தேடியவர்கள், கண்டடைந்தனர்!

திருமதி.மேரி கிறிஸ்டோபர்-சென்னை24

அன்பார்ந்தவர்களே!
உலகம் முழுவதுமே, இயேசுவின் பிறப்பைக் கொண்டாட ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கிறது. மீட்பர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஞானிகள் மூவரும் அவரைத் தேடினர். அவர்களின் உண்மையான தேடலை அறிந்திருந்த ஆண்டவர், அவர்களுக்கு ஒரு வீண்மீன் அனுப்பி அவர்களை வழிநடத்தினார். இன்று நாம் யாரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். முதல் முதலாம் ஆண்டவருடைய ஆட்சியை அவருக்கு ஏற்புடையவற்றையும் நாம் தேடுகிறோமா? சற்றுச் சிந்திப்போம்.

உலகப் பொருட்களையும், பணத்தையும், மனிதர்களையும், பதவியையும், உயர் மதிப்பையும் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம். சக்கேயு உண்மையாகவே ஆண்டவரைக் காண வகைத்தேடித் தேடினார். கண்டடைந்தார். ஞானிகள் மீட்பரைத் தேடினர். கண்டடைந்தனர். அவர்கள் மீட்பரைக் காணும்வரை வீண்மீன் அவர்களுக்கு முன்பாகச் சென்றது. அவர்களும் மீட்பரைக் கண்டு, மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இயேசு உயிர்த்தெழுந்த அன்று அதிகாலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார். அஃது அவரின் உண்மையான தேடலைக் குறிக்கின்றது. ஆதனால் தான் ஆண்டவரும் மகதலா மரியாவிற்குத் தம்மையே வெளிப்படுத்தினார்.

ஏரோது அரசன் இயேசு என்னும் மீட்பர் பிறந்திருப்பதைக் கேட்டு, அவரைக் காண வழித் தேடினார். ஏதற்காக? இயேசுவைக் கொல்வதற்காக. ஆனால் அவன் எண்ணங்கள் தவறானதாக இருந்ததால் அவனால் இயேசுவைக் காண முடியவில்லை.

எசாயா 55:6ஆம் வசனத்தில் "ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்" என்று வாசிக்கின்றோம். நாமோ ஆண்டவரைத் தேடும் காரியத்தில் அசட்டையாக இருக்கின்றோம். ஆண்டவர் சில தருணங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றார். நாம் அதை அறியாமல் உலகம் போன போக்கிலே போய்க் கொண்டு இருக்கின்றோம். உரோமா 12:2 வசனத்தில் "இந்த உலகப்போக்கின்படி ஒழுகாதீர்கள், மாறாக உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக" என்று பவுல் கூறுகிறார்.

நம்முடைய நம்பிக்கையை மனிதர் மீதும், அதிகாரிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் வைத்து நாம் அவர்களைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். அந்தத் தேடுதல் நமக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். ஆனால் உண்மையாக ஆண்டவரைத் தேடும்பொழுது அவரை உறுதியாகக் கண்டுடைவோம். மன்னிப்புக்காக அவரைத் தேடும்போது அவர் நம்மை மன்னிக்கிறார். உதவிக்காகத் தேடும்போது நிச்சயமாகவே நமக்கு உதவிசெய்கின்றார். நெருக்கடி வேளையில் வேதனையில் நமக்கு ஆறுதல் அளித்து நம்மைத் தேற்றுவார். நம்மைப் பலப்படுத்துவார். குழப்பங்களிலிருந்து பிரச்சினைகளிலிருந்து, கண்ணீரிலிருந்து விடுதலைத் தருவார். ஆகவே நம் தேவைக்காக மட்டும் அவரைத் தேடமால் எல்லா நேரத்திலும் அன்போடு அவரைத் தேடும்பொழுது நிச்சயமாக நாம் வரை கண்டடைவோம்.

"சிங்கக்குட்டிகள் உணவின்றி உட்டினிகிடக்க நேர்ந்தாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு எக்குறையும் இராது" திருப்பாடல்கள் 34:10

anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com