பாசமலர்கள்

" சகல புனிதர்கள் மேல் நிலைப்பள்ளி " யில் வகுப்புகள் முடியும்  நேரம். ஒரு புதிய கார் அதன் வளாகத்தில் வந்து நின்றது. புத்தம்  புதிய கார். இன்னும் பதிவு எண் கூட வாங்கவில்லை. அதிலிருந்து ஒருவர் இறங்கினார். சுற்றும் முற்றும் பார்த்தார். மாணவமாணவிகள் கடலலைகள் போல் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். தனது மகனை அவரது கண்கள் ஆவலாகத் தேடின. தற்செயலாக திரும்பிய அவர் தனது காரை ஒரு பையன் முறைத்து பார்த்த வண்ணம் இதை சுற்றி வந்தான். ஒரு தடவை அல்ல, பல தடவை உள்ளே எட்டிப் பார்த்தான். தொட்டுப் பார்த்தான்.

new carஅவர் அவனை நோக்கி ' என்ன தம்பி பார்க்கிறாய்? இதை விலைக்கு வாங்க நோட்டம் போடுகிறாயா? " என வினாவினார். "ஆமாம் அங்கிள் இது உங்களுக்கு யார் கொடுத்தார்கள்? "

"இது பரிசாக எனக்கு கிடைத்தது."

' நானும் இது போல எனது அக்காவுக்கு வாங்கி பரிசாகக் கொடுக்க வேண்டும். "என்றான் ஆதங்கத்துடன்.

' என்ன விலை தெரியுமா?" என்றவர் 'டாடி" என்ற இவரது மகன் குரல் கேட்டு திரும்பினர்.

' அடே பீட்டர் உங்க அப்பா புதுக்கார் வாங்கி இருக்கிறாரா?"

'இல்லை. பரிசாகக் கிடைத்தது." என பெருமையுடன் கூறினான் பீட்டர்.

'பீட்டர் இவனை உனக்கு தெரியுமா?"

'பார்த்து இருக்கின்றேன். நம்ம வீடுபோகும் வழியில் தான் இவன் வீடும் இருக்கிறது."

'அங்கிள் இந்தக் காரை எனது அக்காவுக்குக் காட்ட வேண்டுமென ஆசையாக இருக்கிறது."

'டாடி நம்ம அந்த வழியாகத் தானே போகிறோம். வேணுமானல் நாம் இவனையும் காரில் கூட்டிக் கொண்டு செல்லலாமோ" என பீட்டர் தனது ஆவலை வெளியிட்டான்.

'சரி வா. போகலாம்." எனச் சொல்லிக் கொண்டே மூவரும் ஏறினார்கள். கார் படகு போல நகர்ந்து கொண்டே இருந்தது. அதன் உல்லாச பயணத்தில் தன்னை மறந்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.

'அங்கிள் நான் ஒரு நிமிடத்தில் என் அக்காவைக் கூட்டிக் கொண்டுவருகிறேன்" எனச் சொல்லிக் கொண்டு அந்த சிறுவன்  தன் பையை முதுகில் மாட்டிக் கொண்டு விரைவாக இறங்கிச் சென்றான்.

வீடு பெரியதாக இருந்தது. நல்ல நடுத்தரக்குடும்பம் போலத் தோற்றமளித்தது. முன்னால் சிறிய தோட்டம். நடுவில் சிமெண்டிலான நடைபாதை. வீட்டின் வாசலை நோக்கிய படியே இருந்த பீட்டருக்கும் அவனது தந்தைக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுவன் தனது அக்காவை ஒரு சக்கர நாற்காலில் நடைபாதையில் தள்ளிக் கொண்டுவந்தான்.

" அங்கிள் இதுதான் என் அக்கா. அக்கா இந்தக் காரைப் பார்த்தாயா! இது போல நானும் உனக்கு ஒன்று வாங்கித் தருகிறேன். நீ அதில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். " சிறுவனின் பாசத்தை வியந்து மனத்துக்குள் பாராட்டினார் பீட்டரின் தந்தை.  " அங்கிள்! இன்னொரு உதவியும் செய்யனும் அங்கிள். எனது அக்காவை இந்த காரில் ஏற்றி ஒரு சுற்று சுற்றி  வந்தால் அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் " என வேண்டினான்.wheel chair

பீட்டரின் தந்தை அவனது அக்காவை தூக்கி முன்னிருக்கையில் அமர்த்தி, மற்றவர்களும் ஏற அந்த சாலையில் கால் மணிநேரம் சுற்றி விட்டு அவனது இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார். " தங்க்யூ அங்கிள் " என்ற இரு குரலொலி நன்றியுடன் உரைக்கக் கேட்ட பீட்டரின் தந்தை, " யூ ஆர் வெல்கம் " என சொல்லி கையை அசைத்தவாறு தனது காரை ஓட்ட ஆரம்பித்தார். " பாசமலர்கள் " இரண்டும் அவர் கண்கள் முன் தோன்றி, அதை குளமாக்க, பார்வை மங்கியது..

AJS ராஜன் - சென்னை.