தவக்காலத்தின் முதல் ஞாயிறு

முதலாம் வாசகம் தொ.நூ. 2:7-9, 3:1-7

ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார் ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது. "பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்." "ஆனால் "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் " என்று கடவுள் சொன்னார்," என்றாள்." "பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்:" "ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்"" என்றது." அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

இரண்டாம் வாசகம் உரோமை. 5:12-19

சகோதர சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பவரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

நற்செய்தி மத் 4:1-11

அக்காலத்தில் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, " நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டடையிடும்" " என்றான். அவர் மறுமொழியாக, " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் " என மறைநூலில் எழுதியுள்ளதே " என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்: " கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் " என்று மறைநூலில் எழுதியுள்ளது " என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், " 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் " எனவும் எழுதியுள்ளதே " என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், " நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் " என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் " என்றும் மறைநூலில் எழுதியுள்ளது " என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.