எங்கே நிம்மதி?

திருமதி.அருள்சீலி அந்தோணி சென்னை.

where is peace?
எங்கே நிம்மதி
நண்பா!
ஒரு சில நொடிகள்
உயிருக்கு உயிராக உரு கொடுத்து
திருவாக பெற்றெடுத்துப் பெயர் சூட்டி
அமுதோடு பாசத்தையும் சேர்த்தூட்டி
தலைவாரி பூச்சூட்டி அறிவொளிக்கு வழிகாட்டி!
ஆளுமைக்கு திறன் கூட்டி
விரலை பற்றி நடக்கையிலே- பாரதியின் பாடலோடு
இயல்- இசை இன்ப தேனூட்டி
ஆளாக்கி வாழ்வளித்த அருமை தாய் எங்கே? தந்தை எங்கே?
பாசத்தை பகிர்ந்தளித்த அன்பு நிறை உறவுகளும்
கல்வியெனும் வளர்ப்பினிலே வளர்த் தெடுத்த ஆசான்களும்
நகமும் சதையுமாக நட்புடன்  வாழ்ந்தோரும்
சென்றடைந்த இடம் எங்கே? எங்கே?
என்ற
நினைவலைகள் மோதியதால்
நெஞ்சடைத்து சோர்கையிலே
கல்லறையில் சிலுவையாக முகம் காட்டியவர் நிற்கின்றார்.
தோழா!
நிம்மதியும் சமரசமும் உலாவரும்
கல்லறையில் நின்று ஏங்குகின்றேன்!
கடந்த காலம் நினைவு கூர்கின்றேன்.
அவர்களோடு இருந்த காலம்
நிகழ்காலம் ஆகாதா?
ஆகாது
என்ற உண்மையினை ஏற்று
'விண்ணகம்" என்ற ஒரு நிறைவாழ்வு இருப்பதனை
உணர்ந்து மனம் அமைதியுற
விரைகின்றேன் இல்லம் நோக்கி
இனி நிம்மதியை நானும் காண்பேன்!
என்ற நினைவலைகளை தாங்கி
நண்பா! பதிவு செய்திடுவாய்.