நமக்காகத் துன்புறும் இயேசு

அருட்திரு. அந்தோனி ராஜ் பாளையங்கோட்டை

மறையுரைச் சிந்தனை - குருத்து ஞாயிறு

Jubliee Year

பாரதநாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் தாய் ஸ்வரூப்ராணி. இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனை. ஒருமுறை அவர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர் அவரது தலையில் கடுமையாகத் தாக்க, அப்படியே அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனால் தலையில் பெரிய கட்டுப்போடப்பட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இது நடந்து சிலநாட்களுக்குப் பிறகு, மீண்டுமாக ரேபரேல் என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் ஸ்வரூப்ராணியின் மகனாகிய பண்டித ஜவகர்லால் நேருவும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாய் ஸ்வரூப்ராணி அங்கே சென்றிருந்தார்.

தலையில் அதே பெரிய கட்டுடன் தன்னுடைய தாய் அங்கே வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நேரு, “எதற்குமா இப்படி தலையில் காயத்தை வைத்துக்கொண்டு இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய், “அன்பு மகனே! இது காயம் கிடையாது, விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பாரதத்தாய் எனக்குக் கொடுத்த பதக்கம். ஓவ்வொரு முறையும் இந்தக் காயத்தைப் பார்க்கும்போது அதை நான் பாரதத்தாய் எனக்குத் தந்த பரிசாகவே பார்க்கிறேன்” என்றார். தாயின் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டதும் நேரு நாட்டிற்காக இன்னும் உத்வேகத்துடன் போராட துணிவு பெற்றார்.

நாட்டிற்காக, உண்மைக்காக போராடுவதனால் கிடைக்கும் காயங்கள் எல்லாம் பதக்கங்களே என்பதை இந்நிகழ்வானது நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் வழியாக ஆண்டவர் பட்ட பாடுகளை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்க அழைக்கப்படுகின்றோம். இயேசு பட்ட பாடுகள், காயங்கள் எல்லாம் அவர் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு; தன்னையே பலியாகத் தந்த தியாகத்தின் வெளிப்பாடு.

நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேம் நகரிலே வெற்றிவீரராய் பவனி வருகின்றார். அவரை சூழ்ந்துநிற்கின்ற மக்கள் ஒலிவக் கிளைகள் பிடித்து, ஓசான்னா கீதம்பாடி வரவேற்கிறார்கள்.

செக்கரியாப் புத்தகம் 9:9-10 ஆகிய வாசனங்களில் படிக்கின்றோம். “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்” என்று. அந்த இறைவார்த்தையை நிறைவு செய்துவது போன்று இருக்கின்றது இயேசுவின் இந்த எருசலேம் பவனி. ஆம், இயேசு இந்த உலகத்திற்கு அமைதியை, மீட்பைத் தரவந்தார். அதைத் தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக நிறைவேற்றித் தந்தார் என்பது ஆழமான நம்பிக்கை, விசுவாசம் எல்லாம்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைக் குறித்துப் பேசுவார். அந்த துன்புறும் ஊழியன் ‘இயேசுவே’ என்பது விவிலிய அறிஞர்கள் கூறக்கூடிய செய்தி. “மெசியாவாகிய அவர் அடிப்போருக்கு முதுகையும், தாடையைப் பிடுங்குவோருக்கு தாடையையும் கொடுத்தார்; நிந்தனை செய்வோருக்கும், காரி உமிழ்வோருக்கும் அவர் தனது முகத்தை மறைக்கவில்லை”. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கடவுள் வடியில் இருந்த அவர் (இயேசு) தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் கோலம் பூண்டு, சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்கிறார்” என்று. இப்படியாக இயேசு காயங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் துணிவோடு ஏற்றுக்கொள்கிறார்.

இவை எல்லாம் யாருக்காக? அவருடைய பிள்ளைகளாகிய நமக்காகத் தான். எனவே அவரது பிள்ளைகளாக,சீடர்களாக இருக்கக்கூடிய நாம், இயேசுவைப் போன்று துன்பங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு பிறர் விழா நம்மையே தரும் மக்களாக வேண்டும்.

புத்தரின் சீடர்களில் ஒருவரான பூர்ணா என்பவர் ஒருமுறை தியானம் செய்துகொண்டிருந்த ‘சுரோணப் பிரந்தா என்னும் இடத்திற்குச் சென்று போதிக்கவேண்டும்’ என்று உள்ளுணவர்வால் உணர்த்தப்பட்டார். இச்செய்தியை அவர் மற்ற சீடர்களிடம் போய் சொன்னபோது அவர்கள் அவரிடம் “அந்த இடத்திற்குப் போகவேண்டாம்” என்று எச்சரித்தார்கள். ஏனென்றால் அங்கே வாழக்கூடிய மக்கள் கரடு முரடானவர்கள். கடின உள்ளத்தினர்.

பூர்ணா மனந்தளராமல் அச்செய்தியை புத்தரிடம் எடுத்துச் சொன்னார். புத்தர் அதைக் கேட்டுவிட்டு, “அன்பு மகனே! சரோணாப் பிரந்தா பகுதியில் உள்ளவர்கள் மிகவும் கடின உள்ளத்தினர் என்பதை நீ அறிவாய். அப்படிப்பட்ட மக்களுக்கு நீ போதிக்கின்றபோது உன்னை அவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசைபாடினால் நீ என்னசெய்வாய்?” என்று கேட்டார். அதற்கு பூர்ணா, “சுரோணாப் பிரந்தா பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், நட்பு பாராட்டுபவர்கள். ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கவில்லையே என்று சந்தோசப்படுவேன்” என்றார்.

புத்தர் தொடர்ந்து அவரிடம், ஒருவேளை அப்பகுதி மக்கள் உன்னை அடித்தார்கள் என்றால் நீ என்ன செய்வாய்” என்றார். அதற்கு அவர், “சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர்கள். ஏனென்றால் அவர்கள் என்னை கொடிய ஆயுதங்களால் தாக்கவில்லையே என்று சந்தோசப்படுவேன்” என்றார். மீண்டும் புத்தர், “ஒருவேளை அவர்கள் உன்னை கொடிய ஆயுதங்களால் தாக்கினால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டார். அதற்கு அவர், சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர். ஏனென்றால் அவர்கள் என்னுடைய உயிரைப் பறிக்கவில்லையே என்று சந்தோசப்படுவேன்” என்றார்.

மறுபடியும் புத்தர் அவரிடம், “ஒருவேளை அவர்கள் உன்னுடைய உயிரை எடுத்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர்கள். ஏனென்றால் அவர்கள் என்னுடைய உயிரை இந்த உடலிலிருந்து விடுவித்துவிட்டார்கள் என்று சந்தோசப்படுவேன்” என்றார். இதைக் கேட்ட புத்தர் அவரிடம், “அன்பு மகனே பூர்ணா! உண்மையில் நீ மிகப்பெரியவன் என்னுடைய போதனையைப் பரப்புவதற்காக சாவையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டாய். ஆதலால் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை, என்னுடைய ஆசீர் என்றும் உன்னோடு” என்று சொல்லி அவரை ஆசிர்வதித்து, வழியனுப்பினார்.

இயேசுவின் சீடர்களாக, அவருடைய பணியைத் தொடரும் ஒவ்வொருவரும் துன்பங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனத்துணிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் உறுதியான மனநிலையில் இயேசுவுக்காக பணிசெய்ய முடியும். இயேசு கிறிஸ்துகூட நிந்தை அவமானங்களை, துன்பங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார். ஆகையால் நாமும் இறைபணி ஆற்றும்போது வரக்கூடிய துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எழுத்தாளர் வெ.இறையன்பு ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “நம்மைப் பயமுறுத்துகின்ற நிகழ்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, அவற்றைத் துணிச்சலாக ஏற்றுக்கொள்வதுதான்” என்று. ஓர் ஆன்மீக எழுத்தாளரும் இவ்வாறு கூறுவார், “கடவுளிடம், என்னுடைய பிரச்சனைகள் பெரிது என்று கூறாதே. மாறாக பிரச்சனைகளிடம், என்னுடைய கடவுள் மிகப்பெரியவர் என்று கூறு” என்று. ஆகவே இயேசுவின் பணியைச் செய்யக்கூடிய நமக்கு வரக்கூடிய துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம், இறைவனின் பாதுகாப்பை உணர்வோம்.

அடுத்ததாக நாம் இறைவனின் பணியைச் செய்கின்றபோது அவரின் பாதுகாப்பும், அவர் தரும் கைமாறும் நமக்கு என்றும் உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறுவார், “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அசைவுறேன்” என்று. ஆம், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று உணர்ந்து வாழ்கின்றபோது நம்மால் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்ள முடியும். பவுலடியாரும் இதே கருத்தைதான் இன்னும் உறுதிபடச் சொல்வார், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு” என்று (பிலி 4:13). எனவே இறைவனின் பாதுகாப்பை உணர்ந்த மக்களாக வாழ்வோம்.

ஒருமுறை மறைப்பணியாளர் ஒருவரும், அவருடைய நண்பரும் ஓர் ஊரில் போதித்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய போதனையைப் பிடிக்காத ஒருசிலர் அவர்களை கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் அந்த கொலைகாரர்களிடமிருந்து தப்பித்து வேறொரு இடத்திற்கு ஓடுகிறார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அந்த கொலைகாரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தே வந்தார்கள்.

போகிற வழியில் மறைப்பணியாளரின் நண்பர் அவரிடம், “ஒருவேளை கொலைகாரார்களின் கையில் நாம் அகப்பட்டால் நாம் அவ்வளவுதான். இந்த தனிக்காட்டில் நாம் இருவரும் என்ன செய்ய?” என்று வினவினார். அதற்கு அவர், “நாம் இருவர் என்று சொல்லாதே, மூவர் என்று சொல். ஏனென்றால் நம்மோடு கடவுள் இருக்கிறார். ஆகையால் நீ எதைக் குறித்தும் கவலைப்படாதே” என்றார்.

அப்போது அங்கே ஒரு குகை இருந்தது. உடனே அவர்கள் இருவரும் அந்தக் குகைக்குள் ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கொலைகாரர்கள் அவர்கள் இருவரையும் காணாது சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அருகே இருக்கும் குகைக்குள்போய் அவர்கள் பதுங்கிக்கொண்டார்களா? என்ற சந்தேகப்பட்ட ஒருவன் குகையின் வாசலுக்கு அருகே வந்தான். ஆனால் குகையின் வாசலில் அப்போதுதான் ஒரு சிலந்தி தன்னுடைய வலையைப் பின்னியிருந்தது. இதைக் கவனித்த அவன் குகைக்குள் அவர்கள் போயிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லி அங்கிருந்த நகர்ந்தான்.

உள்ளே இருந்த மறைப்பணியாளரும், அவருடைய நண்பரும் கடவுள் நம் அருகில் இருந்து நம்மைக் காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்து போற்றினார்கள்.

கடவுளை நம்பி வாழும் இறையடியார் ஒவ்வொருவருக்கும் கடவுளின் பாதுகாப்பும், அருளும் என்றும் உண்டு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

ஆகவே பாடுகளின் குருத்து ஞாயிறை சிறப்பாகக் கொண்டாடும் நாம் இந்த நல்ல நாளில் இயேசு நமக்காகப் பட்ட பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்போம். அதோடு மட்டுமல்லாமல், நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மையே தருவோம். இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.


,