நல்ல மனசுக்காரி



திருமதி அமலி எட்வர்ட் - நாகமலை மதுரை

“வணக்கம் மேடம்”
“வணக்கம். வாங்க அம்மா என்றார் தலைமையாசிரியர் நிதியா.”
“உட்காருங்க. நீங்க மதுமதி அம்மா தானே?”
“ஆமாம்மா” என்ற ஒருவித பயம் தயக்கத்தோடு சொன்னார்.
“என்னம்மா? என்ன விசயம்? தைரியமா பேசுங்க.”
“அம்மா இன்னக்கி ஏதோ தோழிங்களுக்கு பரிசு வாங்கிக் கொடுக்கனுமாம். பரிசு வாங்க காசு இல்லம்மா. இத எங்க அம்மா வீட்டுல எனக்கு சீதனமா கொடுத்த வெள்ளி குத்துவிளப்பு. சின்ன விளக்குதாம்மா. இத கமலாங்ற பொண்ணுக்கிட்ட கொடுக்கச் சொன்னா. நீங்க கொடுத்துருங்க அம்மா” என்று வேதனையோடு சொன்னார். மதுமதி எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர். அங்கு படிக்கும் மாணவிகளில் முதல் இரண்டு இடங்களில் வரும் மாணவிகளை பள்ளிக் கட்டணம் இன்றி இந்தத் தனியார் பள்ளியில் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி சேர்ந்தவர்களில் மதுமதியும் ஒரு மாணவி. இப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளி என்பதால் கிறிஸ்மஸ் விழா அமர்களமாக இருக்கும்.

கிறிஸ்மஸ்க்கு ஒரு வாரம் முன்பு ஒவ்வொரு வகுப்பும் குலுக்கல் முறையில் பெயர்களை எடுக்க வேண்டும். அதை மிகவும் இரகசியமாக வைத்து கொள்ள வேண்டும். யாருடையபெயர் வந்திருக்கிறதோ அவர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கிறிஸ்மஸ் விழா அன்று அளித்து மகிழ்வார்கள். அன்பையும் மகிழ்வையும் பகிரும் விழாவாக அது இருக்கும். ஒன்பதாம் வகுப்பில் மதுமதிக்கு கமலாவின் பெயர் வந்தது. இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட கமலா ”சீ இருந்நிருந்து இந்த பிள்ளைக்கிட்டயா என் பெயர் போய் சேரனும். குப்பத்துல உள்ள இவ என்ன பரிசு கொடுக்க முடியும்னு” சொல்ல எல்லா பிள்ளைகளும் சிரித்தனர். இதைக் கேட்ட மதுமதி மிகவும் மனம் நொந்து அழுதுவிட்டாள். மறுநாள் முதல் பள்ளிக்கு வரவில்லை. இன்று இந்த குத்து விளக்கை அம்மாவிடம் கொடுத்தனுப்பி விட்டாள். நடந்த விசயத்தை மதுமதி அம்மா தலைமையாசிரியையிடம் சொல்ல அவர் மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தார்.

“அம்மா இந்த பரிசு இப்போதைக்கு என்னிடம் இருக்கட்டும். உங்களுக்கு சீதனமாக கொடுத்த இந்த குத்துவிளக்கு உங்கக்கிட்ட வந்து சேரும். குழந்தைகள் ஒருவருக்கொருவர் பரிசுகள் பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படு;த்திக் கொள்வார்கள். பிறரை மகிழ்விக்கும் பண்பிற்காகத்தான் இந்த நிகழ்;வை நிகழ்த்துகிறோம். உங்களையும் உங்கள் பெண்ணையும் கஷ்டப்படுத்திய மாணவிக்காக நான் மன்னிப்புப் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஐய்யோ அம்மா என்ன பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க. இந்த பள்ளிய பத்தி ரொம்ப பெருமையாத் தான் பேசுவா மதுமதி. ஆனால் சின்ன குழந்தைங்க தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க. நான் அவள கொண்டு போய் நீயே கொடுனு தான் சொன்னேன். அதுக்கு அவ “அந்த பொண்ணு என்ன பரிசுனே தெரியாமால், நான் கொடுக்கறத வாங்க மாட்டேனு சொல்லி விட்டால் எனக்கு அவமானமா போயிரும்னு” அழுதாள். அதனால தான் நான் எடுத்துட்டு வந்தேன்” என்றார்.

“சரிம்மா இந்தத் தவறை பிள்ளைகளுக்கு உணரவைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு நீங்க என்னை வந்து பார்த்து விபரம் சொன்னதுக்காக நன்றி. நீங்க சொல்லவில்லை என்றால் எனக்கு திருத்துவதற்கு வாய்ப்பில்லாம போயிருக்கும். மதுமதிக்கிட்ட நானும் பேசி சமாதானப் படுத்துறேன்.” என்றார்.

“இதுனால பள்ளிக்கு எதுவும் வராம போயிருவாளோன்னு பயமா இருந்துச்ச நீங்க பேசின எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி நானும் புரிய வைக்கிறேன். ரொம்ப நன்றிமா. நான் கிளம்புறேன். என்றார்.

ஒன்பதாம் வகுப்பு ஆசிரிரை கூப்பிட்டு ”இன்று உங்கள் வகுப்பிற்கு நான் செல்கிறேன். நீங்கள் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கள்” என்று கூறிவிட்டு வகுப்பிற்கு சென்றார் நித்யா.

“குட்மார்னிங் மேடம்.”
“குட்மார்னிங் உட்காருங்க. என்ன உங்க தோழிகளுக்கு பரிசுகள் வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்க்க “ஆமா மேடம்” என அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரத்தோடு சொன்னார்கள்.
“ஓகே! நம்ம அன்பின் பரிசை பரிமாறிக் கொள்வோம். ஆரம்பிக்கலாமா?”
“ஓகே மேடம்” என கத்தினர்.” சரி நான் ஒருவருடைய பெயரைக் கூப்பிடுவேன். அந்த மாணவி அவருக்கு எந்த தோழியின் பெயர் வந்தததோ அவளுக்கு பரிசையும் வாழ்த்தையும் தெரிவிக்கனும். பரிசு பெற்றுக் கொண்ட தோழி அவருடைய தோழிக்குக் கொடுக்கவேண்டும். இப்படி சங்கிலித்தொடராக போகனும் என சொல்லிவிட்டு “சிந்தியா” என்று ஒரு மாணவியின் பெயரைக் கூப்பிட்டார். பரிசுகள் கொடுப்பதும் வாங்குவதுமாக தொடர்ந்திட “மேடம் எனது தோழி பெயர் மதுமதி. அவள் வரலை மேடம்” என்றாள் ஒரு மாணவி. உடனே தலமையாசிரியை “மதுமதி பரிசை என்னிடம் கொடு” என்றார். பரிசை வாங்கிக் கொண்டவர் “மதுமதியின் தோழி கமலா” என்றார். கமலா ஒருவித தயக்கத்தோடு எழுந்தாள். மதுமதி அம்மா கொடுத்த பரிசை கமலாவிடம் நீட்ட கமலா அதிர்ச்சியோடு பார்க்க “மதுமதி அவங்க அம்மாகிட்ட இந்த பரிசை கொடுத்துனுப்பி உள்ளாள்.” என்றார். கமலா ஒரு வித கவலை வாங்கிக் கொண்டாள்..

பரிசுகள் அனைவரும் கொடுத்து முடித்து விட தலைமையாசிரியர் “ சரி பரிசுகள் அனைவரும் பிரித்துப் பாருங்களேன். எனக்கும் பரிசுகளை பார்க்க ஆசையாக இருக்கு” என்று கூற ஒவ்வொருவரும் மடமடவென பிரித்து “ஏய் சூப்பர்” “அழகா இருக்கு” மேடம் இங்க பருங்க எனக்கு வந்த பரிசை” என் ஒவ்வொருவரும் காட்ட, தலைமையாசிரியை கவனம் முழுவதும் கமலாவிடம் சென்றது. கமலா ஒருவித தயக்கத்தோடு பிரித்தப் பார்த்தாள். அவள் அந்த பரிசைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனாள். உடனே தலைமையாரியரை பார்த்தாள். உடனே தலைகவிழ்ந்தாள். கண்களிரிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“சரி மதுமதி பரிசை யார் கொண்டு அவளிடம் சேர்ப்பது” என்றார்.
உடனே அவளது தோழி “மேடம் அவ இனி பள்ளிக்கூடத்துகே வரமாட்டேனு சொல்லிட்டா” என்றாள்.
“எதுக்காக படிக்க வரலைனு சொன்னாள்?” என்று கேட்டவுடன் வகுப்பு முழுவதும் ஒருவித அமைதி காத்தனர்.
மீண்டும் மாணவிகளை பார்த்து என்ன காரணம்? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே? படிப்பிலும் குறை கூறமுடியாது. பின் எதுக்காக வரலை? ஏதோ காரணம் இருக்குனும். இந்த வகுப்பில ஏதோ நடச்சிருக்கு. சொல்லுங்க என்றார்.

கமலா மெதுவாக எழுந்தாள். கண்களில் கண்ணீர் வழிய “மேடம் நான் தான் காரணம்.” என்றாள். அவளை அருகில் அழைத்தார். பயம் கலந்த பார்வையோடு கண்ணீர் வழிய நின்றவளின் தோளை தட்டினார். உனக்குக் கிடைத்த பரிசு தான் இங்க எல்லாருடைய பரிசை விடவும் விலை உயர்ந்த பரிசு” என்றார். “மேடம் என்னை மன்னிச்சிருங்க மேடம் நான் பேசிய வார்த்தைகள் மதுமதியை மிகவும் மனம் நோக பண்ணியிருக்கும்” என நடந்த விசயத்தை வெளிப்படையாகப் பேசினாள். “ எப்ப நீ தவறை உணர்ந்துட்டியோ அப்பவே உனக்கு மன்னிப்பு கிடைச்சிருச்சு. இந்த குத்திவிளக்கு அவங்க அம்மாவுக்கு அவங்க வீட்டு சீதனமாக் கொடுத்ததாம். எவ்வளவு பெரிய பெருந்தன்மை பாரு அவங்க அம்மாவுக்கும் அவளுக்கும்” என்றார்.

“மேடம் இந்த குத்து விளக்கை நானே அவங்க வீட்டுக்குப் போய் கொடுத்துட்டு அவங்க அம்மாகிட்டேயும் மதுமதிக்கிட்டேயும் மன்னிப்பு கேட்கிறேன் மேடம்” என்றார். “வெரிகுட் அத அதத்தான் நான் எதிர்பார்த்தேன். கமலா நீயும் நல்ல மனசுக்காரி தான். தவற உணர்வதற்கும் ஒரு நல்ல மனசு வேனும். அதவிட மன்னிப்புக் கேட்பதற்கு ரொம்ப நல்ல மனசு வேனும். இப்ப நான் சந்தோசமா இருக்கேன்” என்றார்.

“மாணவிகளே இந்த விளையாட்டு உங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தவதற்கு தான். பரிசின் விலையை பார்க்காது அப்பரிசில் தெரியும் அன்பைப் பாருங்கள். சரி கமலா கூட மதுமதி வீட்டுக்கு யாராவது கூட போனீங்கன்னா நல்லாயிருக்கும் என்று சொன்னவுடன் நிறைய மாணவிகள் “நாங்களும் கூடப் போறோம்” என கைதூக்கினர். “எப்படியாவது நாங்கள் அவளை பள்ளிக்குக் கூட்டி வந்து விடுவோம்” என்று கூறினர். அவளது தோழி “நாளை அவளுக்கு பிறந்த நாள் ஏதாவது வாங்கி செல்வோம்” என்றாள்.

““மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே நான் கோடிட்டுத் தான் காட்டினேன். மிக அருமையாக புரிந்து கொண்டீர்கள். சந்தோசம். எல்லோருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.” என்றார்.
“தேங்யூ மேடம், உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் மேடம்” என்றனர்.

உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வு நிரம்பி வழிந்தது.