அவர் செல்வாக்குப் பெருக..

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

அவர் செல்வாக்குப் பெருக வேண்டும், எனது செல்வாக்குக் குறைய வேண்டும்

ஓர் ஊரிலே அழகாக ஓவியம் வரையக்கூடிய ஓவியர் ஒருவர் இருந்தார். மக்கள் அவருடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு பாராட்டுவார்கள். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

Jesus-Baptismஒருநாள் அவர் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். அவரது ஓவியத்தைப் பார்த்துவிட்டு மக்கள் “எவ்வளவு தத்துரூபமாக ஓவியம் வரைகிறார்; இவரது ஓவியங்கள் இதயத்தையே உருக்குவது போன்று இருக்கிறது, இறைவன்பால் நம்முடைய இதயங்களைக் கொண்டுபோய் சேர்ப்பதுபோன்று இருக்கிறது” என்று பாராட்டிவிட்டுச் சென்றார்கள்.

அப்போது அங்கு வந்த ஓவியரின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஓவியரிடம், “இவ்வளவு அழகாக ஓவியம் வரையும் நீ, எதற்காக ஓவியத்திற்குக் கீழே உன்னுடைய பெயரை எழுதக்கூடாது?” என்று கேட்டார். அதற்கு அந்த ஓவியர் நண்பரை தன்னுடைய ஓவியக்கூடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே மூலையில் இருந்த தான் வணங்கும் கடவுளின் படத்தைச் சுட்டிக்காட்டினார். அந்தப் படத்திற்குக் கீழே ‘இறைவா! நான் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மக்கள் அனைவரையும் உம்பால் ஈர்க்கவேண்டும், என்னுடைய பெயர் மறையவேண்டும்” என்று எழுதியிருந்தது.

அதைச் சுட்டிக்காட்டி ஓவியர் தன்னுடைய நண்பரிடம் சொன்னார், “நான் ஓவியனாக இருப்பதற்கு எல்லா ஆசியையும் தரும் இறைவன் பெயர்தான் பரவ வேண்டும், என்னுடைய பெயரல்ல” என்றுசொல்லி முடித்தார்.

தன்னுடைய பெயர் அல்ல, இறைவன் பெயர் மட்டுமே வளரவேண்டும் என்று வாழும் அந்த ஓவியரின் வாழ்வு தாழ்ச்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவரிடம் சென்று, “நாங்கள் யூதேயாப் பகுதியில் ஒருவர் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம், அவர் உம்மிடம் ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றவர்” என்று சொல்கிறார்கள். அதற்கு திருமுழுக்கு யோவான், “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது” என்று சொல்லிவிட்டுச் சொல்கிறார், “நான் மெசியா அல்ல, மெசியாவின் முன்னோடி, மணமகன் அல்ல, மணமகனின் தோழன், ஆதலால் அவருடைய செல்வாக்குப் பெருக வேண்டும், என்னுடைய செல்வாக்குக் குறையவேண்டும்” என்கிறார்.

திருமுழுக்கு யோவான் தன்னுடைய பெயரல்ல, இறைவனின் பெயரே விளங்கவேண்டும்” என்று சொல்லி தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அதனால்தான் இயேசு நற்செய்தியின் இன்னொரு பகுதியில் “மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் ஒருவரில்லை என்று பாராட்டுகிறார் (லூக் 7:28). ஆகவே ஒரு மனிதரின் தாழ்ச்சி, பணிவு, அடக்கம் அவரை எல்லா மனிதரைவிடவும் மேலானவராக உயர்த்தும் என்பதே இங்கு நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு காரியமாக இருக்கிறது.

இன்று திருமுழுக்கு யோவானிடம் விளங்கிய பணிவும், தாழ்ச்சியும் நம்மிடம் இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒரு சாதாரண காரியத்தைச் செய்துவிட்டு நம்முடைய பெயர் என்றைக்கும் நிலைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் திருமுழுக்கு யோவான் அப்படியல்ல. அவர் எல்லா பெருமையும், மாட்சியும் கடவுளுக்கு மட்டுமே உரியது என்று வாழ்ந்து வந்தார். அத்தகைய வாழ்வு வாழ நாமும் முயற்சி எடுக்கவேண்டும்.

சீராக்கின் ஞானநூல் 18:21 ல் படிக்கின்றோம், “நோய்வாய்ப்படும் முன் உன்னையே தாழ்த்திடு, அதுவே உனக்கு நலம்பயக்கும்” என்று.

ஆகவே திருமுழுக்கு யோவானிடம் விளங்கிய தாழ்ச்சி என்ற பண்பை நமதாக்கிக் கொள்வோம். இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.