பாசமுள்ள பார்வையில்...

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிட நிகழ்ச்சி




மாமியாரின் நல்லெண்ணம்

ஆகஸ்டு31

கலாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாரே? ச்சே.. ச்சே.. என்ன பெண் இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்? என மனதிற்குள்ளே மாமியாரை நினைத்து நொந்துகொண்டிருந்தார் கலா. அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவரிடம், “என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலைமையை பத்தி பேசக்கூடாதா?” என்று சொன்னார் கலா. மனைவி சொல்வதைக் கேட்டு கொதித்து போன கணவர், “கவலைப்படாதே, நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்”என்று ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு கமலா அக்காவிடம் மாமியார் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார் கலா. “கடவுள் புண்ணியத்துல... என் மருமகள் கலாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, வேளாங்கண்ணிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகபிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கலாவின் கண்கள் குளமாயின!




கரை சேர உதவும் தாய்

ஆகஸ்டு30

தன் தந்தை இறந்ததும், நாட்டை ஆளும் பொறுப்பேற்ற இளவரசர், தான்தோன்றித்தனமாக நடக்கத் துவங்கினார். எதிலும் பொறுப்பற்று, குதிரைகள் வளர்ப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். அவரின் தாய் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திருந்தவில்லை. அரசு நிர்வாகப் பொறுப்பை மகாராணி தன் கையில் எடுத்துக்கொள்ளவில்லையெனில், மக்கள் புரட்சி செய்ய நேரிடும் என அறிஞர்கள் எச்சரித்தும், திருந்தாத இளவரசனிடமிருந்து, பதவியைப் பறிக்க விரும்பவில்லை மகாராணி.

குதிரைகள்மீது இளவரசருக்கு இருந்த ஈடுபாட்டை தெரிந்திருந்த மகாராணி, ஓர் உக்தியைக் கையாண்டார். அரபு நாட்டிலிருந்து, தாய், மகள் என மிக அழகான இரு பெண் குதிரைகளை வரவழைத்தார். அடுத்த நாள், இளவரசரை அழைத்த மகாராணி, 'இதில் எது தாய், எது மகள் என்று நீ கூறினால், இக்குதிரைகளை நீ எடுத்துக் கொள்ளலாம்' என்றார். குதிரைகளைப் பார்த்த இளவரசர் அதிசயித்துப் போனார். ஏனெனில், அவ்வளவு அழகாக, ஒரே தோற்றம் கொண்டிருந்தன, அக்குதிரைகள். இளவரசர் எவ்வளவோ முயன்றும் அவரால், தாய் எது? மகள் எது? என கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாளும் முயற்சி செய்த இளவரசர், தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். தாய் அவரை நோக்கி, நம் ஊர் ஆற்றுப் பக்கம் வா. யார் தாய், யார் மகள் என்று நான் காட்டுகிறேன்' எனக்கூறி மகனை ஆற்றுப்பக்கம் அழைத்துச் சென்றார். மகன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவ்விரு குதிரைகளையும் ஆற்று நீரில் தள்ளினார் தாய். தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின, அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதை கவனித்த மற்ற குதிரை, தான் நீந்துவதை விட்டு விட்டு, தத்தளித்த குதிரைக்கு உதவி செய்வது போல், அதை, கரை நோக்கித் தள்ளியது.

அதைக் கண்ட தாய், "மகனே, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய். உன் நலனில் அக்கறைக் கொண்டுதான், இந்த தள்ளாத வயதிலும் உன் வழிகளைச் சீராக்க பல வழிகளில் முயல்கிறேன். உன் தந்தை கட்டிக்காத்த அரசைக் கைவிட்டு, குடிமக்களைத் தத்தளிக்க விட்டுவிடாதே'' என்று கூறினார். அதைக் கேட்ட இளவரசருக்கு, உண்மை உறைக்க ஆரம்பித்தது.




தந்தை சொன்னதை நம்பி...

ஆகஸ்டு 29

கடும்குளிர் காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில், ஊருக்கு ஓரத்தில் இருந்த அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த குழந்தைகளையெல்லாம் எழுப்பி, தந்தையும் தாயும் வீட்டுக்கு வெளியே விரைந்தனர். அந்த அவசரத்தில் ஒரு குழந்தையை மாடியில் விட்டுவிட்டு வெளியேறி விட்டனர். சன்னலருகே வந்து அழுது கொண்டிருந்த அச்சிறுமியை, தந்தை, சன்னல்வழியே குதிக்கச் சொன்னார்.

சிறுமி அங்கிருந்து, "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே இருட்டா, புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" என்று கத்தினாள். அப்பா கீழிருந்தபடியே, "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா" என்று தைரியம் சொன்னார். தந்தை சொன்னதை நம்பி குதித்தாள் சிறுமி... தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பிற்குள் தஞ்சம் புகுந்தாள்.




முதல் கல்விக்கூடம் தாயின்மடி

ஆகஸ்டு28

சிறந்த தொழிலதிபராக தான் வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்த தன் அம்மாவை அன்று நினைத்துக்கொண்டிருந்தார் மணி. அன்று மணிக்கு, பிளஸ் 1 பள்ளித் தேர்வு ஆரம்பிக்கும் நாள். காலையில் அம்மாவின் குரல் கேட்டது. ‘‘கண்ணா, இன்னுமா எந்திரிக்கலை? பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகுது பாரு! சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு, இன்னிக்கு தேர்வு ஆரம்பிக்குதுல!’’ என, அம்மா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். பலமுறை எழுப்பிய அம்மாவின் குரலுக்கு மகன் ஒருமுறை பதில் சொன்னான்... ‘எனக்கு உடம்பு சரியில்லைம்மா!’ என்று. உடனே அம்மா மகன் படுத்திருந்த அறையின் வாசலில் வந்து நின்றார்... ‘‘உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. கிளம்பு... கிளம்பு!’’ என்றார் அம்மா. மகன் படுக்கையில் இருந்து எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். ‘‘அம்மா! எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கலைம்மா. எனக்கு மட்டும் எல்லாமே மோசமா நடக்குது. பாடங்கள்ல நிறைய தப்பு பண்றேன்... திட்டும் அடியும் வாங்றேன். யாருக்குமே என்னைப் பிடிக்கலை. எனக்குன்னு யாருமே இல்லை. எப்போ பார்த்தாலும் பரீட்சை. படிக்கப் படிக்க குழப்பம்தான் அதிகமாகுது. நினைச்சாலே கடுப்பா இருக்கும்மா. நிச்சயமா சொல்றேன்... நான் பள்ளிக்குப் போகவே மாட்டேன்...’’ மகன் சொல்லி முடித்ததும், அம்மா மகன் அருகில் அமர்ந்தார்... ‘‘மன்னிச்சுக்கடா கண்ணு! நீ பள்ளிக்குப் போய்த்தான் ஆகணும். நாம தப்பு பண்றோம்னா அதுலருந்து கத்துக்கறோம்னு அர்த்தம். அதைத்தான் நீ பள்ளியில் செஞ்சுகிட்டு இருக்கே. தவறுகள்தான் நம்ம வளர்ச்சிக்கு உதவும். உன்னை வச்சு ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் விமர்சனம் செய்ய முயற்சி செய்யாதே. உனக்குன்னு யாருமே இல்லை, உன்னை யாருக்கும் பிடிக்கலைங்கறதை நான் நம்ப மாட்டேன். உனக்குப் பள்ளியில் நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். எல்லாத் தேர்வும் நமக்கு குழப்பத்தை அதிகமாக்குங்கறது உண்மைதான். ஆனா, நம்ம வாழ்க்கை முழுக்க பல வழிகள்ல பல தேர்வுகள் காத்திருக்கே... அப்போ என்ன செய்யப் போறோம். பொதுவாக பள்ளியில் கிடைக்கிற அனுபவம், நம்ம வாழ்க்கைக்கு உதவப் போகுதுன்னு புரிஞ்சுக்கோ!’’ அம்மா இவ்வாறு சொல்லி முடித்ததும் அன்று முணுமுணுத்தபடி பள்ளிக்கூடம் போகத் தயாரானான் மணி. இன்று மணி, நிறுவனம் ஒன்றின் சிறந்த அதிபர்.

பிள்ளைக்கு முதல் கல்விக்கூடம் தாயின்மடிதான். அம்மா என்பது வெறும் பெயரல்ல, அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.




அடக்கி ஆள்வதற்கு அல்ல, பணி செய்வதற்கே

ஆகஸ்டு 26

2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் திருத்தந்தை கலந்துகொண்ட உலக இளையோர் நாள் நிகழ்வை பின்னணியாக வைத்து, நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு திருத்தந்தை அளித்த பதிலும், இதோ:

நிருபர்: ரியோ நகரில் கூடியிருந்தோர், 'பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ' என்று கத்தியபோது, நீங்கள் அவர்களிடம் 'கிறிஸ்து, கிறிஸ்து' என்று கத்தச் சொன்னீர்கள். இவ்வளவு புகழை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? இவ்வளவு புகழுடன் எவ்வாறு வாழ்கிறீர்கள்?

திருத்தந்தை: இதற்கு எவ்விதம் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் இவ்வளவு மகிழ்வுடன் இருப்பதைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மக்களின் தாராளமனதைக் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இறைவன் மிக நல்லவற்றையே செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். ஆழ்மனதில், என் பாவங்கள், தவறுகள், இவற்றை நான் எண்ணிப்பார்க்க முயல்கிறேன். நான் முக்கியமானவன் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

இந்த புகழ், ஆரவாரம் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பின், நான் என் தந்தையின் இல்லம் செல்வேன் என்று தெரியும். இவற்றை (மக்களின் புகழ்ச்சியை) அதிகம் நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அதிகாரத்தில் இருக்கும் ஒரு தலைவர், எவ்விதம் சிந்தித்து, செயல்பட்டு, வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது. ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணி செய்வதற்கே என்பதை, தான் திருஅவை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.




வெற்றியும் தோல்வியும் வாழ்க்கைப் பாடங்களே

ஆகஸ்டு 25

அன்று மாவட்ட அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருந்தன. தன்னிடம் ஆசி பெற வந்த மகன் முகுந்தனைப் பார்த்து, “மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சிசெய்” என வாழ்த்தினார், அவன் தாய்.

எதிர்பார்த்தபடியே முகுந்தனுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்கு வந்தான். அம்மாவோ விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.

தாயை அணைத்துக் கொண்ட முகுந்தன், “அம்மா! நான் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான். “மகனே! முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்” என்றார், அம்மா.

“மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அதற்காகத்தான் இந்த விருந்து” என அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் முகுந்தன் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச் சாப்பிட்டான்.

சிறிது நேரத்திற்குப்பின் அம்மா கொடுத்த அந்த அட்டையை முகுந்தன் கையில் எடுத்தான்; பின்பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத் தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.

அதில், ‘அன்பு மகனே! தோல்விதான் வெற்றியின் முதற்படி. தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாதே. உன்முயற்சி நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கனியைக் கொணரும்’, என அதில் எழுதியிருந்தது.

தோல்வி, வெற்றி இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை கற்பிக்கவே இந்த விருந்து என்பதை புரிந்துகொண்டான், முகுந்தன்.




கர்ப்பிணி தாய்மார்க்கு இலவச சேவை

ஆகஸ்டு 24

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று, கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்டோ இலவசம் என்று அறிவித்து, ஒரு மகத்தான சேவையை ஆற்றியிருக்கிறார், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இளைஞர் சுகுமார் அவர்கள், இந்திய சுதந்திர தினத்தன்று ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட முடிவெடுத்தார். அதன்படி ஆகஸ்ட் 15, செவ்வாய்க்கிழமை (15.08.2017), காலை, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த சுகுமார் அவர்கள், ‘கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் ஆட்டோ இலவசமாக இயக்கப்படும்’ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அன்று காலை ஆறு மணி முதல், அடுத்த நாள் காலை ஆறு மணி வரையிலான 24 மணி நேரத்தில், மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்களை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு, தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்றார் சுகுமார். இது குறித்து சுகுமார் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில் ஏதாவது சமூக சேவை செய்ய விரும்பினேன். அதன்படி ஒருநாள் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களை இலவசமாக, அவர்கள் வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல முடிவு எடுத்தேன்”என்றார். ஆட்டோ ஓட்டுனர் சுகுமார் அவர்களுக்கு, மருத்துவமனைக்கு வந்த நோயாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு உதவிய சுகுமார் வாழ்க! இத்தகைய சுகுமார்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கட்டும். அன்னைக்கு உதவாதவர், வேறு யாருக்கும் உதவமாட்டார் என்பது தமிழ் பழமொழி.




ஈடு செய்யக்கூடியதா தாய்ப் பாசம்?

ஆகஸ்டு 23

தனது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உச்சகட்ட நிலைக்குச் சென்றுவிட்ட 50 வயது மனிதர் ஒருவர், தன் 80 வயது தாயைப் பார்த்து கேட்டார், ‘அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்’ என்று. தாய் வியப்புடன் மகனைப் பார்த்தார். ‘அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத்தானே செய்தேன். சரி… நீ தொடர்ந்து கேட்பதால் ஒன்று சொல்கிறேன். நீ குழந்தையாக இருந்தபோது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு’ எனக் கூறினார் தாய்.

அன்றிரவு தனது தாயின் படுக்கையில் தாயுடன் படுத்துக்கொண்டார் மகன். தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தார். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தார். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவர் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினார். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கீழ்புறம் நோக்கி நகர முயன்றார். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன் தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும்போது தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து கோபமாக, ‘என்னம்மா செய்கிறாய்? தூங்க கூட விடமாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர்பார்க்கிறாய்?’ எனக் கேட்டார். அப்போது தாய் அமைதியாக சொன்னார், ‘மகனே...அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருந்தபோது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்துவிட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக்கொள்வேன். முடியுமானால் உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஓர் இரவு தூங்க முடியுமா? இது உன்னால் முடியுமென்றால் தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன்’, என்று.

மகன் திகைத்து நின்றார். தாயின் தியாகத்திற்கு எந்த ஒரு மகனாலும் ஈடு செய்யமுடியாது என்பதே உண்மை.




துன்பங்களில் பங்கேற்கும் அன்னை மரியா

ஆகஸ்டு 22

பல நூற்றாண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையில், இரு இதயங்கள், மக்களின் வணக்கத்தைப் பெற்று வந்துள்ளன - இயேசுவின் திரு இதயம், மரியாவின் மாசற்ற இதயம். முள்ளால் சூழப்பட்டு, கொழுந்துவிட்டெரியும் இதயமாக, இயேசுவின் திரு இதயமும், வாளால் ஊடுருவப்பட்டு, மலர்களால் சூழப்பட்டு, பற்றியெரியும் இதயமாக, மரியாவின் மாசற்ற இதயமும், மக்களின் வணக்கத்தைப் பெற்றுள்ளன.

அன்னை மரியாவும், யோசேப்பும், இயேசுவை, கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்ற வேளையில், அங்கு வந்த முதியவர் சிமியோன், அன்னை மரியாவைப் பார்த்து, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2: 35) என்று கூறியதையும், மரியன்னை, தன் வாழ்வில் அனுபவித்த ஏழு துயர்நிறை தருணங்களை நினைவுறுத்தவும், வாள் ஊடுருவிய இதயமாக, மரியன்னையின் இதயம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சிமியோன் சொன்ன கடினமான கூற்று, குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பித்துச்சென்றது, சிறுவன் இயேசு, எருசலேம் திருவிழாவில் காணாமற்போனது, சிலுவை சுமந்து சென்ற இயேசுவைச் சந்தித்தது, சிலுவையில் அறையப்பட்டு துடித்த இயேசுவைக் கண்டது, இறந்த இயேசுவை மடியில் கிடத்தி அழுதது, இயேசுவை அடக்கம் செய்தது என்று, ஏழு கொடுமைகளை மரியா தன் இதயத்தில் தாங்கி நின்றார் என்பதை, அவர் இதயத்தில் பாய்ந்து நிற்கும் ஏழு வாள்கள் காட்டுகின்றன.

புலம்பெயர்வோர், குழந்தைகளைத் தொலைத்துவிட்டு துன்புறுவோர், காவல்துறையாலும், வன்முறை கும்பல்களாலும், தன் மகனோ, மகளோ, துன்புறுத்தப்படுவதைக் காண்போர், இளம் வயதில் இறந்துபோகும் மகனையோ, மகளையோ அடக்கம் செய்வோர் என்று... பெற்றோர், துயருறும் தருணங்களில், மரியன்னை, அவர்களது துன்பங்களில் பங்கேற்கிறார்.

மரியாவின் மாசற்ற இதயத் திருவிழா, பல ஆண்டுகளாக, ஆகஸ்ட் 22ம் தேதி, கொண்டாடப்பட்டது. தற்போது, இத்திருவிழா, இயேசுவின் திரு இதயத் திருவிழாவைத் தொடர்ந்துவரும் சனிக்கிழமையில் சிறப்பிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி விண்ணேற்படைந்த மரியன்னை, அரசியாக முடிசூட்டப்பட்டத் திருவிழா, ஆகஸ்ட் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.




பாட்டி கற்றுக்கொடுத்த பாடம்

ஆகஸ்டு 21

அந்த ஊரில் பணம் படைத்த பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சில நாள்களாக ஒரு பிரச்சனை. காது சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவர், ஒரு சிறப்பு மருத்துவரிடம் சென்றார். பாட்டியைப் பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினால் பிரச்சனை சரியாகிவிடும் என்று ஆலோசனை சொன்னார். பாட்டியும் சரி என்று சொல்ல, பாட்டியின் காதுக்குப் பின்னால், தலைமுடி மறைக்கும்படி, வெளியில் பார்ப்பவர்களுக்குத் தெரியாமல், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினார் மருத்துவர். ஒரு வாரம் சென்று, பாட்டி பரிசோதனைக்காக அதே மருத்துவரிடம் வந்தார். ‘‘டாக்டர், என்ன அற்புதம்... என்னால எல்லாத்தையும் நல்லா கேட்க முடியுது! என்று மகிழ்ச்சியோடு சொன்னார் பாட்டி. அதற்கு மருத்துவர், ’’அப்ப.. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் இதுல மகிழ்ச்சிதானே!’’ என்று கேட்டார். அப்போது பாட்டி, ‘‘டாக்டர், அவங்க யார்கிட்டயும் காது கேட்கும் கருவி எனக்கு மாட்டியிருப்பதைப் பத்தி நான் சொல்லவே இல்லை. ஆனா, இந்த ஒரு வாரத்துல ரெண்டு தடவை என் உயிலை மாத்தி எழுதிட்டேன்!’’ என்று உற்சாகமாகச் சொன்னார்.

ஆம். வயதான பாட்டிதானே, அவருக்கு காது கேட்காது, கண் தெரியாது என, ஒருவரின் பலவீனத்தை எவரும் கேலி செய்யக் கூடாது. அதனால் இழப்பே நேரிடும். எந்த மனிதரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.




கோவிலில் இடம் இல்லை

ஆகஸ்டு 19

தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், ஐரோப்பிய இனத்தவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

மக்களை இணைக்கும் பாலங்களை உருவாக்குவதற்குப் பதில், மக்களைப் பிரிக்கும் சுவர்களை எழுப்புவதற்குச் சொல்லித்தரும் மதங்கள், மதங்களே அல்ல.




தமிழ் மீது கொண்ட அவ்வையின் தாய்மையுணர்வு

ஆகஸ்டு 18

ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றியது. உடனே, தன் அரண்மனைப் புலவர்கள் அனைவரையும் அழைத்து, அடுத்த நாள் காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தை கலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் "என்ன வருத்தம்?" என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுறுவலுடன் "இவ்வளவுதானா, நான் எழுதித் தருகிறேன், நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கி நின்றனர். அவ்வையார் "ஒவ்வொரு பாடலும் ஒரு கோடி பொன் மதிப்புடையது, சென்று கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். அவையில் இந்த கோடிப் பாடல்களை வாசித்தனர் புலவர்கள்.

1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.
2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்.

இவ்வாறு அவ்வையார் எழுதி அனுப்பிய நான்கு கோடி குறித்த கவிதை, எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும். மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப் புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும், ஆமாம், அவ்வையார் இயற்றியதுதான், எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினார் என்பது வரலாறு. அவ்வையாரின் புலமையை மட்டுமல்ல, ஒரு தாய்போல் இருந்து தமிழின் குழந்தைகைகளான கவிஞர்களை காப்பாற்றிய அவரின் தாய்மைப் பண்பையும் இந்நிகழ்ச்சி சித்திரிக்கின்றது.




தாயின்மீதுள்ள பாசத்திற்குத் தடைச்சுவரா?

ஆகஸ்டு 17

விமலனுக்கு, தன் அம்மா மீது மிகுந்த மரியாதை. அதை தகர்க்கத் திட்டமிட்டார், அவரின் மனைவி விமலா. அன்று வேலை முடிந்து வீடுவந்த விமலன், வழக்கம்போல் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தார். என்ன விமலா, நான் தினமும் ராத்திரி பசியோட வருவேன்னு தெரிஞ்சு நான் வரும்போது சாப்பாட்டைத் தயாரா வச்சுருப்பே... இன்னைக்கு என்னாச்சு? பசி என் வயித்தை கிள்ளுது.... என விமலன் சத்தம் கொடுத்தார். ஆனால், விமலா வேண்டுமென்றே சாப்பாட்டைத் தாமதமாக தயார் செய்தார். “இதோ வந்துட்டேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க!” என்று விமலா குரல் கொடுக்கவும், பசி தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்க்க உட்கார்ந்தார் விமலன். விமலனை, சரியாக அரைமணி நேரம் காக்க வைத்த விமலா, சாப்பாட்டை நிதானமாக மேஜையில் வைத்து விட்டு, “கோவிச்சுக்காதிங்க. எனக்கு உடம்புக்கு முடியல, இப்படிப்பட்ட நேரங்கள்ல, உங்க அம்மா எனக்கு கூடமாட உதவி பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க வரலை. அதனாலதான் நான் என் சிரமத்தை பொறுத்துக்கிட்டு சமச்சேன். இதுக்காக நீங்க உங்க அம்மாவை கோவிச்சுக்க வேணாம். பாவம் அவங்களுக்கு இந்த வயசில என்ன கஷ்டமோ?” என்று அப்பாவியாக கணவனிடம் சொன்னார். தான் சொன்னதைக் கேட்டதும், விமலன் முகத்தில் தன் தாய்க்கு எதிரான கோபம் தென்படுகிறதா என்று தேடினார் விமலா. ஆனால் கணவரின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கணவரை மேலும் கோபப்படுத்த நினைத்த விமலா, “பாவம் உங்க அம்மா. இந்த நேரத்திலகூட அவங்க நமக்கு பயனா இல்லாம இருக்காங்களேன்னு நீங்க அவங்களைத் தப்பா நினைச்சுடாதீங்க. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நான் உங்களுக்காகவும், நம்ம குழந்தைகளுக்காகவும் தாங்கிக்கிறேன். அவங்க கடைசிவரை ஓய்விலேயே இருக்கட்டும்!” என்று சொல்லி, கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் விமலா. அப்போது விமலன், “நீ சொல்றது சரிதான். இந்த வயசிலேயே உனக்கு இவ்வளவு கஷ்டம்னா, இவ்வளவு வயசான என் அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்னு நினைச்சா கவலையா இருக்கு. அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு இவ்வளவு நாள் நம்ம குடும்பத்துக்காக தன் வலிகளை வெளிக்காட்டிக்காம உழைச்சிருக்காங்க. நீ உன்னால என்ன முடியுமோ அதை மட்டும் சமைச்சா போதும். என்ன சொல்ற?’’ என்று கேட்டார். விமலாவின் முகத்தில் தோற்றுப்போன சோகம்.




பாட்டியின் பாசத்தில் பேரன்

ஆகஸ்டு 16

குமார் தனது குழந்தைப் பருவ அனுபவத்தை இவ்வாறு நினைவுகூர்கின்றார். அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். என்னைச் சாப்பிட வைத்து, பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டனர். அவ்வளவு சுட்டிப் பையன் நான். அன்று பள்ளிப் பேருந்து வர சிறிது நேரமே இருந்தது. அதனால், எனக்கு சாப்பாடு ஊட்டும் பொறுப்பை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டார் அப்பா. அன்றும் நான் வழக்கம்போல் அழுதுகொண்டே எழுந்தேன். வீட்டில் புதிதாகப் பாட்டியைப் பார்த்ததும், எனது அழுகை இன்னும் அதிகம் ஆனது. ஏனென்றால் நாங்கள்தான் வருடத்திற்கு ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போவோம். சிறிது கண்ணைத் திறந்து என் பாட்டியின் முகத்தைப் பார்த்தேன். நான் இவ்வளவு பிரச்சனை செய்த பிறகும், என் அப்பா, அம்மா போன்று, பாட்டி முகத்தில் கோபம் இல்லை. அதற்கு மாறாக, பாட்டியிடம் ஓர் அழகான புன்னகை மட்டுமே இருந்தது. அதுவே எனக்கு சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. என் பாட்டி, சாப்பாட்டு தட்டோடு என் முன்னால் வந்து, கண்ணா இங்க பார்…என்று சொல்ல, நான் அழுதுகொண்டே, தலையை ஆட்டி முடியாது என்றேன். பாட்டி புன்னகையோடு, “இங்க பார் கண்ணா, இப்போ பாட்டி உனக்கு ஒரு கதை சொல்லப்போறேன், என்ன ஓகே-யா?” எனச் சொன்னதும், நான் அழுகையை நிறுத்திட்டு அவர்கள் முகத்தைப் பார்த்தேன். “ஆனா, கதை கேட்கண்ணும்னா கண்ணை மூடித்தான் கேட்கனும்” என்று பாட்டி சொல்ல, நான் அவர்கள் முகத்தை ஒரு கேள்வியோடு பார்த்துவிட்டு, திரும்பவும் அழ ஆரம்பித்தேன். அப்போது பாட்டி என்னைப் பார்த்து, “சரி போ, உனக்கு கதையும் கிடையாது, சாப்பாடும் கிடையாது,” எனச் சொல்லிவிட்டார்கள். எப்பொழுதும் நான்தான் சாப்பாடு வேண்டாம் எனச் சொல்வேன், அம்மா என் பின்னாலேயே ஓடி வருவார்கள், இப்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறதே என நினைத்து, நானும் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தேன். எனக்குப் பசி வேறு. என் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். “ஒரு ஊர்ல, ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அங்க, ஒரு குட்டிப் பையனும் அவங்க அம்மா, அப்பாவும் இருந்தாங்களாம். அந்த குட்டிப் பையன்தான் நீ. அந்த குட்டிப் பையன் தினமும் காலையில எழுந்ததும் காட்டுல வாக்கிங் போவானாம். அந்தப் பாதை பச்ச பசேல்னு அழகான புல்வெளியாம். கண்ணா புல்வெளி தெரியுதா?” என்று பாட்டி கேட்க, நானும், தெரியுது பாட்டி என்று சொன்னேன். திடீர்னு மேலேர்ந்து ஓர் அன்னப்பறவை பறந்து கீழவந்து, அந்த பையன் கையப் பிடிச்சுட்டு மேல பறக்க ஆரம்பிச்சுச்சு… திடீர்னு பறவைக்கு தாகம் எடுத்தது. என்ன பண்றதுன்னு தெரியாம அது கடவுளை வேண்டுச்சு. உடனே கடவுள் மழை வரவழைச்சுட்டார். உடனே பறவை ஆ காட்டி தண்ணி குடிச்சதாம்.” கண்ணா, உனக்கு தாகமா இல்லையான்னு கேட்டாங்க பாட்டி… நானும் ஆ காட்டினேன். பார்த்தால், என் வாயில் ஒரு சாப்பாட்டு உருண்டை வந்து விழுந்தது. வேற வழி இல்லை, முழுங்கித்தானே ஆக வேண்டும். அப்படியே கதையைத் தொடர்ந்தார்கள் பாட்டி. என் தட்டிலிருந்த எல்லா இட்லிகளையும் சாப்பிட்டு முடித்துவிட்டேன். அதற்குப்பின் பாட்டி கதை சொல்லி சாப்பிடுவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. அன்று பள்ளி முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தேன். காலையில் முடிக்காத கதையைக் கேட்கும் ஆர்வத்தில், அன்றைக்கு நான் ஏழு மணிக்கே தயாராக இருந்தேன். பாட்டி, வாங்க சாப்பிடப் போகலாம், அந்த கர்ணன் கதை கடைசியாக எப்படி முடிந்தது எனச் சொல்லவேண்டும்…”என கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் என் பாட்டி எழுந்திருக்கவே இல்லை. இப்போது என் பாட்டியின் கனவுப்படி பட்டம் பெற்று வேலையும் செய்கிறேன். பாட்டிகளின் முக்கியத்துவம் பற்றி, ஓய்வுநேரங்களில் பிறருக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். குமாரின் பகிர்வு இவ்வாறு இருந்தது.




பார்வைத்திறன் அற்றபோதும், பரமனைக் காண

ஆகஸ்டு 15

மரியா, சிறுமியாக இருந்தபோது நிகழ்ந்த ஒரு விபத்தால், அவரது கண்பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலவகையான மருத்துவச் சிகிச்சைகள் பெற்றும், தன் 30வது வயதில், மரியா, தன் பார்வைத்திறனை முற்றிலும் இழந்தார்.

இந்நிலையிலும், இளம்பெண் மரியா, பிறருக்கு ஏதாவது ஒருவகையில் உதவவேண்டும் என்று விரும்பினார். அப்போது, அவர், 'தோன் ஓரியோனே திருநற்கருணை சகோதரிகள்' (Sacramentine Sisters of Don Orione) என்ற துறவு சபையைப்பற்றி கேள்விப்பட்டார்.

இத்துறவு சபையின் சகோதரிகள் அனைவரும் பார்வைத்திறன் அற்றவர்கள். இவர்கள், ஒவ்வொருநாளும், 24 மணி நேர திருநற்கருணை ஆராதனையில் ஈடுபட்டுள்ளனர். "உலகின் ஒளியான இறைவனை அறியாதவர்களுக்காக, பார்வைத்திறனற்ற என் நிலையை ஒப்புக்கொடுக்கிறேன்" என்பது, இத்துறவு சபையில் இணைவோரின் விருதுவாக்காக அமைந்துள்ளது.

இச்சபையில் இணைந்த இளம்பெண் மரியா லுஸ் ஓஹேய்தா (Maria Luz Ojeda), அவர்கள், "ஆன்மாக்கள் மீட்படைவதற்கு நான் ஆற்றக்கூடிய ஆராதனைப்பணியால், நிம்மதியும், மகிழ்வும் அடைந்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

திங்கள் - நோயுற்றோர், செவ்வாய் - இளையோர், புதன் - உலக அமைதி, வியாழன் - இறையழைத்தல், வெள்ளி - முதியோர், சனிக்கிழமை - குழந்தைகள், ஞாயிறு - குடும்பங்கள்... என்று, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக்காக இச்சகோதரிகள் ஆராதனையில் ஈடுபடுகின்றனர்.

"இந்த துறவு சபையை அன்னை மரியாவின் அரியணைக்கு முன் ஒரு மலராக அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் தன் புனிதக் கரங்களால் இம்மலரை நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவிடம் அர்ப்பணிப்பாராக" என்ற கருத்துடன், புனித லுயிஜி ஓரியோனே (Luigi Orione) அவர்கள், 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இத்துறவு சபையை நிறுவினார்.

இத்துறவு சபை, தற்போது, இத்தாலி, இஸ்பெயின், பிலிப்பின்ஸ், கென்யா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலே ஆகிய நாடுகளில் பணியாற்றிவருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி, இச்செவ்வாயன்று, 'தோன் ஓரியோனே திருநற்கருணை சகோதரிகள்' சபையினர், தங்கள் 90வது ஆண்டை நிறைவு செய்துள்ளனர்.

பார்வைத்திறன் அற்றபோதும், பரமனிடம் மற்றவர்களை அழைத்துவரும் பாசப்பணியில் ஈடுபட்டுள்ள அருள் சகோதரிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக!




ஆசைகளைத் தியாகம் செய்த தாய்

ஆகஸ்டு 14

செல்லப்பா அவர்கள், மாற்றலாகிச் சென்றபிறகு, தன் ஊருக்குத் திரும்பி வந்தது, சென்ற மாதம் தற்செயலாய்தான் தெரியவந்தது கேசவனுக்கு. அப்போதிலிருந்தே அம்மாவிடம் அவர் பற்றிச் சொல்லலாமா, அவரை வீட்டுக்கு அழைக்கலாமா என்ற துடிப்பு கேசவனுக்கு. அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அம்மா கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் சலனமின்றி படுத்துவிட்டார். எனவே செல்லப்பா அவர்களுக்கு, அம்மாவின் நிலையை விளக்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார் கேசவன். அன்று அம்மாவைப் பார்க்கச் சென்ற கேசவன், செல்லப்பா அவர்களை எதிர்பார்த்து, வாசலைப் பார்ப்பதும், அம்மாவின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தார். பின் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் கேசவன். அவரின் கண்களில் கண்ணீர். அப்போது கேசவனுக்கு எட்டு வயது இருக்கும். ஒருநாள் அம்மா மகனை அணைத்தவாறு, ‘‘கேசவா, செல்லப்பா மாமாவை உனக்குப் பிடிச்சிருக்குதா?’’ என்று கேட்க, ‘ஓ… ரொம்பப் பிடிக்குமே!’’என்றான் கேசவன். எனக்கு… எனக்குக்கூட அவரைப் பிடிக்குதுடா கண்ணா! நல்ல மாமா அவரு. அவரை… அந்த நல்ல மாமாவை… உனக்கு அப்பாவாய்ப் பண்ணட்டுமா? என்று கேட்டார் அம்மா. சிறுவன் முகத்தில் ஒன்றும் புரியாத வெற்றுப்பார்வை. அது ஒரு தடை என்பதுபோல், அம்மாவின் முகத்தில் கணநேரத் தடுமாற்றம். என்னம்மா?’’ எனக் கேட்க, அவரை…நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?’’என்றார் அம்மா. ஹும், கூடாது, அது தப்பு!’’ உனக்கு ஒரு அப்பா கிடைப்பார்டா கண்ணா!’’ என்று அம்மா சொல்ல, என் அப்பா செத்துப்போய்ட்டார். நீ என் அம்மா, அம்மால்லாம் தப்புச் செய்யக்கூடாது…’என்று மறுப்பில் தலையாட்டினான் கேசவன். அந்தத் தலையாட்டலில் அம்மாவின் வாழ்க்கைக் கதவை இறுக மூடிப் பூட்டிவிட்டதை கேசவன் அன்று அறியவில்லை, ஆனால், இன்று அதை அறிந்து, உணர்ந்து, நொந்து, வெட்கி அதற்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கேசவனின் இதயம் பேசியது. என் அம்மா என்பதற்குமேல் நினைக்கத் தெரியாத அந்தக் குழந்தையின் பேச்சை நீ ஏனம்மா கேட்டாய்? விதவை மறுமணம் தவறு என்று கருதும் ஒரு மரபுச் சமுதாயத்தின் வார்ப்படமான குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? முதலில் ஒரு குழந்தையிடம் யோசனை கேட்பதே தவறில்லையா? குழந்தையைக் குழந்தையாகவே வைத்துவிட்டு உன் இதயம் காட்டிய வழியில் நீ சென்றிருந்தால் அந்தக் குழந்தை முதலில் முரண்டுபிடித்திருக்கும். ஆனால் வளர்ந்து ஆளானபின், அதைப் புரிந்து மகிழ்ந்திருக்கும். இரண்டு பேரின் மகிழ்வான வாய்ப்பைக் கெடுத்துவிட்ட குற்றச் சுமையை நெஞ்சில் தாங்கி இப்படி வருடக்கணக்காய் நான் பரிதவித்துக் கொண்டிருக்க மாட்டேன்.. என்றவாறு தனக்குள்ளே அழுதுகொண்டிருந்தார் கேசவன். இவரின் அம்மா முப்பது வயதில் கைம்பெண்ணானவர்.




"உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்"

ஆகஸ்டு 12

Jennifer Jill Schwirzer என்ற கவிஞர் எழுதிய ‘காலடித்தடங்கள்’ (Footsteps) என்ற கவிதையின் சுருக்கம் இது: மனிதன் ஒருவன், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்குச் சான்றாக, பாதையில் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் பாதையில், ஒரு சில நேரங்களில், ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.




காய்ந்து சாய்ந்த இலையின் பாடம்

ஆகஸ்டு 11

ஞானம் தேடி ஓர் இளைஞர் துறவுமடம் ஒன்றில் சேர்ந்தார். அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக, ''உன்னையே நீ உணர்வாயாக'' என்றனர். அது அவருக்குப் பிடிபடவில்லை. அவருக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. ஒருநாள் இளைஞரை அழைத்த தலைமைக்குரு, ‘இன்று நீ தனியாக வெளியில் சென்று நடந்துவிட்டு வா’ என்றார். ஊருக்குள் நடந்துச் சென்ற இளைஞர், வழியில் ஒரு மூதாட்டியைப் பார்த்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மூதாட்டியின் காலருகே திடீரென, அந்த மரத்திலிருந்து ஒரு காய்ந்த மட்டை விழுந்தது. பயந்து போன இளைஞர், அம்மூதாட்டியிடம் கேட்டார், 'இப்படி அச்சப்படாமல் அமர்ந்திருக்கிறீர்களே, எப்படி உங்களால் முடிகிறது?' என்று. இவரை அண்ணாந்துப் பார்த்த அந்த மூதாட்டிச் சொன்னார், 'இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப்போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டடுள்ளேன். பின் எதற்குப் பெருமை,கர்வம், பயம் எல்லாம்? காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லா திசைகளிலும் மாறி, மாறி, அடித்துச்செல்வதைக் காண்கிறேன். நாளை அது சாம்பலாகிவிடும். நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன். நான் என்பது எனக்கு இனி இங்கில்லை. இதை இந்த காய்ந்த இலையிலிருந்து கற்றுக் கொண்டேன்' என்று. துறவுமடத்தில் பெறமுடியாத ஞானத்தை அந்த தாயிடமிருந்து கற்றுக்கொண்டார் அந்த இளைஞர்.




அம்மா என்ற சொல்லுக்கு சாதி மதம் கிடையாது

ஆகஸ்டு 10

சென்னையில் முதியோர் காப்பகம் ஒன்றில், கல்யாணி என்ற எழுபது வயது நிரம்பிய ஓர் அம்மாவைச் சேர்த்துவிட்டு மேலாளர் அறைக்குச் சென்றார் ராஜா முகமது இக்பால். கல்யாணி அம்மாவின் குடும்ப விபரங்களை ராஜா சொல்லச் சொல்ல எழுதிய மேலாளர், வியப்புடன், அப்ப நீங்க யாரு... உறவினரா, நண்பரா? என்று கேட்டார். சொல்றேன் சார், இரண்டுமே இல்லை. ஏறக்குறைய பதினைந்து நாள்களுக்குமுன், சென்னையில், நானும் என் மனைவியும், என் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச் சென்றோம். கார் கதவைத் திறந்து, என் அம்மா இரண்டடிதான் வைத்திருப்பார்கள். அப்போது அவர்களை நோக்கி ஒரு பைக் சீறிட்டு வந்தது. நான் பதறிப் போய் உறைந்து நின்றேன். அப்போது அந்த வழியாக வந்த இளைஞன் ஒருவன், மின்னல் வேகத்தில் பாய்ந்து, என் அம்மாவைப் பின்னால் தள்ளிவிட்டான். பைக் வந்த வேகத்தில் போய்விட்டது. என் அம்மா நன்றாக இருப்பது தெரிந்ததும்தான், அந்த இளைஞனைப் பற்றிய நினைவே எனக்கு வந்தது. அவனைப் போய் பாருடான்னு என் அம்மா பதறினாங்க. அந்த இளைஞன், சாலையில் மயங்கிக் கிடந்தான். அங்கு கிடந்த கூரான கல் ஒன்று, இளைஞனின் பின்புற மண்டையில் குத்தினதில், இரத்தம் ஏராளமாக வெளியேறியிருந்தது. அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தான். மெதுவாக, திக்கித் திக்கி அவனைப் பற்றி சொன்னான். பெயர் சுந்தரேசன். அப்பா பஞ்சாபகேச அய்யர். அம்மா கல்யாணி. இரண்டு பேரும் காரைக்கால் அருகிலே நிரவியிலே இருக்கிறார்கள். குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். எனக்கும், இங்கே சுமாரான வேலைதான். அந்த வேலையும் போய், இப்போது வேறு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்றான். அவனை நன்றாகக் கவனிக்கும்படி மருத்துவரிடம் சொல்லி, மருத்துவ செலவுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால் அவன் அன்று இரவே இறந்துவிட்டான். உடனே என் அம்மா புலம்பிக்கொண்டே, அவங்க ஊருக்குப் போய், அவங்க அப்பா, அம்மாவை கையோட கூட்டிவந்து, பிள்ளைக்குச் செய்யவேண்டிய சடங்குகளை செய்ய ஏற்பாடு பண்ணுன்னு' என்னை விரட்டினார்கள். நானும் உடனடியாக வாகனத்தில் சென்று காலையில் அவன் ஊர் போய்ச் சேர்ந்தேன். ஆனால் அங்கே சுந்தரேசனின் அப்பாவும் இறந்திருந்தார். சுந்தரேசனின் வருகைக்காக ஊரார் காத்திருந்தனர். அங்கே இருந்த வறுமை சூழ்நிலை, என் மனதை மிகவும் பாதித்தது. அதனால் மகன் இறந்ததை, அவன் அம்மாவிடம் சொல்லாமல், அவன் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு நானே பணம் கொடுத்து செய்யச் சொன்னேன். அவன் வேலை விடயமாக, வடநாடு போயிருக்கிறான் எனப் பொய் சொல்லி, அவன் அம்மாவையும் கையோட கூட்டிவந்து, இங்கு சேர்த்துள்ளேன், இந்த என் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் முஸ்லிம். சுந்தரேசன் பிராமின், உலகத்தில் அம்மா என்ற சொல்லுக்கு சாதி, மதம், இனம் கிடையாது. அதற்கு ஒரே அர்த்தம் அன்புதான் சார் என்று கூறி முடித்தான் ராஜா இக்பால்.




மேடையில் மட்டும்தான் அன்பா?

ஆகஸ்டு 09

அன்று ஆகாஷ் அன்பைப் பற்றி, நகைச்சுவை கலந்து மேடையில் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் கேட்ட பார்வையாளர்கள், அரங்கமே அதிரும்படி கைதட்டிக் கொண்டிருந்தார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் தந்த உற்சாகத்தில் ஆகாஷுக்கு, அவரையும் அறியாமல் கருத்துக்கள் ஊற்றெடுத்துவர, சிறப்பாக உரையாற்றி முடித்தார். கூட்டம் முடிந்ததும், அரங்கத்தில் பலர் ஆகாஷிடம் வந்து கைகுலுக்கி வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். கூட்டத்திலிருந்து, முதியவர் ஒருவர், ஆகாஷிடம் வந்தார். “தம்பி, நீங்க நல்லாப் பேசினீங்க. அன்பைப் பற்றி எவ்வளவு அழகாச் சொன்னீங்க. சுயநலம் பெருகிவிட்ட இந்தக் காலத்துல உங்களை மாதிரி அன்பைப் பற்றி எடுத்துச் சொன்னாதான் மத்தவங்களுக்குப் புரியும்” என்று சொல்லிப் பாராட்டினார். பின் ஆகாஷ் அவரிடம், ஐயாவுக்கு எந்த ஊர்? என் சொற்பொழிவை இதற்கு முன்னாள் கேட்டிருக்கீறிர்களா?” எனக் கேட்டார். “இல்லை தம்பி.. நான் வெளியூர். வரன் பார்க்கிற விஷயமா இங்கே வந்தேன். எங்க ஊருக்கு ராத்திரிதான் பஸ். அதுவரைக்கும் நேரம் போகணுமேன்னு இங்கே வந்தேன்!” என்று சொன்னார் முதியவர். ஐயா, உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்களா?”எனக் கேட்டார் ஆகாஷ். என் பொண்ணுன்னே வெச்சுக்கோங்களேன். என் அண்ணன் பொண்ணு. அண்ணன் சின்ன வயசுலயே விபத்துல போய்ட்டார். அவரோட ரெண்டு பொண்ணுக, ஒரு பையன் எல்லாரையும் நான்தான் வளர்த்தேன். எல்லாரையும் படிக்கவெச்சு ஆளாக்கி, ரெண்டுபேருக்கு கல்யாணமும் பண்ணி வெச்சுட்டேன். கடைசிப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கேன். மாப்பிள்ளை பையன் இந்த ஊர்லதான் டீச்சரா இருக்கார்னு தெரிஞ்சு பார்த்துட்டுப்போக வந்தேன். இனிதான் என் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யணும்”என்று பெரியவர் சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல, சுருக்கென்று இருந்தது ஆகாஷுக்கு. அண்ணன் பிள்ளைகளை, தன் பிள்ளைகளாய் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பெரியவர் எங்கே? சொந்த அம்மாவை என்னுடன் வைத்திருந்தால் சுதந்திரம் இருக்காது என்று, என்னைவிட வசதியற்ற தம்பியின் வீட்டுக்கு அனுப்பிவிட்ட நான் எங்கே? அன்பு என்பது மேடையில் பேசுவதற்கு மட்டும்தானா? அது வாழ்க்கையில் நாம் காட்ட வேண்டிய உணர்வு அல்லவா?’ இவ்வாறு சிந்தித்த ஆகாஷ், வயது முதிர்ந்த தன் அம்மாவைத் தன்னுடன் அழைத்துவரத் தீர்மானித்தார். மறுநாளே அம்மாவை அழைத்து வந்ததோடு, மேடையில் அன்பு பற்றிப் பேசுவதைக் குறைத்துவிட்டு, பொதுச்சேவையில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்தார்.




உயிர் பிரியும் வேளையில் அம்மா நினைவு...

ஆகஸ்டு 08

ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு நடத்திய அணுகுண்டு தாக்குதல்கள், மனித வரலாற்றில் ஆழமான, ஆறாதக் காயங்களை உருவாக்கியுள்ளன. ஹிரோஷிமாவில் அமைந்துள்ள அமைதி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர், யோஷிடகா கவமோட்டோ (Yoshitaka Kawamoto) அவர்கள். 13 வயது நிறைந்த யோஷிடகா அவர்கள், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் தன் வகுப்பறையில் பிற மாணவர்களோடு அமர்ந்திருந்தார். அவ்வேளையில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் விளைவாக, அவரது பள்ளி தரைமட்டமானது. யோஷிடகா அவர்களும் அந்த இடிபாடுகளில் சிக்கி, நினைவிழந்தார். 40 ஆண்டுகள் சென்று, 1985ம் ஆண்டு, TIME இதழுக்கு யோஷிடகா அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:

"எனக்கு நினைவு திரும்பியதும், மனதில் தோன்றிய முதல் எண்ணம், சக மாணவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதே. என் முகத்திலும், வலது கையிலும் அடிபட்டிருந்தாலும், நான் அந்த இடிபாடுகள் நடுவே, மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றபடி, 'யாராவது உயிரோடு இருக்கிறீர்களா?' என்று குரல் கொடுத்தேன். அப்போது, அருகில், குவிந்து கிடந்த பலகைகள் நடுவிலிருந்து, என் நண்பன் ஓட்டா (Ota) கையசைத்தான். அவன்மீது குவிந்திருந்த பலகைகளை அகற்றி பார்த்தபோது, அவனது முதுகெலும்பு உடைந்திருந்ததென்று தெரிந்தது. இடதுகண்ணைக் காணவில்லை. அவன் எதையோ சொல்ல விழைந்தான். ஆனால் முடியவில்லை. அவனது உதடுகள் கிழிந்திருந்தன. தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறு குறிப்பேட்டை வெளியில் எடுத்து என்னிடம் தந்தான். அந்தக் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் அவனது தாயின் புகைப்படம் இருந்தது. அதை அவன் சுட்டிக்காட்டினான். 'இதை நான் உன் அம்மாவிடம் கொடுக்கவேண்டுமா?' என்று கேட்டபோது, அவன் 'ஆம்' என்று தலையசைத்தான். அடுத்த நிமிடம், அவனது உயிர் பிரிந்தது" என்று யோஷிடகா அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

உயிர் பிரியும் இறுதி நொடிகளில், சிறுவன் ஓட்டா, தன் அம்மாவின் நினைவுடன் விடைபெற்றான்.




முதுமைத் தாயின் விரக்தியை விரட்டிய சிறுவன்

ஆகஸ்டு 07

கிறிஸ்தவப் போதகர் ஒருவர், தனது 11 வயது மகன் பெனியுடன், ஞாயிறுக்கிழமை பிற்பகலில் நகரத்தின் தெருக்களுக்குச் சென்று, நற்செய்தி துண்டுப் பிரசுரங்களை தவறாமல் விநியோகித்து வந்தார். பனிவிழும் குளிர்காலத்தில் ஒரு ஞாயிறு பிற்பகலில், போதகர் புறப்படாமலிருந்தார். அப்பா, இன்று நாம் நகரத்திற்குப் போகவில்லையா? எனக் கேட்டான் பெனி. இல்லை மகனே, வெளியே பனி அதிகமாக விழுந்து கொண்டிருக்கின்றது என்றார் தந்தை. அப்பா, பனி விழுந்தால், நகரத்திற்கு மக்கள் போக மாட்டார்களா? எனக் கேட்டு, நான் போகிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றான் பெனி. தன்னிடமிருந்த நற்செய்தி பிரசுரங்களைக் கொடுத்து முடித்ததும், ஒன்று மீதியாக இருந்தது. வீட்டிற்குத் திரும்பிய வழியில், ஒரு வீட்டைப் பார்த்து, அழைப்பு மணியை அழுத்தினான் பெனி. கதவு திறக்கப்படவேயில்லை. தொடர்ந்து அழுத்திக்கொண்டேயிருந்தான். பின் கதவைத் தொடர்ந்து தட்டினான். அதன்பிறகு ஒரு பாட்டி கதவைத் திறந்து வெளியே பார்த்தார். பெனி சிரித்த முகத்துடன், பாட்டி, இயேசு உங்களை அன்பு செய்கிறார் என்று சொல்லி, அந்தப் பிரசுரத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றான். கதவை அடைத்துவிட்டு அதை வாசித்தார் பாட்டி. அதற்கு அடுத்த ஞாயிறு, செபக் கூட்டத்திற்கும் சென்றார் பாட்டி. புதிதாக வந்திருந்த பாட்டியிடம் போதகர் பேசினார். பாட்டி எல்லார் முன்னிலையிலும் இவ்வாறு சொன்னார்.

எனது அன்பான கணவரும் நானும் தனியாக வாழ்ந்து வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் திடீரென இறந்துவிட்டார். பின் தனிமையில் விடப்பட்டேன். உறவினர்களோ, பிள்ளைகளோ எவரும் என்னைப் பார்க்க வரவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் குடும்பங்களோடு இருக்கின்றார்கள். பின், இறைவனும் என்னைக் கைவிட்டு விட்டார் என்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்வில் விரக்தியடைந்த நான், அந்தச் சிறுவன் எனது வீட்டு அழைப்பு மணியை அழுத்திய நேரத்தில், தூக்கில் தொங்குவதற்காக, அறையில் எல்லாவற்றையும் தயார் செய்து முடித்திருந்தேன். நாற்காலியில் ஏறி, கயிற்றில் எனது கழுத்தை மாட்டப்போன நேரத்தில், அந்த மணிச் சப்தம் கேட்டது. நின்றுவிடும் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து விடாமல் மணி அடித்துக்கொண்டிருந்ததால், எரிச்சலோடு கதவைத் திறந்தேன். அந்த பிஞ்சு சிரித்த முகத்தைக் கண்டேன். அந்த சிறுவன் முகத்தில் தெரிந்த ஒளியும், அவன் கூறிய வார்த்தைகளும் என் முடிவை மாற்றின. நான் இப்போது இறைவனின் மகிழ்வான ஒரு குழந்தையாக உள்ளேன்.




1000 காகித நாரைகள் தரும் அமைதி

ஆகஸ்டு 05

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நிகழ்ந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அச்சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கும், இன்னும் பலநூறு சிறுவர், சிறுமியருக்கும் உருவான இரத்தப் புற்றுநோய், அணுக்கதிர் வீச்சினால் உருவானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடக்கோ, இனி ஓராண்டு வாழக்கூடும் என்று கூறப்பட்டது. சாவதற்கு தான் விரும்பவில்லை என்று, அவர் கூறியபோது, அச்சிறுமியின் தோழிகள், அவரிடம், 'காகித நாரைகள்' பற்றிய பாரம்பரியக் கதையைக் கூறினர்.

அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகித நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை நிறுவினர்.

இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்தது. அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக்கூடாது என்ற ஆசையும் அக்குழந்தையின் மனதில் தோன்றியிருக்கும் என்று நம்பலாம்.

இன்றும், சடக்கோவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.



கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!

ஆகஸ்டு 04

இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். அப்போது கொக்கொன்று அவர் தலைமீது எச்சமிட்டது. கோபத்துடன் அதனை அண்ணாந்துப் பார்த்ததும், கொக்கு எரிந்து கீழே விழுந்து சாம்பலானது. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன் நின்று, ‘அம்மா, பிச்சை இடுங்கள்!’ என்று கேட்டார். ‘மகனே! கொஞ்சம் இரு’, என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், ‘பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று எண்ணி முறைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, ‘மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது, கொக்கல்ல!’ என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். அவள் கால்களில் வீழ்ந்து வணங்கிய துறவி, ‘அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?’ என்று வினவினார். அதற்கு அப்பெண்மணி, ‘மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ, தவமோ, எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன் வழியாகத்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது’, என்றார்.




வேதனைகளை உள்ளத்திலே புதைத்த தாய்

ஆகஸ்டு 03

அந்தக் கிராமத்து தாய் பண்ணையார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பள்ளிக்கூட வாசனை அறியாதவர். ஆனால் பக்தியும், பண்பும், ஞானமும் நிறைந்தவர். கடின உழைப்பாளி. தனது குடும்பத்தைவிட வசதி குறைந்த, குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தனி ஆளாய், தனது கடின மற்றும், அயராத உழைப்பால், புகுந்த வீட்டை தலைநிமிரச் செய்தார் அந்தத் தாய். வெகு காலமாகப் பயிரிடாமல் தரிசாகக் கிடந்த நிலங்களையெல்லாம் மீண்டும் விளைநிலமாக்கினார். கரம்பிடித்த கணவர், படித்தவராக இருந்தாலும், பண்பில் சிறந்தவர் எனச் சொல்வதற்கில்லை. ஆறு பிள்ளைகளுக்குத் தாயான அவர், தொடர்ந்து முதல் மூன்று பிள்ளைகளையும் இழந்தார். கடைசிக் குழந்தைப் பிறந்ததிலிருந்து, கணவர் கடின நோயால் தாக்கப்பட்டார். தனது சிறு பிள்ளைகளை, உறவினரின் பொறுப்பில் விட்டுவிட்டு, கணவரை, மதுரை, புதுக்கோட்டை என, மாதக்கணக்கில், மாறி மாறி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், அந்தத் தாய், கணவரைக் காப்பாற்றுவதற்கு கடும் முயற்சிகள் எடுத்து, உயிர் பிழைக்கச் செய்தார். சேமித்த பணத்தையெல்லாம் கணவருக்காகச் செலவழித்தார். ஆனால் பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி, வெவ்வேறு நகரங்களில் குடியேறினர். தனது எழுபதாவது வயதில் கணவரை இழந்து, கிராமத்தில் தனியே வாழ்ந்த அந்தத் தாயை, அவரின் இரு மகன்களில் ஒருவர் மட்டுமே, நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிராமத்திற்குச் சென்று பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில், தாயை, தன்னோடு நகரத்திற்கு அழைத்துச் சென்றார் அந்த மகன். ஆனால், அங்குச் சென்ற ஓரிரு மாதங்களிலேயே, மகன் வீட்டில் ஏதோ பிரச்சனை, ஆனால் தாயினால் அல்ல. அதனால் வேறொரு நகரத்திலிருந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு, சில மாதங்களுக்கென தாயை அனுப்பினார் மகன். ஆனால், அங்குச் சென்ற ஒரு மாதத்திலேயே, உறவினர் வீட்டார், அந்த அப்பாவித் தாய்க்கு, இரவு உணவில், நஞ்சு கலந்து கொடுத்து, மூச்சை அடக்கிவிட்டனர். இந்தத் தாய், கணவரால் அனுபவித்த மன வேதனைகள் சொல்லும் தரமன்று. அனைத்தையும், வெளியில் காட்டிக்கொள்ளாமல், பொறுமையோடு அனுபவித்தார். அதிர்ந்து பேசாதவர், புறணிகள் பேசுவதை முற்றிலும் தவிர்த்தவர். தனது குட்டி மகளிடம், அம்மாவுக்கு இவ்வளவு துன்பங்கள் போதாது, இன்னும் துன்பங்கள் வேண்டும், ஆயினும், அம்மாவுக்குப் பொறுமை வேண்டும் என, நீ, கடவுளிடம் கேள் எனச் சொல்வார். மனவலிகள் அத்தனையையும், முணுமுணுக்காமல் பொறுமையோடு ஏற்றவர் இந்தத் தாய்.

முடக்கப்பட்ட குழந்தைகளின் உலகம்

ஆகஸ்டு 02

தன் மகள் வழிப்பேரன், திண்ணையில் தன் கண்முன்னாலேயே விளையாடிக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார், அம்புஜம் பாட்டி. அந்த 2 வயது சிறுவன், எதையோ எடுக்க அவசரமாக ஓடியதில், கால் தடுமாறி, கீழே விழுந்தான். அடி எதுவும் பலமாக படவில்லை என்பதை, தூரத்திலிருந்தேப் பார்த்து முடிவுசெய்த பாட்டி, தன் கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். சற்று எழுந்து, தன் பாட்டியைப் பார்த்த சிறுவன், தன் விளையாட்டைத் தொடர்ந்தான். 'ஏன் பாட்டி, பிள்ளையைப்போய் தூக்கி விட்டிருக்கலாமே' என்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. 'என் பேரன் மீது எனக்கு அளவு கடந்த பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குழந்தைகளைப் பொத்தி, பொத்தி வளர்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தெருவில் இறங்கி விளையாடக்கூடாதாம், புழுதி ஒத்துக்காதாம். எந்தக் குழந்தை இன்று நம் பாராம்பரிய விளையாட்டுக்களை விளையாடுகின்றது? பின் எப்படி அவர்களுக்கு மனவுறுதியும் உடலுறுதியும் கிட்டும்? இன்று குழந்தைகளிடையே போட்டிகளைத்தான் நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவனைவிட நீ அதிக மார்க் வாங்கி காண்பிக்கவேண்டும் என, பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண், இது போதும் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் கதை சொல்லி சோறு ஊட்டினோம். குழந்தைகள் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டு சோறுண்டன. இன்றோ தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு, சோறூட்டுகிறார்கள். கதைகள் சொல்லி குழந்தைகளில் ஓர் அழகான கற்பனை உலகம் உருவாக உதவிய காலங்கள் இன்றில்லை. நிலா நிலா ஓடிவா, என்ற இயற்கை பந்தங்களுக்கும் இன்று நேரமில்லை. எதை எதைச் செய்யவேண்டும் என கற்றுக் கொடுத்தோம் ஒரு காலத்தில். ஆனால் இன்றோ, குழந்தைகள் என்னச் செய்கிறார்கள் என்பதை கவனிக்க நேரமின்றி, செய்தபின், அதைச் செய்யாதே என கண்டிப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? செய்த தவறை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறோமா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்?'. இவ்வாறு, பாட்டி பேசிக்கொண்டேச் செல்ல, அந்த காலத்து இரண்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பாட்டிக்குள், இத்தனை ஏக்கம் இருக்கிறதா என, வாயடைத்துப்போய் நின்றார், பக்கத்து வீட்டுப் பெண்மணி.




கையளவு இறைச்சிக்காக...

ஆகஸ்டு 01

"முகநூலில் வெளியான ஒரு டுவிட்டர் செய்திக்காக, அல்லது, கையளவு இறைச்சிக்காக ஒருவரையொருவர் வெறுப்பது இவ்வளவு எளிதாகிவிட்டதோ?" என்ற கேள்வியுடன், 23 வயது நிறைந்த இரு இளம்பெண்கள், டில்லி சாலைகளில், அன்பைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சபிக்கா நக்வி (Sabika Naqvi) என்ற இளம்கவிஞர், டில்லியின் முக்கியமான சாலைகளின் ஓரமாக நின்று, கவிதை வரிகளை சப்தமாக வாசிக்க, அனன்யா சாட்டர்ஜி (Anannya Chatterjee) என்ற இளம் நடனக்கலைஞர், அக்கவிதை வரிகளுக்கு ஏற்றதுபோல், அபிநயங்களுடன் நடனம் ஆடுகிறார்.

சபிக்கா வாசித்த ஒரு கவிதையின் வரிகள், இதோ:

அன்பு காட்டுவது மிகக் கடினமாகவும்,

வெறுப்பது மிக எளிதாகவும் மாறியது ஏன்?

சாலையில், ஒருவரோடு அன்பைப் பகிர்வது, கடினமாகிவிட்டது;

ஆனால், ஒருவரை உயிரோடு எரிப்பது, எளிதாகிப்போனது.

நாம் அதிக அன்பு காட்டுகிறோம்.

ஆனால், நம்மைப்போல் இருப்பவரிடம் மட்டுமே,

நமது மதம், நமது சாதியைச் சார்ந்தவரிடம் மட்டுமே,

நம் கடவுளை நம்புகிறவரிடம் மட்டுமே... அவ்வளவுதான்.

எது உண்மையிலேயே எளிதானது என அறிய விழைகிறேன்...

அன்பா? வெறுப்பா?

மார்பில் கத்தியால் குத்துவதா? மார்போடு அணைப்பதா?

புன்னைகை புரிவதா? கெட்டவார்த்தைகளைக் கக்குவதா?

நாட்டிலிருந்து ஒருவரைத் தூக்கி எறிவதா? அல்லது, நாட்டுக்குள் வரவேற்பதா?

உன் ஆன்மாவைக் கேள்:

உன் உடல் மனிதத்தன்மையுடன் உள்ளது;

உன் ஆன்மாவும் மனிதத்தன்மையுடன் உள்ளதா?