ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

ஈசாப் கதை இது.

பறவை ஒன்று ஒருநாள் கனவு கண்டது. அந்த கனவில் கவலையே இல்லாத, எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் ஓரிடம் இருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு எப்படிச் செல்வது என்றுதான் பறவைக்குத் தெரியவே இல்லை.

அடுத்த நாள் அந்தப் பறவை ஒரு ஜோசியரை அணுகி, கனவில் தான் கண்ட இடத்திற்கு எப்படிச் செல்வது என்று வழி கேட்டது. அதற்கு ஜோசியர், “தனக்கு அந்த கனவு தேசத்திற்குச் செல்வதற்கான வழி ஒரு குறிப்பிட்ட தூரம்வரைதான் தெரியும், அதற்குப்பிறகு தெரியாது” என்றார். அத்தோடு பறவைக்கு வழி சொன்னதற்குச் சன்மானமாக இறகு ஒன்றைத் தரவேண்டும்” என்று கேட்டார். பறவையும் ஒரு இறகுதானே, போனால் போகட்டும்” என்று சொல்லிவிட்டு இறகைக் கொடுத்துவிட்டு வழி நடந்தது.

ஜோசியர் சொன்னது போன்றே கனவு தேசத்திற்குச் செல்வதற்கான வழியில் நடந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும், அதற்குத் தொடர்ந்து செல்வதற்கான வழிதெரியவில்லை. எனவே யாராவது அருகே இருந்தால் அவர்களிடம் வழியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போது ஒரு மரத்திற்குக் கீழே நரி ஒன்று இளைப்பாறிக்கொண்டிருந்தது அந்த நரியிடம் வழியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று அதனிடம் கனவு தேசத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்டது.

அதற்கு நரி, “எனக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் வழி தெரியும், அதன்பிறகு வழி தெரியாது” என்றது. மேலும் அந்த வழியைச் சொன்னால் அதற்கு சன்மானமாக ஓர் இறகைத் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. “இறகுதானே, போனால் போகட்டும்” என்று சொல்லி, அந்தப் பறவை இன்னொரு இறகையும் கொடுத்துவிட்டு கனவு தேசத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது. இப்படியாக அந்தப் பறவை கனவுத் தேசத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்பதும், அதற்கு சன்மானமாக தன்னுடைய உடலிலிருந்து ஓர் இறகைக் கொடுப்பதும் என்று தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஒருவழியாக அந்தப் பறவை கனவு தேசம் இருக்கும் பகுதிக்கு மிக அருகாமையில் வந்தது. ஆனால், அதனால் உள்ளே செல்ல முடியவில்லை. ஏனென்றால் பறவை தன்னுடைய உடலில் இருந்த அத்தனை இறகுகளையும் பறிகொடுத்துவிட்டு, வெறுங்கூடாக கனவுதேசத்தின் வாசலுக்கு முன்பாகச் செத்து மடிந்தது.

இறைவனின் அரசைத் தேடிச் செல்லும் நாம், பாதியிலே உலக மாயைக்குள், சிற்றின்ப நாட்டத்திற்குள் சிக்கிச் சீரழிந்து போய்விடுகின்றோம் என்பதை இக்கதையானது மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு மகதல மரியாளுக்குக் காட்சிகொடுக்கிறார். இந்த மகதல மரியா யார்? இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பாக உலகப்போக்கிலான, தவறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவள். அப்படிப்பட்ட பெண்மணி இயேசுவைச் சந்தித்தப் பிறகு, அவர்பின்னே செல்கிறாள். இயேசுதான் எனக்கு எல்லாம் என்று வாழத் தொடங்குகிறாள்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் உடல் கல்லறையில் இல்லாததைக் கண்டு, “என் ஆண்டவரின் உடலை எங்கே?” என்று தேடித் தேடி அலைகிறாள். அவள் விடா முயற்சியோடு தேடியதன் பயனாக உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் கண்டுகொள்கிறார். ஆக, நாம் ஒவ்வொருவரும் உலக காரியங்களை விட்டுவிட்டு, இறைவனைத் தேட வேண்டும். அப்போதுதான் அவர் அளிக்கும் மகிழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இறைவாக்கினர் ஆமோஸ் புத்தகம் 5:6 ல் வாசிக்கின்றோம், “ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்” என்று. மகதலா மரியா ஆண்டவர் இயேசுவை முழுவதுமாய் தேடினாள், அதனால் கண்டுகொண்டாள். நாமும் இறைவனைத் தேடுவோம். அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.



 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது