ஆண்டின் 17 ஆம் ஞாயிறு

முதல் வாசகம்: 1அரசர் 3:5,7-12

அந்நாட்களில் கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! " என்று கடவுள் கேட்டார். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடைளே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்? " என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீத்p வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.

இரண்டாம் வாசகம் உரோமையர் 8:28-30

சகோதர சகோதரிகளே, கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்: அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்: தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்: தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

நற்செய்தி:மத்தேயு 13:44-52

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். "வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்: கெட்டவற்றை வெளியே எறிவர். " இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்: பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? " என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம் " என்றார்கள். பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் " என்று அவர்களிடம் கூறினார்.