கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

உண்மையிலே!

மதுரை இளங்கவின்

“ஏம்பா, என்னோட ப்ரண்ட் சுமதியை கிறிஸ்மஸ்க்கு நம்ம வீட்டுக்கு வரச்சொல்லட்டுமாப்பா?” என்று ஆர்வமுடன் கேட்டாள் சீலி. “தாரளமாய் வரச் சொல்லும்மா! எத்தனையோ பேர் வரப் போறங்க, உன் ப்ரண்டும் வரட்டும்மா! என்றார் தந்தை ஸ்டீபன்.


merry christmas "யாருடீ வாரா, யாரு வாரங்க” என்றபடி நுழைந்தாள் தாய் பாக்கியம். “அவதான் நம்ப சீலியோட வந்து விளையாடுவாளே சுமதி, அடுத்த தெரு ராமசாமியோட மகள் சுமதி.. அவளைதான் கிறிஸ்மஸ்க்கு கூப்பிட்ராளாம் சீலி" என்றார் ஸ்டீபன். “ஏன்டீ, உனக்கு வேற பிள்ளைங்க கிடைக்கலையா? போயும் போயும் டீக்கடைக்காரன் மகதான் கிடைச்சாளா? நாம் ஸ்டேட்டஸ் என்ன, தரம் என்ன, தகுதி என்ன? அவளைக் கூப்பிறேங்கறியே? உங்கப்பா பெரிய பேங்க் மேனேஜர்" என்று கடுகடுத்தாள் பாக்கியம். "அதனாலென்ன, சுமதி, நம்ம சீலியோட ப்ரண்ட் தானே? என்றார் ஸ்டீபன் அமைதியாக..


“ப்ரண்டோ கரண்டொ,கிறிஸ்மஸ் அன்னைக்கு பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் வந்து போய்க்கிட்டு இருப்பாங்க. அந்த நேரத்திலே கிழிஞ்ச சட்டையோட அவள் வந்து நின்னா எப்படி இருக்கும்? என்றாள் பாக்கியம்.


“ஏய் பாக்கியம் இப்படியெல்லாம் பேசாதே! சுமதியும் நம்ம பிள்ளை மாதிரி தான். அவள் வரறது தப்பில்லை, யார் வந்தால் என்ன? சீலியோட ப்ரண்ட்ன்னு சொல்லு, அதை விட்டுவிட்டு இப்படி அநாகரிகமாய் பேசக்கூடாது." என்று கண்டித்தார் ஸ்டீபன் கோபமாக.


merry christmas நீங்க பெரிய மனிதர் மாதிரி பேசுவீங்க. எல்லாம் ஆண்டவர் தரமறிஞ்சு தான் உலகத்திலே வெச்சிருக்கார். அதுக்காக நாம் என்ன பண்றது? வீட்டிலே விருந்து அதுஇதுன்னு தடபுடலா இருக்கும் போது சுமதி வந்து பங்கறையா, தரித்திரம் மாதிரி நின்னா நல்லாவா இருக்கும். இதைச் சொன்னால் குதிக்கிறீங்களே! கிறிஸ்மஸ் அதுவுமாய் அவ வந்த இங்கே இருக்கணுமா? என்றாள் தாய்.


சுமதி நம்ம வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட வந்தாத்தான் நான் புது ட்ரெஸ் போடுவேன் என்றாள் சீலி. “கவலைப்படாதே சீலி! உன்னோட ப்ரண்டுக்கும் ஒரு ட்ரெஸ் எடுத்துத் தாரேன். நீ சந்தோசமாக் கிறிஸ்மஸ் கொண்டாடு" என்றார் ஸ்டீபன் சிரித்தபடி.


“இது நல்லா இருக்கு! ப்ரெண்டைக் கூப்பிடாதேன்னா, அவளுக்கும் இப்ப ட்ரெஸ் எடுக்கனுமா” என்று கடிந்தாள் பாக்கியம்.


"அதனாலென்ன? இயேசு பாலன் எல்லோருக்கும் தான் உலகத்திலே பிறந்தார். இதலே என்ன? வேறுபாடு? நாமும் பாகுபாடு பார்க்காமல் மற்றவங்களோட சந்தோசமாய் இருந்தால் தான் இயேசு பாலன் நம்ம வீட்லே பிறப்பார்”என்றார் ஸ்டீபன்.


“சுமதியை கூப்பிடறதுக்கும் அவளுக்கு ட்ரெஸ் எடுத்துக் குடுக்கிறதுக்கும் ரொம்ப தேங்களஸ் அப்பா! இப்பதான் நமக்கு உண்மையிலேயே இயேசு பாலன் வரப்போறார்” என்று சிரித்தாள் சீலி.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com