Living Roasry

அன்றாடக் கடமை

ஞான வாழ்க்கையில் நேரத்தைச் சரியாகச் செலவிடுவது மிக முக்கியம் வாய்ந்தது. உனக்கே ஒரு தினக்கால அட்டவணையை எழுதிக்கொள்.  உன் கடமை ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரத்தைக் குறிப்பிடு.  அதைச் சரியாக அனுசரித்து வா.

1.காலைக் கண்விழித்ததும் சிலுவை வரைந்து என் தேவனே நான் என்னை முழுமையும் எனக்குள்ள யாவற்றையும் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல். சுறுசுறுப்பாய் குறித்த நேரத்தில் எழுந்திரு. ஒழுக்கமாய் உடுத்திக்கொள். பாடுபட்ட சுருபத்தின் முன்  அல்லது மாதா படத்தின் முன் காலை செபத்தைச் சொல்.

2.குறைந்தது கால் மணி நேரமாவது தினமும்; தியானிக்க முயற்சி எடு. ஆண்டவரின் பாடுகளைச் சிந்தி. மாதாவின் புண்ணியங்களை அல்லது வியாகுலங்களை நினை அல்லது வேதசாட்சிகள் அர்ச்சிஷ்டவர்களின் புண்ணியங்களை நினைத்துப்பார்.

3.முடிந்த மட்டும் தினசரி பூசை காணப் போகவும். அதுவே எல்லா பக்தி முயற்சிகளிளும் சிறந்ததும் கூடுதல் பலனுள்ளதுமாகும்.

4.எப்போதும் தேவ பிரசன்னத்தில் இருக்கத் தேடு. உன் எல்லாச் செயல்களையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து அவைகளை அர்ச்சிக்க கவனம் செலுத்து. எதையும் செய்யும் முன்பும் செய்யும் போதும் செய்த பின்பும் ஒரு அருள்நிறைந்த மந்திரம் சொல்லி அவைகளை மாதாவிடம் ஒப்படைக்கவும்.

5.எக்காரியத்தையும் நிதானமாயச் செய். உண்டாலும் பருகினாலும் உறங்கினாலும் உழைத்தாலும் பொழுது போக்கில் ஈடுபட்டாலும் கடவுளுக்குப் பிரியப்படத் தேடு. உண்ணுமுன்பும் பின்பும் ,செபிக்கத் தவறாதே.

6.தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஞானவாசகத்தில் செலவிடு. நற்செயிதியை புனிதர்களின் சரித்திரத்தை அல்லது ஞான நூல்களை வாசி. இதனால் உன் விசுவாசமும் பக்தியும் ஊட்டம் பெறும். உலகின் தவறான கோட்பாடுகளுக்கெதிரான போரில் நீ ஆயுதமணிந்தவனாவாய்.

7.எல்லாப் பாவத்துக்கேதுவான சந்தர்ப்பங்களையும் உரையாடல்களையும் தவிர்த்து விடு. உன் ஐம்புலன் அனைத்தின் மீதும் கட்டான காவலை வைத்துக்கொள். நாவை அடக்கு. சோம்பலாயிராதே.

8.உலகத்தன்மையான அல்லது சில்லரைத்தனமான வாசிப்பில் நேரத்தை வீணாக்காதே. அது மிக அடிக்கடி ஆத்துமத்துக்கு விஷமாகி விடும்.

9.பாவச்சோதனை ஏற்படும் போது உடனே சிலுவை வரைந்து கடவுளின் உதவியைக் கேட்டு மன்றாடு.

10.பாவத்தில் விழும் நிர்பாக்கியம் உனக்கு நேரிட்டால் மனந்தளர்ந்து விடாதே. துரிதமாக உன் மனதால் சேசுவின் பாதத்தில் விழுந்து தாழ்ச்சியுடன் அவரிடம் மன்னிப்புக்கேள். அது சாவான பாவமாயிருந்தால் (கடவுளின் நன்மைத்தனத்தையும் சேசுவின் திருப்பாடுகளையும் நினைத்து) உத்தம மனஸ்தாபப்படு. பின் எவ்வளவு விரைவில் கூடுமோ அவ்வளவு விரைவாக பாவசங்கீர்த்தனம் செய்.

11.கடவுள் உனக்கு அனுமதிக்கிற எல்லா துன்ப சோதனைகளையும் தாழ்ச்சியுடன் ஏற்று பணிந்த மனதுடன், உம்முடைய சித்தப்படி ஆகட்டும், என்று சொல்.

12.உனக்க கூடுமானால். பகல் வேளையில் மகா பரிசுத்த தேவ நற்கருணையை சந்திக்கச் செல். ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லி அதன் தேவ இரகசியங்களைத் தியானி.

13.ஒரு நாளை எப்படித் தொடங்கினாயோ அப்பழயே முடி. உன் இராச் செபங்களை முழங்காலிட்டு செபி. ஒரு ஆத்தும சோதனை செய்து அன்றைய தவறுகளுக்கு ஆண்டவரிடம் மன்னிப்புக் கேள்.

14.மிகக்குறைந்த பட்சமாக மாதம் ஒரு முறையும் முக்கிய திருநாட்களிலும் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள். ஆண்டிற்கொரு முறை தியானம் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்.

15.உன் வாழ்வை விசேஷமாய் சுகயீனமாயிருக்கும் போது கடவுளுக்கு ஒப்புக்கொடு. ஒவ்வொரு மாதமும் உன் குறிப்பிட்ட செப தினத்தில் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. அதிக நோயாயிருந்து மரணம் நெருங்குவதாகத் தெரியும் போது. அவஸ்தை பூசுதல் என்ற தேவ திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்ள துரிதப்படு.