வாழ்த்து மடல் | அன்பின் வெளிப்பாடு | பிறப்பில் எளிமை | பகிர்வின் மகிழ்ச்சி | முகப்பு பக்கம் |
merry xmas

பகிர்வின் மகிழ்ச்சி

அரையாண்டு தேர்வு முடிந்து ஒரு நாள் கழிந்தது. 23ம் தேதி ஞாயிறு திருப்பலிக்கு சென்று திரும்பிய இம்மானுவேல் காலை சிற்றுண்டி அருந்திய பின் சன்னல் ஒரமாக உட்கார்ந்து தெருவில் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்டோ சத்தம் கேட்டு உற்றுப் பார்த்தான். பக்கத்து வீட்டுக்கு பீட்டரின் மாமா,அத்தை, பிள்ளைகள் வந்து இறங்கினார்கள். 'ஓ! கிறிஸ்மஸ்க்கு வந்து இருக்கிறார்கள் போலும் "என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.

இரண்டு வீடுகள் தள்ளி அவனுடன் பயிலும் பிரான்சிஸ் வீடு இருந்தது. பிரான்சிஸ் தனது வீட்டிற்கு அவன் சித்தப்பா,சித்தி, பிள்ளைகள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வருவார்கள் எனச் சொன்னது ஞாபகம் வந்தது. என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் அங்கும் ஓர் ஆட்டோ வந்து நிற்க, பிரான்சிஸ் வீட்டிற்கும் விருந்தினர்கள் வந்து இறங்கினார்கள்.

இம்மானுவேல் சலிப்புடன் ஹாலுக்கு வந்தான். அங்கு அப்பா செய்தித்தாளில் முழ்கி இருந்தார்.
''டாடி,டாடி நம்மவீட்டுக்கு யாருமே வருவதில்லை. ஓவ்வொரு தடவையும் நீ,அம்மா,நான் தான் கிறிஸ்மஸ் டீரீ, குடில் ஜோடித்து ஒவ்வொரு கிறிஸ்மஸ்ம் கொண்டாடுறோம். எனக்கு ரொம்பவும் போர் அடிக்கு"

'என்னடா செய்ய. உன் நண்பர்களுக்கு இருப்பதுப் போல உனக்கு அங்கிள், ஆண்ட்டி,சித்தி, சித்தப்பா என யாருமே இல்லையே? அதனாலே நமக்கு கிறிஸ்மஸ்க்கு விருந்தாளியாக யாரும் வருவதில்லை"
என சமாதானப் படுத்தினார். சிறுது நேரம் யோசனையில் ஆழ்ந்த இம்மானுவேல் 'எப்படி இந்த வருடம் மாறுபட்ட விதமாக கொண்டாடலாம்" என திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனுக்கு சகாய பாஸ்கர், அன்னமேரி, கிறிஸ்டோபர், லீயோனா, தேவசகாயம் போன்ற தனது வகுப்பில் படிக்கும் நண்பர்களின் நினைவு வந்தது. அவர்கள் எல்லாம் அருட் சகோதரிகள் நடத்தும் "சகாய அன்னை அனாதை ஆசிரமத்தில்" தங்கிக் கொண்டு தன்னுடைய வகுப்பில் படிப்பது ஞாபகத்திற்கு வந்தது. அவர்களுக்கெல்லாம் கிறிஸ்மஸ்க்கு யார் புதுசட்டை, உடைகள் வாங்கிக் கொடுப்பார்கள்? எங்கே போவார்கள்? என்ற கேள்வி அவன் மனதில் காட்டாறு போல் ஓடிக் கொண்டு இருந்தது.
'டாடி, டாடி எனக்கு ஒரு ஐடியா தோணுது. நம்ம ஏன் என் பிரண்ட்ஸ்களைக் கூட்டி கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாது?"
'எந்த பிரண்ட்ஸ்டா?"
அதான் அப்பா சகாய அன்னை ஆசிரமத்திலுள்ள என் பிரண்ட்ஸ். அவங்க எல்லாம் கிறிஸ்மஸ்க்கு எங்கே போவாங்க? புது டிரஸ் யார் வாங்கிக் கொடுப்பா?

'உம் ...நல்ல ஐடியா தான் ... சரி வா அந்த சிஸ்டரைப் போய் பார்த்து பேசலாம். புறப்படு...இந்த வருடம் புது மாதிரியாக கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.... வா..."

24ம் தேதி இரவு இம்மனுவேலும், அவனது நண்பர்களும் அவனுடைய அப்பா வாங்கிக் கொடுத்த புது உடைகளையே அணிந்து கொண்டு நள்ளிரவு திருப்பலிக்கு போக தயாரானர். வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் அங்கும், இங்கும் ஓடி கிறிஸ்மஸ் மரம், குடில் என எல்லாம் சிறப்பாக அலங்காரம் செய்தார்கள். அவனின் அம்மா பலவிதமான பலகாரங்கள் செய்வதில் மும்மரமாக இருந்தார்கள். இம்மானுவேல் நண்பர்களை தாங்கள் அனாதை என்பதை மறக்கச்செய்து எல்லோரும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் போல் உணரச் செய்தான். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி! நள்ளிரவு திருப்பலியில் எல்லோரும் கலந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்த அருட்சகோதரிகள் அகமகிழ்ந்தனர்.

திருப்பலியில் 'இயேசு பாலன் நம்மிடையே பிறக்கக் காரணம் அவர் நம்மேல் கொண்ட அன்பு தான். அந்த அன்பையும்ரூபவ் நமது செல்வத்தையும் இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது தான் சிறந்த நடைமுறை கிறிஸ்மஸ் கொண்டாட்டம். இதுதான் இன்றைய நற்செய்தியின் கருத்து" என குருவானவர் மொழிந்தார். இம்மனுவேலின் புதிய எண்ணத்தை தனது மனதுக்குள் புகழ்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தார் அவனது தந்தை...

அன்பின் மடல் 2007


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com