மீட்பின் முதல் பயணம்..

running to Egypt
மீட்பின் முதல் பயணம்..
இன்று நினைத்தாலும்
இதயம் கனக்கிறது

கிறிஸ்து
யுக உறக்கத்தை கலைக்க
சுடச்சுட வந்த சூரிய விளக்கு

ஏரோது சிற்றரசன்
ஆவன் நாட்டில் அந்தகார ஆட்சி
அகங்காரத்தின் ஆட்சி

ஏரோது ஒரு எரிமலை
கலக்கம் அவன் உலகம்
கொலை அவனது கலை

ஞானியர்
திரும்பிவராததை கண்டு
எரிமலையாய் வெடித்தான்
மரணவேடன்               

மழலையின் தலையை கொய்துவர
வெறிகெண்டு அறிவித்தான்

கைகளில் வாள்பிடித்து
கண்களில் பொறிபறக்க
யூதவீரர் புறப்பட்டனர்

மெசியாவின் கதை முடிந்ததென்று
குதுகலித்தான் ஏரோது
ஊரே உறங்கியது
மரியா மட்டும்

உறங்காது விழித்திருந்தாள்
எழுந்து செல் என
சூசை கனவில் எச்சரிக்கப்பட்டார்

சந்தன மேனி சுந்தரவதனம்
குழந்தையை தாய் மரி
தழுவிக்கொண்டாள்
கட்டியணைத்து கண்ணீர் வடித்து
உடனடியாய் கிளம்பி

இரவின் இருளை
போர்வையாய் கொண்டு
ஓடினாள் சூசையுடன்

வான் நட்சத்திரம்
விளக்கேந்தி வழிகாட்ட
அன்னையின் பொன்மேனி
வியர்க்க
சூசை இதயம்
துடிக்க
மரியாள் தோள்களில்
உறங்கிக் கொண்டிருந்தது
ஞானம்

புதுவித ஊர்வலம்
மழலையை ஏந்தி மாதா ஒடுகின்றாள்
அன்னையின் கால்கள்
என்ன பாடுபட்டிருக்கும்?
பெத்லேகமை கடப்பதென்றால்
காற்றின் கால்கள் கூட
சுளுக்கிக்கொள்ளும் 
பாதுகை இல்லாத பாதங்களேடு
நடந்து வந்த மரியே
உன் கால்களில் ஏதேனும்
காயமுண்டானால்
எங்கள் பாவமே காரணம்

ஏரோதின் ஆணையால்
பலநூறு குழந்தைகள்
பச்சை ரத்தம் பரிமாறினார்கள்
மழலைகளின் ரத்தாபிஷேகத்தில்
பட்டாபிஷேகம்
சூடிக்கொண்டான் ஏரோது.

துள்ளி எழுந்த பகை
துரத்திவந்தது

எதிரிகளின் துரத்தல்-
ஆகாயத்தை அழிப்பதற்கான
தூசிகளின் துரத்தல்

அருவியென நீர் பொழிய
மழலையை அணைத்து
அச்சமும் மயக்கமும்
அணிஅணியாய் தொடர
ஓடினாள் மரியாள்!

வழியோர மரங்களே
இலையை போர்வையாய்
குழந்தைக்கு போர்த்துங்கள்

சன்னம் சன்னமாய் கூவும்
தென்னங்குயில்களே
உங்கள் பாட்டை நிறுத்துங்கள்
குழந்தை கொஞ்சம் தூங்கட்டும்

அன்னை வருகின்றாள்
வழிவிடு வாடைக்காற்றே

மரியின் கண்கள் வழியைப்பார்க்க
ஒளிவிடு வான்நிலவே
ராட்சச ராத்திரியில்
யாராவது கைகளில்
தீபம் ஏற்றுங்களேன்

ஆவியின்கரங்கள்
மரியை உசுப்பியது

இருளைத் துரத்திக்கொண்டு
ஓடினாள்

உள்ளுருக
உயிர் உருக ஓடினாள்
இயேசுவை ஏந்தி

அன்றே தொங்கியது
மீட்பின் முதல் பயணம்

வெளிச்சத்தின் விலாசம்
எகிப்தில் வந்து நின்றது

அம்மா
குழந்தையை
தொட்டில் ஒன்று கட்டி
தாய்ப்பால் மணக்கும்
தாலட்டுப் பாடி தூங்க வை

நெற்றி வேர்வையை
ஒற்றிஎடுத்துவிட்டு
நீயும் சற்று ஒய்வெடு.
run2Egypt
 
அல்போன்ஸ் - பெங்களுர்