தூய ஆவியாரின் கனிகளுடன் பயணிக்கும் அன்னை

அருள்சகோதரி சகாயஜோஸி பிரமிளா. SAT

அன்பு


mary-love
விண்ணுக்கு அரசியாய் விடுதலை நாயகியாய்
வீறுகொண்டு எழுந்து விடியலாய் என்றும் புலர்ந்து
உம் விழிகளுக்குள் எம்மை வைத்துக் காத்து
உறுதியோடு நாங்கள் உழைக்க 
உயரிய நோக்கில் நாளும் பயணிக்க 
உம்மையே எங்களுக்குப் பாதையாய்க் காட்டினீர்!
உலகம் விழித்தெழுந்து உம் அன்பை உணர
உன்னையே எங்களுக்குக் கையளித்தாய்

அன்பு அன்னையே! பரிந்துரை என்னும் ஒரே வார்த்தையில் எங்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்து எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, விண்ணரசை நோக்கிப் பணயிக்க எங்களுக்குப் பாதைக் காட்டினீர். அன்பு அன்னையே இறைவனின் அன்பை நாங்கள் சுவைத்து வாழத் தகுதியுடையவர்களாக எங்களை உருவாக்கப் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

மகிழ்ச்சி


mary-love
வீட்டுக்கொரு விவிலியம்
நாளுக்கொரு அத்தியாயம்
இல்லத்திற்க ஒரு மரியாள் சரித்திரம்
இதயத்தில் ஒரு பேரானந்தம்
அன்னையவள் நம் இல்லத்தில்
அரசியாய் வீற்றிருந்தால்
அவள் அன்பர் தூய ஆவி வரவால் 
அருள் பொழிய செய்திடுவாய்

அன்னையே! எங்கள் எண்ணங்கள், ஏக்கங்கள், ஆவல்கள், ஆசைகள், தேவைகள், திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, எங்களது உழைப்பையும், வியர்வையையும் ஒன்றும் வீணாக்காமல் மகிழ்ச்சியாய் மாற்றினீர். இறைவனின் மகிழ்ச்சி எங்கள் ஒவ்வொருவரிலும் வந்து தங்கப் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

அமைதி


mary-love
எளிமையை வாழ்வாக்கினாய்
ஒளியானவரை உலகிற்குத் தந்தீர்
பணியைப் பண்பாக்கினாய்,
பாருலகிற்கு இணை மீட்பாளரானீர்
‘ஆம் என்ற இரண்டெழுத்தால்
“மீட்பு" என்ற மூன்றெழுத்திற்குக் காரணமானீர்

அன்பு அன்னையே! அமைதியால் அனைத்தையும் பெற்றுத் தந்து, அமைதியின் மகத்துவத்தை உணர வைத்து, எங்களை அமைதி வழியில் நடத்திச் சென்றாய். எங்கள் உடல் தூயஆவி குடிக் கொள்ளும் ஆலயமாக இருக்கச் செய்யவும், அமைதியைக் கடைபிடித்து வாழவும் இறைவனிடம் பரிந்துரைச் செய்வீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

பொறுமை


mary-love
பொறுமையின் பொற்பீடமாய்
தூய்மையின் கண்ணாடியாய்
விடியலின் விடிவெள்ளியாய்
உண்மையில் வாழ்ந்து
உயர்வை எட்டிப் பிடிக்க
பொறுமை என்னும் ஒன்றை
எங்களின் நாடித்துடிப்பாக்கினீர்

அன்பு அன்னையே! எங்களுக்கு ஏற்படும் இழிவுகளையும், இடையூறுகளையும் பொறுமையோடு ஏற்று உம்மைப் போன்று நாங்களும் தூய்மை அடையும் வரத்தைத் தர உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

பரிவு


mary-love
அருள் நிறைந்தவளாக,
இயேசுவின் அன்னையாக,
வைகறைத் தாரகையாக,
நம்பிக்கை நட்சத்திரமாக,
பரிவுக் குணத்தின் அரசியாக,
பரிந்துப் பேசும் தாயாக
எம் உள்ளச் சோர்வைப் போகத் தாதியானீர்

மாசு அறியா அன்னையே! விண்ணகக் கொடைகளால் நிரப்பப்பட்டு, இறைத் தந்தையுடன் நெருங்கிய உறவில் பிணைக்கப்பட்டீரே! தேவையில் இருக்கும் போது எமது அயலார் மீது பரிவு கொண்டு அவர்களைத் தேற்றும் நல்ல மனம் பெற்றிட உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

நன்னயம்


mary-love
ஆன்மபலன் நிறைந்தவளாய்
இதயத்திற்கு இதமளிப்பவளாய்
ஈடில்லா நிறைவளிப்பவளாய்
உள்ளத்திற்கு ஊக்கமளிப்பவளாய் 
ஊன்றுகோலென உறுதியளிப்பவளாய்
நன்னயம் கொண்டு நாள்தோறும் காத்தாய்

விண்ணக அரசியே! பிறப்பின் பலன் வாழ்வில் தெரியும், வாழ்வின் பலன் செயல்களில் புரியும், செயல்களின் பலன் பிறரின் வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதற்கு அடையாளமாய் வாழ்ந்துக் காட்டினாய். உம்மைப் போல் நாங்களும் வாழ உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

நம்பிக்கை


mary-love
அசைத்துப் பார்க்க முடியாத நம்பிக்கை
ஆல்போல் வளர்ந்திருக்கும் கீழ்படிதல்
அணுஅணுவாய் அனுபவிக்கும் செபகோபுரங்கள்
ஆயிரம் சுமைகளோடு வந்தாலும்
பரிந்துரையை ஆயுதமாய் கொண்டு
பாரெங்கும் ஒளி வீசுகிறாய்

மகிழ்ச்சியின் தாயே! உம் வாழ்க்கையை இறைத்திட்டம் நிறைவேறத் தியாகமாகக் கொடுத்தாய், எளிமையின் மறு உருவாய் வாழ்ந்துக் காட்டினீர். உம்மை நம்பி வருவோரைக் கைவிடாமல் காத்தீர். அன்பு அன்னையே எங்களது வாழ்வில் இறைநம்பிக்கையைப் பிறருக்குக் கொடுக்கும் வரத்தை நாங்கள் அடைந்திட உம் மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

கனிவு


mary-love
சாந்தம் நிறைந்த முகத்தைத் தாங்கி
இரக்கம் செறிந்தப் பார்வையைப் பொழிந்து
கனிவு கொண்ட வார்த்தைகளைத் தெளித்து
காவியமாய் எம் நெஞ்சில் நிறைந்து
எம் தேவைகளைப் உம் பரிந்துரையால் 
ஏற்றமுற நிறைவு செய்தாய்

அரவணைப்பின் அன்னையே! எங்களின் வேதனைகளை வேரோடு அறுத்துச் சோதனைகளைத் தூளாக்கி, முடியாது என்பதை முடியும் என்று உணர வைத்தீர். அன்பு அன்னையே கனிவு என்னும் குணத்தால் அனைவரையும் கவர்ந்தீர். உம்மைப் போல் நாங்களும் பிறர் மீது கனிவு கொண்டு வாழ உம் அன்பு மகனிடம் பரிந்துப் பேசுவீராக. ஆமென்

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடும் அம்மா!

தன்னடக்கம்


mary-love
ஆயிரம் மலர்களில் இறைவன் தேடிய மலராய்
ஆயிரம் மாந்தரில் இறைவன் தேடிய மங்கையாய்
ஆயிரம் விளக்குகளில் இறைவனின் அணையாவிளக்காய்
ஆயிரம் புகழ்மாலைகளில் இறைவனின் வாடாமாலையாய்
ஆயிரம் இடர் வந்தாலும் தன்னடக்கத்தைக் காத்தீர்
அன்பின் தேவதையாய் வாழ்ந்துக் காட்டினாய்

அன்பின் நாயகியே! தன்னடக்கம் என்பது குனிந்தத் தலை அல்ல. மாறாக உடல், நா, மனம் இவற்றின் கட்டுப்பாடே. இவற்றைக் கட்டுப்படுத்தி ஆழ்மனதில் மகிழ்ச்சியை அனுபவித்து எங்களுக்குத் தன்னடக்கத்தின் மேன்மையைப் புரிய வைத்தீர். அன்பு அன்னையே நாங்கள் அனைவரும் தன்னடக்கத்தைக் கையாண்டு வாழ உம் அன்பு மகனிடம் பரிந்துப் பேசுவீராக

விண்… அருள்… தந்தை…

அன்னை மரியே ! எங்களுக்காக உம் மகனிடம் மன்றாடு அம்மா!