இன்னொரு கிறிஸ்து பிறப்பு

வழியோரம் வேதனையோடு அவஸ்தை பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் கரம் நீட்டினார் அன்னை தெரசாள்... ஆயிரம் ரூபாய் டிரெஸ் எடுக்க வேண்டாம் என்று குறைந்த விலையில் ஆடையை தேர்ந்தெடுத்தவள்.. மீதி ரூபாயை தன் தோழிக்கு ஆடை எடுப்பதில் செலவழித்திட்ட ரோஸி போன்ற பெண்களின் எண்ணிக்கை என்னவோ குறைந்து கொண்டே தான் உள்ளது. கிறிஸ்து பிறப்பு என்ற திருவிழா ஆடம்பர விழா என்ற நினைப்பு நமக்குள் அதிகரித்து விட்டது. ஆடை ஆபரணங்களுக்கும், பட்டாசு வகைகளுக்கும் பணத்தின் மதிப்பை குறைத்து காட்டுவதோடு மட்டும் அல்லாமல் நமது பழக்கவழக்கங்களை பாழ்படுத்துகிறது.

கடன் வாங்கியாவது வீட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற சீர்கேடுகள் பண்பாடு என்ற பெயரில் நம்மில் அடைக்கலம் கொண்டுள்ளது. தொலைக்காட்சி இல்லையா? குளிர்சாதன பெட்டி இல்லையா? என்று கேள்விகளுக்கு இல்லை என்பது கேவலமான செயலாகத்தான் தெரிகிறது. குடும்ப ஜெபம் உள்ளதா? மகளுக்கு திருப்பலி ஜெபங்கள் தெரிகிறதா? புனிதர்கள் வாழ்வு புரிகின்றதா? விவிலியத்தின் வசனங்கள் தெரிகின்றதா? என்பதும் மட்டும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. உண்மையான கிறிஸ்து பிறப்பு என்றால் என்ன? கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வழி முறைதான் என்ன? என்பது போன்ற நல்ல விஷயங்கள் புதைந்து தான் போய்விட்டது.

நமக்காக பிறந்த பாலகன் ஒருவரை எப்படி வரவேற்பது அவரை வரவேற்றிட நம்மை எவ்வாறு தகுதி உள்ளவர்களாக மாற்றுவது? என்ற சிந்தனையை நாம் என்றாவது முன்நிறுத்தி உள்ளோமா? உண்மையான கிறிஸ்து பிறப்பு என்றால் என்ன? கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை நாம் எவ்வாறு மற்றவர்களோடு இணைந்து கொண்டாடுவது என்ற பேருண்மையை நம் வாரிசுகளுக்கு கற்று கொடுத்து உள்ளோமா? புத்தாடைகளும் புதுபுது பலாகாரங்களும், புதிய வகை வான வெடிகளும் மட்டுமே மகிழ்ச்சி என்னும் மனநிலையை என்று நாம் மாற்றி கொள்ளுவோம் என்றுதான் தெரியவில்லை. வறுமையில் வாடும் ஆயிரம் ஏழைகளுக்கு அன்பை செலுத்தி அன்னதானம் செய்தாலே போதும் கிறிஸ்து நமது மனதில் மகிழ்வோடு பிறப்பார். கிறிஸ்து பிறப்பினை வரவேற்கும் குடில்கள் கட்டுவது கூட இன்று வீட்டுக்கு வீடு அரிதான விஷயமாக தான் உள்ளது. பரிசுத்தமும், ஜெபமும் கலந்த குடும்பவாழ்வு மட்டுமே இறைமகனை இன்முகத்தோடு நம் இல்லத்தில் பிறக்க வைத்திடும் என்ற உண்மையை மறந்துதான் போனோம். நமக்காக, நம் பாவங்களுக்கு தண்டனை ஏற்க மானிட உரு எடுத்த மைந்தனின் வரவை கன்னி நிலையிலும் அன்னை மரியாள் அன்போடு ஏற்றுக் கொண்டதை நம் சிந்தனையில் முன் நிறுத்திடுவோம்.

பெத்தலேகேமில் பிறந்தவரை போற்றி துதிக்கும் மனசு சிம்மாசனத்தை துறந்த சிலுவை மரணம் ஏற்றவர். கடுங்குளிரை வென்று மாட்டு தொழுவத்தில் அவதரித்தவர். இடையர்குலாம் ஆராரோ பாடிட துயில் கொண்டவர்

இவ்வுலக மீட்பின் விடிவெள்ளியே வருக... வருக..." என பிறக்கப் போகும் பாலகனை வரவேற்றிடுவோம்.... மண்ணவருக்கு மட்டுமல்ல விண்ணவரும் மகிழ்ந்திடும் மாபெரும் மகிழ்வின் பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டிய கிறிஸ்துப் பிறப்பினைக் குடும்ப விழா என்று குறுகிய வட்டத்தில் அடைத்திட வேண்டாம்

.

குவலயமே கொண்டாடும் இப்பிறப்பு விழாவின் முழு அர்த்தமே நம்மை புதிய பிறப்பாக அவதரிக்க வைத்திடல் வேண்டும் என்பதனை நினைவினில் நிறுத்தி வைத்திடல் வேண்டும். உறவை வளர்க்கும் விழா, உண்மையை வளர்க்கும் விழா, தியாகம் வளர்க்கும் விழா, இரக்கத்தை வளர்க்கும் விழா என்றும் உண்மையை முதலில் நாம் அறிந்திடுவோம், நமது குடும்பத்தினருக்கும் உணர வைத்திடுவோம்.

பிறருக்கு கொடுப்பதில் உள்ள இன்பம். வாங்குவதில் இல்லை என்று உணர்ந்திடுவோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண இவ்விழாவினை பயன்படுத்திக் கொள்வோம். பகுத்தறிவு வளர, வளர பண்பாடு மறைந்திடும் கேடுகாலம் என்பதனை அறிந்திடுவோம். இறை சக்தி இவ்வுலகினை இயக்கும் துடிப்பு என்பதனையும், நம்மை வழிநடத்தும் ஒளி என்பதனையும் அறிந்திடுவோம். அன்பு மனம் கொண்டவர்களாக இப்பிறப்பை மகிழ்வோடு வரவேற்றிடுவோம்.

திருமதி ரீனாரவி