விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

பீகார் மாநிலம் பாகலூர் என்ற குக்கிராமம். இங்கே இருக்கக்கூடிய மக்கள் நிலமில்லாத பரம ஏழைகள். வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் ஐம்பது கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கக்கூடிய பக்கத்து ஊருக்குத்தான் செல்ல வேண்டும். இதனால் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் பக்கத்துக்கு ஊருக்குச் செல்வதற்கான இன்னொரு வழியும் இருந்தது. அது இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் மலைக்கு உள்ளே இருந்த குறுகலான பாதை. சிலநேரங்களில் இதன்வழியாக போகமுனைவோர் உடலில் சிராப்புகளோடும், காயங்களோடு தான் திரும்பிவருவர். அரசாங்கத்திடம் ஊர் மக்கள் மலைப்பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் கேட்கப்படாமலே போனது. இதனால் ஊர்மக்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

Dashrath Manjhi-Dashrath Manjhiஇவ்வேளையில் அவ்வூரில் இருந்த தசரத் மான்ஜி என்ற மனிதன் ஒவ்வொருநாளும் வேலைக்குச் சென்றுவிட்டு, உடம்பில் காயங்களோடும், சிராப்புகளோடும் வந்த தன்னுடைய மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து, “ஏன் நாமே இந்த மலையை உடைத்து பாதையை உண்டாக்கக்கூடாது” என்று சிந்தித்தான். ஊர் மக்களுக்காக அல்லாது தன்னுடைய மனைவிக்காகவே மலையில் முதலில் பாதையமைக்க முடிவெடுத்தான்.

1960 ஆம் ஆண்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினான். அப்போது ஊர் மக்களெல்லாம் அவனது செயலைப் பார்த்துக் கேலிசெய்தனர். ஆனால் அவன் தான் எடுத்த முயற்சியில் விடாமுயற்சியோடு உழைத்தான். இதற்கிடையில் ஒருநாள் அவனுடைய மனைவி மலைப்பாதையில் சென்றபோது ஒரு பாறாங்கல் அவள்மீது விழுந்து, அந்த இடத்திலே அவள் இறந்துபோனாள். “யாருக்காக இந்த மலையை உடைக்க ஆரம்பித்தோமோ அவளே இறந்துவிட்டாளே” என்று அவன் மனம்வருந்தி அழுதான்.

ஆனால் தான்கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்ததால் மலையை உடைத்து, பாதை அமைக்கும் வேளையில் மும்முரமாக இறங்கினான். அவனுடைய இடைவிடாத முயற்சியின் பலனால் 1982 ஆம் ஆம் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் 30 அடி அகலமுள்ள ஒரு பாதை உருவானது. தனது மனைவிக்காக தொடங்கிய முயற்சி ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படுவதை எண்ணி அவன் மிகவும் சந்தோசப்பட்டான். மக்களும் தஷ்ரத் மஞ்சி என்ற அந்த மனிதனின் செயலை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தனர். விடாமுயற்சியோடு செயல்படும்போது எப்படிப்பட்ட காரியமும் சாத்தியப்படும் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விடாமுயற்சியோடு ஜெபித்தால், இறைவனின் வேண்டினால் அவர் நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்பதை ‘கைம்பெண்ணும், நேர்மையற்ற நடுவரும்’ என்ற உவமையின் வாயிலாக அழகுபட எடுத்துக் கூறுகின்றார். உவமையில் வரும் நடுவர் கடவுளுக்கும் அஞ்சாதவர், மக்களையும் மதிக்காதவர். அப்படிப்பட்ட நடுவரே, கைம்பெண்ணின் விடாமுயற்சியால் - நச்சரிப்பால் - அவருக்கு தீர்ப்பு வழங்கினார் என்று சொன்னால், கடவுள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை நோக்கி அல்லும், பகலும் மன்றாடும்போது அதற்கு செவிசாக்காமல் போவாரோ? என்கிறார் இயேசு.

நாம் ஒவ்வொரும் இடைவிடாது, தொடர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக இருகின்றது. ஆனால் பலநேரங்களில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இறைவனின் ஜெபித்துவிட்டு, ‘கடவுள் என்னுடைய ஜெபத்தை கேட்கவில்லை’ என்று வேதனைப்படுகின்றோம். தானியேல் புத்தகம் 6:16 ல் வாசிக்கின்றோம், “நீ இடைவிடாது வழிபடும் கடவுள் உன்னை விடுவிப்பாராக” என்று. 1 தெச 5:17 ல் “இடைவிடாது இறைவனிடம் மன்றாடுங்கள்” என்று படிக்கின்றோம்.

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அதன் வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
“கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் இவையே வெற்றிக்கு அடிப்படை” - கார்லைஸ்