ஊர்கள் தோறும் விழா எடுப்போம்

புனித சவேரியார் பிறந்த 500-வது ஆண்டு நிறைவு

தகுதியற்றவர்களையெல்லாம் தலைவர்களாக்கி விழா எடுப்பது இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு கசப்பான உண்மை. ஆனால் தகுதியுள்ள உண்மைப் பணியாளர்கள் பலரை இந்திய மக்கள் எளிதாக மறந்து விடுகின்றனர். அந்த வரிசையில் புனித சவேரியாரும் ஒருவர்.

தலைவராக வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை சவேரியாருக்கும் இருந்தது. பாரீஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த புனித பார்பாரா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியபோதுதான் புனித இஞ்ஞாசியார் மூலமாக ஆண்டவர் இயேசு அவரை ஆட்கொண்டார். அதன் விளைவாக அவர் பட்டம் பதவி புகழ் செல்வம் குடும்பம் அனைத்தையும் துறந்துவிட்டு ஏழை எளியவர்கள் வாழும் இந்திய நாட்டில் பணிபுரிய பேராவலுடன் வந்தார். கோவா மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தொண்டு செய்தார். பிள்ளர் குமரிமுனைக் கடலோரப் பகுதிகளிலும், அருகிலிருந்து உள்நாட்டு ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்து கிறிஸ்தவ விசுவாசத்தை மக்களுக்கு வழங்கினார்.

ஆன்மீக பணியே புனித சவேரியாரின் முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், அவர் சழூக முன்னேற்ற பணியிலும் ஆர்வத்தோடு உழைத்தார். இதில் அவர் சாதி, மத, இன வேறுபாடு காட்டவில்லை. ஊர்கள்தோறும் பலவிதமான தீமைகளைச் செய்து மக்களைக் கொடுமைப்படுத்திய ஊர்த் தலவர்களையும், போர்த்துக்கீசிய வீரர்களையும், கோவாவிலிருந்த போர்த்துக்கீசிய ஆளுநரின் அனுமதியோடு வன்மையாகக் கண்டித்தார். தண்டனையும் வழங்கினார்.

கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுக்காக ஊர்கள் தோறும் முதல் குடிசைக் கோவில்களை அமைத்தார். குழந்தைகள் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலேயே முறையான முதல் பள்ளிக்கூடங்களை உருவாக்கியவர் புனித சவேரியாரே! மணப்பாடு ஊரிலுள்ள பாறைக் குகையைத் தனது உறைவிடமாகத் தேர்ந்து கொண்டு அங்கு இரவும் பகலும் இறைவனோடு இருந்தார்ää தியானம் செய்தார்,செபித்தார்,பலிபூசையும் நிறைவேற்றினார். அங்கு தான் அவர் உண்பதும், உறங்குவதும்.

ஆண்டவரின் அற்புதம் செய்யும் ஆற்றலைப் பெற்றவர் சவேரியார். தெய்வ பலத்தைப் பெற்ற புனித சவேரியாரின் பூதவுடலும் அழியாப் பலம் பெற்று இன்று கோவாவில் உள்ளது. இந்த மாபெரும் புனித சவேரியார் 1506-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஸ்பெயின் நாட்டில் சேவியர் என்ற கோட்டையில் பிரபு குலத்தில் பிறந்தார். இவ்வாண்டு ஏப்ரல்7-ம் தேதி அவரது 500 -வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். இந்திய மக்களுக்காக அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்காகத் தன்னையே தியாகம் செய்து அரும் பணிகளாற்றிய புனித பிரான்சிஸ்கு சவேரியாரை இந்திய மக்கள் மறக்கலாமா?

தமிழகத்தில் அன்று பணிபுரிந்த புனிதரும், இன்று இந்திய நாட்டின் பாதுகாவலருமாக விளங்கும் புனித சவேரியாரின் 500-வது பிறந்த நாளை ஆண்டு தோறும் முழுவதும் நம் பங்குகளிலும், ஊர்களிலும் கொண்டாடி மகிழ்வோம்.

அவர் திருத்தலங்களுக்கு திருப்பயணம் செல்வோம்.

நன்றி ஞானதூதன் ஏப்ரல் 2006