விவிலியம் ஒரு பொக்கிஷம்

எண்ணற்ற சிந்தனை தீபங்களை ஏற்றிய திருவிழா மண்டபமாகவே விவிலியம் ஒளிர்கின்றது. இறையரசும் யூத அரசும் இங்கு சிந்திக்கப்படுகின்றன. பரிசேயர் பண்புகளும் சீடர்களின் குணங்களும் குறிக்கப்படுகின்றன. முன்னது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை பின்னது நல்ல நிலத்தில் விழுந்த விதை. இலட்சியங்களும் எச்சரிக்கைகளும் சித்திரம் பெறுகின்றன. பாத்திரங்கள் அனைத்துமே இறைஞானம் பெறவேண்டி திசைகாட்டுகின்றன்

அன்பின் வழிகாட்டும் இயேசு..
அடிமையென தாழ்ந்த மரியாள்..
பொறுமையின் வடிவமான சூசை..
கோபத்தின் தீப்பிழம்பாக ஏரோது..
ஆத்திரத்தின் உருவான அன்னாஸ்..
குழப்பமடைந்த பிலாத்து..
மன்ந்திருந்திய சீமோன்..
முத்தமிட்ட யூதாஸ்..
மெசியாவை அறிவித்த சமாரியப்பெண்..
என பாத்திரங்கள் அனைத்துமே மானுடபண்பின் சிந்தனை விருந்துகளாகின்றன.

ஞானியரின் காணிக்கை, ஏழைப்பெண்ணின் இரு செப்புகாசு, ஐந்து கன்னியர் ஏற்றிய விளக்குகள், வீட்டைப்பெருக்கி கண்டுபிடித்தவெள்ளிகாசு, போன்ற வாழ்வியல் சிந்தனைகளின் குறியீடுகளாக ஒருபுறம்..
சாத்தான் அப்பமாக காட்டிய கல், அருளப்பரின் தலை, சாரமற்ற உப்பு, சீமோனின் வாள் போன்ற குறியீடுகள் சுரக்கும் எச்சரிக்கை சிந்தனைகள் மறுபுறம்.
விவிலியம் கருத்துகளின் களஞ்சியம்.

ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு -- அழிப்பதற்கல்ல நிறை வேற்றுவதற்கே வந்தேன் -- நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் -- பிதாவே இவர்களை மன்னியும் -- என் நுகம் இனிது என் சுமை எளிது என்ற ஞான மொழிகள் ஆன்மாவிற்கு அமுதூட்டும்..

சமாதானத்தையல்ல வாளையே அனுப்ப வந்தேன் -- முதலானோர் பலர் கடைசியாவோர் உயிரை கண்டடைந்தவன் அதை இழந்துவிடுவான் -- மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன் என்று நம்மை விவாதங்களுக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகளும் உள்ளன..

விவிலியத்தில் மறக்கமுடியாத பெண் மாந்தரையும் தரிசிக்கின்றோம் ~ வார்த்தையின் படியே ஆகட்டும் என்ற புதிய ஏவாள், இயேசுவின் காலடியில் அமர்ந்து மௌனத்தை வாசித்த மரியா, பாதங்களை பரிமள தைலத்தால் கழுவிய மரியாள், மெசியாவை அறிவித்த சமாரியப்பெண், நீதிமான் என்றுரைத்த பிலத்துவின் மனைவி பெண்ணிய பெருமைகளைப் பேசுகின்றன.

திராட்சை கொடியில் கிளைத்த கிளை, விளக்கு தண்டின் மேல் வைத்த விளக்கு, ஆயன் குரல் கேட்ட ஆடு, ஊசியின் காதில் நுழைந்த ஓட்டகம், பாறைமீது கட்டிய வீடு என்பது விவிலிய கருத்தோட்டங்கள்.
மற்றும் …
ஏவாள் மரத்திலிருந்து பறித்தகனி, மரியாளை சிலுவை மரத்தின் அடியில் நிற்கவைத்தது. ஆதாம் உண்ட கனியோ இயேசுவை சிலுவையில் தொங்க வைத்து ஆதி மனிதன் கனி உண்டபொழுதே இயேசுகிறிஸ்துவின் மரணம் நிச்சயிக்கப்பட்டது. தன்னை படைத்த கடவுளுக்கு ஆதி பெற்றோர் செலுத்திய முதல் காணிக்கை அது தான். இரண்டு மாடபுற கொடுத்து மீட்ட குழந்தை. இயேசுவை முப்பது வெள்ளிகாசுகளுக்கு விற்ற நிகழ்வு நம்மை நெகிழ்வடைய செய்கிறது.

பெரும்பாடு உள்ள பெண் இயேசுவின் ஆடையை தொட்டு குணமானாள். அந்த ஆடையை சிலுவைமரத்தின் அடியில் சீட்டு குலுக்கிபோட்டு எடுத்துக்கொண்டனர்.
வானத்து பறவைகளும் வயல்,வெளிமலர்களும் காண்பித்த இயேசு அத்திமரத்தை சபிக்கும் பொழுதும், ஆலயத்தில் பிரவேசித்து அதிரடியாய் வியாபாரிகளை விரட்டிய பொழுதும் வாழக்கை அலசல்களின் பெருஞ்சுரங்கமாக தெரிகின்றது.
யெருசலேம் நகருக்குள் கழுதை குட்டியின் மீது ஊர்வலமாக உள்ளே சென்றவர்~ சிலுவையை சுமந்து நகருக்கு வெளியே வந்து கல்வாரியை நோக்கிய நகர்வுகள் நம் நெஞ்சை அடைக்கன்றது.

இரவு உணவு ~ பாதம் கழுவுதல் ~ கெத்சமேனி தேட்டத்தில் கலங்கிய இயேசு~ தூங்கியசீடர்கள் ~ பந்தியில் கழுவிய கால்களின் ஈரம் காய்வதற்குள் எதிரணியில் நின்ற யூதாஸ் ~ யூதவீரர்களுடனும் ரோம வீரர்களுடனும் வாள்களோடும் தடிகளுடனும் வந்தான் ஆனால் அவன் எடுத்துக்கொண்ட ஆயுதம் முத்தம்!

அன்னாஸின் ஆத்திரம் ~ கைப்பாஸின் கிழிந்த மேலாடை ~ எரோதின் ஏளனம் ~ பிலாத்துவின் தீர்ப்பு ~ சிவப்பு ஆடை தலையில் முள்முடி ~ பரபாஸின் விடுதலை ~ முடிவில் இயேசு சிலுவையில் ~ நம் பாவங்களின் உருவகம்.

பகைவனுக்காக மன்றாட்டு, கள்ளனுக்கு கருணை, தாயிடம் பாசம், உயிருள்ள தண்ணீரின் தாகம், ஆவியை தந்தையிடம் ஒப்படைத்து, உயிர்ப்பை உண்மையாக்கினார். இத்தனை நிகழ்வுகளும் நம்மை எடுத்து செல்கிறது.

புலன் சார்ந்த மனத்தளவிலிருந்து ஆன்மதளத்திற்கு உயிர்ப்பு என்பது அகத்தில் விரியும் அனுபவமாக விளக்கப்பட்டாலும் அது அகத்தின் அகத்தில் விரிவது. அதன் விரிவு எல்லையற்றது விசுவாசத்தால் இறையியலையும் வாழ்வியலையும் ஒற்றைதளமாக்கும் உன்னதம் நிகழ்கிறது. ஆன்மீகம் பேணுவோர்க்கு விவிலிய சிந்தனை ஒரு இனிய பற்றுக்கோடு.
விவிலியம் ஒரு ஆன்மீக பொக்கிஷம்.

அ.அல்போன்ஸ் - பெங்களுர்.