புத்தாண்டு இறையாசீர்

அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பது நம் மூதாதையர் சொன்ன பழமொழி. ஒரு வருடம் கழிந்து மீண்டும் ஒரு புதிய ஆண்டை இறைவன் நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்.

இப்புதிய ஆண்டில் நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்த, கீழ் வரும் நிகழ்ச்சி நமக்கு உதவியாக இருக்கும்.

ஒரு நாட்டில் அரசன் இருந்தான். அவன் தன்னிடம் நம்பிக்கையாயிருந்த பணியாளரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான். தனக்குக் கிடைத்தச் சுவையான, சிறப்பான பொருள்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான் , ஒருநாள் காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தபோது அங்குக் கிடைத்த ஒரு மரத்தின் கனியைக் கொடுத்தான். “பழம் எப்படி?” என்று அரசன் கேட்க, “சுவையாக இருக்கிறது அரசே” என்றான் பணியாளன். நிறைய கொடுத்த பிறகு, கடைசி பழத்தை தன் வாயில் போட்டான் அரசன். ஒரே கசப்பு! பழத்தைத் துப்பினான்.

“இவ்வளவு கசப்பான பழத்தைச் சுவையாக இருக்கிறது என்று சாப்பிட்டாயே ஏன்?” என்று அரசன் கேட்க, "அரசே, இவ்வளவு நாள் எனக்குச் சுவையானதைக் கொடுத்தீர்கள். இன்று ஒரு நாள் நீங்கள் கொடுத்த கசப்பான பழத்தை நான் உண்ணக்கூடாதா? பழம் கசப்புதான். ஆனால் பழத்தைக் கொடுத்த உங்கள் அன்பு பெரிது” என்றான் பணியாளன். கிறிஸ்து நம்மீது கொண்டுள்ள அன்பு ஈடு இணையற்றது. கிறிஸ்துவுக்குப் பிரதி அன்பு காட்டத் தினமும் முயல்வோம். நமது வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறிவருவது இயற்கையே.

கடந்த வருடத்தில் கடவுள் நம்மை எப்படி அன்பு செய்துள்ளார் என்று திரும்பிப் பார்ப்போம். புதிய வருடத்தில் நமக்காகப் புதுப்புதுக் கொடைகளைக் கொடுக்க இறைவன் காத்துக் கொண்டிருக்கின்றார். நமது கடவுள் ஆச்சரியத்திற்குள்ள கடவுள். அதிசயங்களைச் செய்கின்ற கடவுள். எதிர்பாராத விதமாக நம்மோடு நடந்து பல அரிய பெரிய காரியங்களை நம் வாழ்வில் நடத்த இருக்கின்றார்.

நாம் பெற்றிருக்கின்ற புதிய ஆண்டில் கடவுள் நல்லதைக் கொடுத்தால் மட்டும் அவரை அன்பு செய்வேன், நமக்குகந்த சுவையான காரியங்களை மட்டும் ஏற்றுக்கொள்வேன். எனக்குப் பிடிக்காத காரியங்கள் என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்தால் அவரைப் புறக்கணிப்பேன் என்று கூறாமல், எது வந்தாலும் அதை நான் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொள்வேன் என்று நாம் வாழ்ந்தால் இப்புதிய ஆண்டில் எக்காரியமும் நம்மைச் சோகத்தில் ஆழ்த்தாது.

மகிழ்ச்சியைப் பிறர் நமக்குத் தரமுடியாது. எல்லாம் நம் கையில் இருக்கின்றது. வாழ்ந்தாலும், இறந்தாலும், அவருக்கே என்ற மனப்பக்குவம் நமக்குத் தேவை.

கடந்ததை மறந்துவிட்டு, வரும் அருளை எதிர்நோக்கி நம் வாழ்க்கைப் பயணத்தில் ஓடுவோம். 'இறைவா, நேற்று இரவு வரை என்னைக் காத்து வந்ததற்காக நன்றி' என்று சொல்லி மகிழ்ச்சியாக வாழ்வோம். நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொண்டு இரட்டிப்பான மகிழ்ச்சியில் திளைப்போம். இறையாசீர் என்றும் உங்களோடு...!



மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு