழ்வுபெற தம்மையே தாழ்த்தினார் இயேசு, மனம் மாறி தன்னை தாழ்த்தும் எவனும் புதுவாழ்வு பெற முடியும். லூக் 15, 19 கூறும் கருத்துக்கள் மனமாற்றம் மனிதனுக்குத் தேவை என்பதை தெளிவாகக் கூறுகின்றன. எனவே, கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடத் தயார் செய்யும்போது உணவு, உடை, வீட்டின் அலங்காரம் இவற்றைவிட உள்ளத்தை தூய்மையாக்குவோம்.

இயேசு பிறந்த நற்செய்தியை இடையருக்கு அறிவிக்கும் வானதூதர் "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று கடவுளைப் புகழ்ந்து பாடி இயேசு பிறந்த செய்தியை இடையருக்கு அறிவித்தனர் (லூக் 2:14). இயேசுவின் பிள்ளைகளாய் வாழ மனதில் மனமாற்றம் தேவை. மனம் மாறிய மனதில் மன்னிப்பு, மகிழ்வு, அமைதி உண்டு. பழைய நிலை மாறி புதுவாழ்வு பெற குழந்தை உள்ளம் தேவை.

நிக்கதேமு இயேசுவிடம் உரையாடும் போது 'எப்படி மனிதன் மறுபடியும் பிறப்பது?' என்று கேட்கிறார். பாவத்திலிருந்து, தீச்செயலில் இருந்து விடுபடும்போது தூய ஆவியால் நிரப்பப்பட்டு பாவத்திலிருந்து விடுபட்டு ஒளியைப் பெறுகிறோம். ஒளியுள்ள இடத்தில் பாவ இருள் அகற்றப்பட்டு புதுவாழ்வு பெறுகிறோம். "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்” (யோவா 3:21). ஒளியாம் இயேசு அமைதியை அளித்து, இருளைப் போக்கி, ஒளியைத் தந்து, அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளிக்கிறார் (கலா 5:1). தூய்மை மிகு இதயம் இறைவன் தங்கும் இல்லமாகும். நீங்கள் தேவனுடைய ஆலயம், பரிசுத்த ஆவி உங்களில் குடிகொள்வாராக (1கொரி 6:19). எனவே, தூய்மை மிகு இல்லமாக நாம் மாறுவதே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாகும்.

கிறிஸ்துவில் அவன்!

உலகில் பல்வேறு கொண்டாட்டங்கள், விழாக்கள் உண்டு. ஆனால் கிறிஸ்து பிறப்பு விழா மனமாற்றத்தின் விழா, அயலானை மன்னித்து ஆவியின் கனிகளாம் அன்பு, மகிழ்ச்சி, அமைதி... என்று ஆவி காட்டும் நெறியிலே நடக்க முயல்வோம் (கலா 5:22-25).

பரிசுத்தம், தூய்மை நிலவிட மனமாற்றம் தேவை. எனவே, கிறிஸ்து பிறப்பாய் புது வாழ்வு பெற்ற நாம் அயலானை மன்னித்து, அன்பைப் பொழிந்து, அடிமை என்னும் பாவநிலையில் இருந்து விடுபட்டு மறு கிறிஸ்துவாக அன்புமிகு சமுதாயத்தை உருவாக்குவோம். அதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் உச்சக்கட்டம், பட்டாடை அணிந்து பட்டாசு வெடிப்பதைக் குறைத்து சக்கேயுபோல் மனம் மாறி ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்போம். கிறிஸ்துவின் அன்பை அகிலத்திற்கு அளித்து உண்மையான கிறித்தவ வாழ்வு வாழ்வோம்.

மனம் மாறிட வழிகள்

திருவருகைக் காலத்தின் நான்கு வாரங்களும் நமது மனதைத் தூய்மையாக்கிட வழிகாட்டுகின்றன. முதல் வாரம் உரோ 13:8-14 வரை நாம் நமது மனதை பாவத்திலிருந்து விலக்கி எப்படி பரிசுத்தமாய் வாழ்வது என்று கூறுகிறது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய தீச்செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆடைக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக (உரோ 13:12).

மனம் மாறி பரிசுத்தமாய் வாழ ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசுவை அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது (உரோ 13:14). எனவே, புதுப்படைப்பாய் மாறி பாவத்திலிருந்து விழித்தெழுந்து, விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரின் பிறப்பை போற்றிப் புகழும் வானதூதர்களோடு சேர்ந்து "மகிமை (Glory) நம் ஆண்டவருக்கே" என்று புகழ்பாடி மகிழ்வோம். "வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்... மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்" (திபா 24:9-10 என நமது மனக்கதவைத் திறந்து, எழுந்து பிரகாசி; உன்னில் ஒளிவந்துள்ளது" (சொ 60:1) என்று இருள் அகற்றி இயேசுவின் ஒளி இயேசுவின் அன்பு அகிலத்தில் மலர நாம் உப்பாக, ஒளியாக வாழ்வோம். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். நீங்கள் உலகிற்கு ஒளி" (மத் 5:13-14). கிறிஸ்துவின் ஒளி நம்மில் சுடர்விட அன்புமிகு கிறித்தவ சமுதாயமாய் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021