நல்லெண்ணம்.

எண்ணங்கள் வெறும் சிந்தனைகள் கருத்துக்கள் அல்ல. சிந்தனைகளையும் கருத்துக்களையும் இரவல் வாங்கலாம். அவை எல்லாமே நமது வாழ்வில் ஊன்றியவையாக இருக்கும் என்பதில்லை. இதனால்தான் ‘சாத்தானும் விவிலியம் ஓதும்’ என்றும், ‘படிப்பது ரமாயாணம் இடிப்பது பெருமாள் கோவில்’ என்றும் சொல்ல கேள்விப்பட்டிருகிறோம். ஆனால் சில சிந்தனைகள், கருத்துக்கள் மட்டும் எண்ணங்களாக பரிணமித்து நமது வாழ்வில் ஊன்றி தாக்கம் ஏற்படுத்தும். இவ்வாறு எண்ணங்களாக உருவெடுத்தவைகள்தான் உலகில் நிகழும் எல்லா செயல்பாட்டிற்கும் ஆற்றலின் ஊற்றாக இருக்கின்றன.

உலகில் அரங்கேறும் நல்லவைகளும் அல்லவைகளும் முதலில் யாரோ ஒருவரின் உள்ளத்தில் எண்ணங்களாக ஊற்றெடுத்து அரங்கேறிவிட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. உளவியளார்கள் எண்ணத்திற்கும், உணர்விற்கும் நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை ஒருமித்து ஏற்றுக்கொள்கின்றனர். நமது நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் அதன் பின்னணியில் உள்ள உணர்ச்சியின் மட்டில் கவனம் செலுத்தவேண்டும். அந்த உணர்ச்சியை வழிப்படுத்தவேண்டுமென்றால் அதன்பின் இயங்கிக்கொண்டிருக்கின்ற எண்ண ஓட்டத்தை சீரமைக்கவேண்டும்.

உற்பத்தி திரண்கொண்டு இயங்கும் இயந்திரங்களும் கணிணிகளும் ஆக்கப்பூர்வமாக ஆய்வாளர்களின்Mandela நல்லெண்ணங்களில் தோற்றம் கண்டவைகளே. அணுவில் ஒளிந்திருந்த ஆற்றலை அடையாளம் கண்டது அனுவியல் அறிஞர் ஒருவர். அதனை அழிவின் ஆற்றலாக மாற்றியது யாரோ ஒருவரின் மனத்தில் எழுந்த தீய எண்ணம் தான். ஹிரோசிமா நாகசகி போன்ற இடங்களில் வேண்டுமென்று வெடிக்க செய்ததும் யாரோ ஒரு அதிபரின் எண்ணத்தில் எழுந்த தீய எண்ணம்தான். இருபத்தேழு ஆண்டுகள் சிறையிருப்பை முடித்துக்கொண்டு வெளியேவந்த நெல்சன்மண்டேலாவை அவர் சகாக்கள், ‘உம்மை வதைத்த மனிதர்களை என்ன செய்யப்போகிறீர்?’ என்றதற்கு, ‘நாம் அவர்களோடு சேர்ந்து நமது நாட்டை எப்படி கட்டலாம் என்று சிந்திப்போம்’ என்றாராம். இன்று தென்ஆப்பிரிக்கா மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இயேசுபிரான், ஒரு முறை அலகையினால் அலைக்கழிக்கப்பட்ட ஒருவனை தனது சொல்லால் அடக்கியபோது, அதனை கண்கொண்டு பார்த்த மக்கள்கூட்டம் வியந்தது, அவரைப் போற்றியது. ஆனால் அங்கு அவரில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக காத்துக்கொண்டிருந்த கற்றவர்கூட்டம் அவர் பேய்களின் தலைவன் சக்திக்கொண்டு பேய் ஓட்டுகிறார் என்று அவச்சொல் பேசியது. இயேசுபிரான் செய்த நல்ல செயலை நல்லதாக கணிக்கமுடியாதவர்களாக நல்லெண்ணம் அற்றவர்களாக இருந்தனர் அந்த கற்றவர்கள். எண்ணங்கள் தம்மிலேயே நல்லது கெட்டது என்று பாகுபாடற்றதுதான். அதனை நல்லதாகவும் தீயதாகவும் ஆக்குவது நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டம்.

நல்லதை நல்லதாக கணித்து அதில் பெருமைப்பாராட்டுவது நல்லெண்ணம் கொண்டிருத்தலின் அடையாளம். 'எல்லோரும் எல்லாமே பெறவேண்டும்’ ‘யாதும் ஊரோ யாவரும் கேளிர்’ ‘யாவரும் இன்புற்றிருப்பது அல்லாமல் வேரொன்றையும் அறியேன் பராபரனே’ என்ற சான்றோரின் மொழிகள் அவர்கள்; கொண்டிருந்த நல்லெண்ணத்தை சுட்டிக்காட்டுகின்றன. அவை தான் தனது, வேண்டியவர் வேண்டாதவர், விருப்பு வெறுப்பு, லாபம் நஷ்டம் என்று பாகுபாட்டை எல்லாம் கடந்த கண்ணோட்டத்தின் வெளிப்பாடுகள்.

நமது எண்ணங்களை தீயதாக ஆக்குவதில் முன்சார்பு கணிப்பு முதலிடம் பெறுகிறது. இதனை சுட்டிக்காட்டி இயேசுபிரான் ‘முதலில் உன் கண்ணில் உள்ள விட்டத்தை எடுத்தெறி, பின் பிறர்கண்ணில் உள்ள துரும்பை எடுக்க உனக்கு நன்றாக கண்தெரியும் ’ என்கிறார். புறத்திலும் மற்றவரிலும் நாம் காணும் குற்றமும் குறையும் நம்மிடம் குவிந்துகிடக்கும் குறைகள் குற்றங்களின் பிம்பங்கள் என்று உணருவேம். தண்ணீர் உள்ள ஒரு குவலையை பார்க்கும் இருவரில் ஒருவர் குவலை பாதி வெறுமையாக உள்ளது எனலாம். மற்றவர் குவலை பாதி நிறம்பியுள்ளது என்று சொல்லலாம். நல்லெண்ணம் உலகையும், பிறமனிதரையும், வாழ்க்கை எதார்த்தங்களையும் நேர்மறையாக கணித்து அவற்றை கையாள உதவவேண்டும்.

அருட்திரு தந்தை திவாகர் க.ச. பங்கு தந்தை பாத்திமா ஆலயம் கோயம்புத்தூர்.