கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப்பா!



அ. ஜோசப் ஜெரால்டின்

chismalarமுதற்பாவம் முற்று பெறவும்
தொடர் பாவம் கழுவப்படவும்
பரம தந்தையின் மைந்தனிவர்
தரும சிந்தையின் மையமாகி
உருவம் மாற்றி உடல் போர்த்தி
உலகு மாற்ற வந்தாரே.


தூயஆவி தூதுரைக்க
கன்னிமரி செவி கொடுக்க
விலக்க நினைத்த சூசை முனி
விளக்கம் பெற்றே துணையிருக்க
புறங்கூறும் பிற கூட்டம்
புதிர் கூட்டிப் பழி கூட்ட


தேவமகனை தன்மகனாய் தயவாய்
தாங்கியே பேறு பெற்றோர்
தங்கிய இருப்பிடம் தடை பெறவே,
மங்கிய ஒளியில் மலையடியில்
வாட்டும் குளிரில் மாட்டுக்குடியில்
காரிருளில் கன்னி மடியில்


மினுமினுக்கும் மின்னொளியாய்
சந்திர மென்னொளியாய்
சூரியப் பேரொளியாய்
அகிம்சை போராளியாய்
பெத்தலகேம் சிற்றூரில்
பெற்றவரே பிறந்தாரே.


christmasநமக்காய் தினம் ஏங்கி
இயேசு எனும் பெயர் தாங்கி
வந்தவரை வரவேற்போம்
வாழ்வுக்கு வரம் கேட்போம்
சிலுவையைச் சிறைபிடிப்போம் – அன்பின்
நிலுவையை அவர்க்களிப்போம்


நமக்காகப் பிறந்தவரின்
நலம் காப்போம்
நற்செயல்களைப் பிறப்புகளாக்கி
நாளும் காப்போம்
நல்மேய்ப்பரின் வாழ்த்துக்களை
நம்முள் கேட்போம்


கிறிஸ்து நிலம் தொட்டு
பிறந்திட்ட நாள் தான்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தீயது நமை விட்டு
இறந்திட்டால் தான்
கிறிஸ்துவுக்கே கொண்டாட்டம்
தீயதை துண்டாடி துறப்போம்
கிறிஸ்துவின் கொண்டாட்டத்தைத் திறப்போம்.