இலங்கை கிளாலி
புனித பெரிய யாகப்பர் திருத்தலம்

சந்தியாகு மாயோர் (யாகப்பர்) அம்மானை

17 ஆம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலும் (இலங்கையை போர்த்துக்கீசர் ஆட்சி செய்த காலத்தில்) அதன்பின்னரும் கத்தோலிக்க் தமிழ் இலக்கியக் கவிதை நூல்கள் பல ஆக்கப்பெற்றன. அக்காலத்தில் எழுதப்பெற்ற சமய சம்பந்தமான கீர்த்தனைகள், நாடகங்கள் முதலியன அப்போதைய நிலைபரங்களுக்கேற்ப, அச்சுவாகனம் ஏறாமலும், பிற்காலத்தில் கிடைக்கப் பெறாதவையுமாகிவிட்டன.

ஆயினும் சந்தியாகு மாயோர் அம்மானை, ஞானப்பள்ளு, திருச்செல்வர் காவியம், திருச்செல்வர் அம்மானை ஆகிய நான்கு இலக்கிய நூல்களும் பிற்காலத்தவருக்குக் கிடைக்கப் பெற்று அச்சேற்றப்பட்டன.

மேற்கூறிய நான்கு நூல்களுள் முதலாவதாகிய சந்தியாகு மாயோர் அம்மானை, அதன் பொதுப் பாயிரத்தில் கூறப்பட்டுள்ளபடி, தெல்லிப்பளையைச் சேர்ந்த பேதுரு புலவர் அவர்களால் 1647 ஆம் ஆண்டு பிற்கூற்றில் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இயேசு சபைக் குருக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெல்லிப்பளையை நடுநிலையமாகக் கொண்டு, அங்கு சம்பேதுரு பாவிலு ஆலயத்தைக்கட்டி சமயப்பணியாற்றி வந்தனர். மனந்திரும்பிக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியவர்களுள் ஒருவராகிய பேதுரு புலவர் குறித்த காலத்தில் தெல்லிப்பளையில் சமயத் திருப்பணியாற்றிய சுவாங்கறுவாலு சுவாமியாருடைய வழிகாட்டுதலிலும், மதுரையில் இருந்து கிடைக்கப்பெற்ற அகவற்பாக்களின் துணை கொண்டும் சந்தியாகு மாயோர் அம்மானையை இயற்றினார்.

lankan James1இயேசுசபைக் குருமார் பச்சிலைப்பள்ளி பற்றில் உள்ள கிளாலி என்னும் கிராமத்திலும் திருமறைப் பணியாற்றி, அங்கு அப்போஸ்தலரான புனித பெரிய யாகப்பர் ஆலயத்தைக் கட்டுவித்தனர். அக்காலத்தில் அவ்வாலயத்துக்கு திருவிழாக் கொண்டாட பக்தர்கள் ஆண்டுதோறும் பல ஊர்களில் இருந்தும் பெருமளவில் சென்றனர். குறிப்பாக அவர்களது நலன் கருதி இந்த சந்தியாகுமாயோர் அம்மானை இயற்றப்பெற்ற தென்பதை புலவர் அவர்களே நூலில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட இந்த புனித ஆலயத்தில் அமரர் பேதுறுப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளையும் 1975 இல் இருந்து உள்ளுர் இடம்பெயர்வு வரை (1996 வரை) மூப்பராக இருந்து ஆண்டு தோறும் திருவிழாக் கொண்டாட்டங்களை திறம்பட நடத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Old kilaay James church

kilaay James church inside

Biship at Kilaaly church

Jemas car

சந்தியாகுமாயோரெனப் பெயர் வழங்கும் அர்ச். யாகப்பர் அம்மானையின் சிறப்புப் பாயிரத்தில் பாடல் பெற்ற திருத்தலமான கிளாலி புனித பெரிய யாகப்பர் ஆலயத்தைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது.

........... வாம்பரிமேலேறி மகிமைச்சுவடணிந்து
  நாம்பணியநீதி நடத்து சந்தியாகுவுக்கு
  எச்சரிக்கையாக விலங்கிய யாழ்ப்பாணமதில்
  பச்சிலைப்பள்ளி யெனும் பற்றிற்கிழாலியிலே
  
கொம்பாஞ்யதேயேசுக் கூட்டத்திலுள்ளவர்கள் நம்பிச்சமைத்துவைத்த நல்லாலயத்திருந்து ஆருந்தமைத்தேடி அஞ்சலிக்க வாறவர்க்குத் தேறுமனந்தநவஞ் சேய்தேயிருப்பது மெய்...........

இத்திருத் தலம் கிளாலியின் கடற்கரையோரத்து வயல் வெளியில் அமைந்து காணப்படுகின்றது. அங்கு வழிபட்டோர் பலர் பல புதுமைகளை அனுபவித்து வருகின்றனர். இத்திருத்தலத்தில் ஆடி மாதம் 25ம், 26ம் திகதிகளில் திருவிழா நடைபெறுவது வழமையாகும். இங்கு தேர் பவனிவரும் காட்சியோ கண்களிற்கு அற்புதமானது. அத்துடன் இவ்வூரில் மேலும் ஐந்து ஆலயங்கள் அருகருகாக அமைந்து காணப்படும் தன்மை, கிளாலி ஓர் புண்ணிய பூமியான திகழ்ந்தது என்பதற்கு சான்று பகர்கின்றது.

எத்தனையோ இன்னல்களுக்கு அப்பால் அதாவது 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவத்தினரின் அனுமதியுடன் 2011 சித்திரை 10ம் திகதி அன்று மேன்மைமிகு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள், மிருசுவில் பங்குத்தந்தை பத்திநாதர் அடிகள் மற்றும் 25 - 35 பக்தர்கள் இப்பாடல் பெற்ற திருத்தலமான கிளாலி புனித பெரிய யாகப்பர் ஆலயத்தில் காணாமல் போய்விட்ட சுருவங்களுக்கு பதிலாக புதிய சுருவங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, உரிய இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

New  kilaay James church

kilaay James church inside

Biship at Kilaaly church

Jemas car

புனித யாகப்பரின் திருவருளால் 30ம் திகதி ஆடி மாதம் 2011 அடிப்படை வசதிகளுடன் மிகவும் எளிடையான முறையில், மக்கள் மீள்குடியேற வேண்டி மீண்டும் அதாவது 17 ஆண்டுகளின் பின் திருவுலாக் கண்டது இந்தக் கிளாலி.

பக்தர்களின் விசுவாசத்திற்கு புனித யாகப்பர் இரங்கினாரோ! அதன்படி இம்முறை கிளாலி மக்கள் மீள்குடியேறியுள்ளனர். அவர்களும் சேர்ந்து 2012 ஆடி விழாவை கொண்டாடி மகிழ காத்திருக்கின்றனர்.

நல் வாழ்வு தரும் புனித யாகப்பரே நன்றி.

Kalyani Balathas Kilaay-Srilanka.