நற்கருணைக்குரிய மரியாதை!

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் எந்த சாத்தானின் வேலையோ, நற்கருணைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த வணக்கமும், மரியாதையும் திடீரென்று குறைந்து விட்டது. சில இடங்களில் போயே விட்டது. நற்கருணை ஒழிந்தால் திருச்சபையும் ஒழியும் என்பதை நன்கு உணர்ந்த சாத்தானின் வேலையே இது என்பதில் ஐயமில்லை.

1. நற்கருணை பேழை இருக்க வேண்டிய இடம் வத்திக்கான் சங்கத்துக்குப் பின் உரோமையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுள் ஒன்று நற்கருணை பேழை எப்போதும் ஒரு பீடத்தின் மீதுதான் இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தக்க காரணம் இல்லாமல் இல்லை. பூசையில் பலியான இயேசு, பூசை முடிந்த பின்பும் பலியானவராகவே இருக்கிறார். வேறெப்படி இருக்க முடியும்? பலியானது பலியானதுதான். ஆகவே, கிறிஸ்து நற்கருணைப் பேழையில் இருக்கும் போதும் பலியான நிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் பூசைக்கு வெளியே நற்கருணை உட்கொண்டாலும் உண்மையான பலியான ஆண்டவரை உட்கொள்கிறோம் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே, பலியான நிலையில் உள்ளவரை பலி நிகழும் பீடத்தின்மீது வைத்திருப்பதே பொருத்தம் என்று திருச்சபை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஆனால், வத்திக்கான் சங்கத்திற்குப் பின் சுவருக்குள்ளே (பணப்பெட்டி போல) புதைத்து வைப்பது, தூண்மேல் வைப்பது, கோவிலில் எங்காவது ஒரு மூலையில் வைப்பது இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் சிறியதொரு மேசை மேல் வைத்து ஆண்டவருக்கு மிக அருகே அமர்ந்து ஆராதனை செய்கிறார்களாம். கிறிஸ்துவை விசுவாசத்தால் நெருங்கலாமே தவிர அருகாமையில் அல்ல. திருச்சபை ஒழுங்கை மீறி செய்யப்படும் எதுவும் நிச்சயமாக இறைவனுக்கு ஏற்காது என்பதில் ஐயமில்லை.

2. நற்கருணை பேழை கூடாரம் போல் காட்சியளிக்க வேண்டும் பேழை என்று தமிழில் வழங்கும் சொல் ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இது இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த சொல்). இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் கூடாரத்தை நினைவுறுத்துவதோடு, புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்னும் அருள்வாக்கை நினைவுறுத்துகிறது. குடிகொண்டார் என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில் கூடாரம் அடித்தார் என்ற பொருளே உண்டு என்பது மறைநூல் அறிஞர் விளக்கம். அவரும் (மனு உருவானவரும்) மனு உருவில் நம்மிடையே வாசம் செய்வது நித்தியத்துக்கல்ல. உலகம் இருக்கும் வரையில்தான் என்ற பொருளோடு, நாமும் இவ்வுலகில் கூடாரத்தில் வாழ்பவர் போல் ஒழுக வேண்டும். இது நமது நித்தியமான இல்லம் அல்ல (எபி 13:14) என்ற பொருளையும் குறிக்கவேயாம். நற்கருணைப் பேழையை வைக்க வேண்டிய முறையில் வைக்காவிட்டால் மேற்சொன்ன பொருளுக்கு இடமேயில்லையே!

3. நற்கருணையுள்ள பேழைக்கருகில் விளக்கு ஒன்று இரவும் பகலும் தொடர்ந்து எரிய வேண்டும் பழைய ஏற்பாட்டில் ஆசாரக் கூடாரம் எனப்பட்ட கூடாரத்தில் சந்நிதித் திரைக்கு வெளியே, தூய்மையான ஒலிவ எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருந்தார் (விப 27:20-21). இதன் நினைவில்தான் புதிய ஏற்பாட்டில் நற்கருணைக் கூடாரத்துக்கு முன் விளக்கு ஒன்று எரிய வேண்டும் என்ற ஒழுங்கு திருச்சபையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒலிவ எண்ணெய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனித்தே. நம் நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய் - VEGETABLE OIL. பயன்படுத்தப்பட்டு வந்தது. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எப்படியோ மண்ணெண்ணெய் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் அதுவுமில்லை. மின்சார மின்மினி விளக்குகள் உள்ளன. மின்சாரம் இல்லையென்றால் விளக்கு இல்லை. இதுதான் இன்று பல இடங்களில் நற்கருணை நாதருக்குக் காட்டப்படும் மரியாதை. மற்ற எண்ணெய் விலைகள் அதிகம் என்று சாக்குப்போக்குக் கூறுபவர்கள் இருக்கலாம். வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எத்தனையோ தேவையில்லாச் செலவுகளுக்குப் பணமிருக்க இந்த ஒன்றுக்கு மட்டும் பணமில்லாமல் போய்விட்டதா? ஆதியில் இறைவன் விளக்கு பற்றி சொன்னபோது தூய்மையான ஒலிவ எண்ணெய்யைக் கொண்டு வருமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய் (விப 27:20) என்றார். நம் பங்கு மக்களிடம் கேட்டுக் கொண்டால் கூட தேவைக்கு மேலாகவே கொண்டு வருவார்களே. பங்கு குருக்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால் தானே. மிகச்சில பங்குகளில் மட்டுமே மக்கள் எண்ணெய் கொண்டுவருவது காண்கிறோம். எண்ணெய் விளக்கு ஒருவிதத்தில் உயிருள்ள விளக்கென்னலாம். நம் முயற்சியில் சம்பாதிப்பதும் ஆகும். நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், இந்த உயிருள்ள விளக்குகளுக்குப் பஞ்சம் இராது. இந்த விளக்கு பகல் நேரத்திலாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்குமாறு கவனத்துடன் பார்த்துக் கொள்வது நற்கருணைக்குச் செலுத்தப்படும் தனி வணக்கமாகும்.

4. நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா? அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா? எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.

5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்பிட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.

6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன?

7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா? தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா? அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா? அவற்றின் கதிஎன்ன?

8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா? பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன? இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா?

நன்றி : சீயோன் குரல்


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு இறைமகன் இயேசு