உயிர்ப்பின் உண்மை கருவியாக...

எழுவதின் இரகசியம் விழுவது!
விளைவதின் இரகசியம் புதைவது!
உயிர்ப்பின் இரகசியம் மடிவது!
இது இயற்கையின் நியதி!
இறைவனின் நியதி!
இந்த நீதியின் வழி நின்று தன் மகனின் இறப்பு - உயிர்ப்பு வழியாக இறைவன் மனிதனுக்கு மீட்பு வழங்குகின்றார். இந்த மீட்பு தான் கிறிஸ்துவத்தின் ஆணிவேர் -ஏனென்றால் கிறிஸ்துவம் இறைவனின் மீட்பு திட்டத்தின் வெளிப்பாடு!

கிறிஸ்துவத்தின் நெறி முறைகள் தவக்காலத்திலும், கடந்த உயிர்ப்பு திட்டத்தில் நிறைவாகின்றது. மனித உறவில் பிறந்த இயேசு இறந்து சாவை வென்று இறைமனித தன்மையில் உயிர்த்துவிட்டார். அகிலத்தை பாவத்திலிருந்து மீட்டுவிட்டார். . நம் இறைமைந்தன் இயேசுவே தினம் திருப்பலியில் பலியாகின்றார். தொடர் உறவின் கொடுமுடியாக "நற்கருணை" எனும் அருட்சாதனத்தில் தன்னை வாரி வழங்கி வருகின்றார். எனவே, உயிர்ப்பின் மேன்மை உணர்ந்தவர்களாக நாம் வாழ, வளர உயிர்ப்பு ஞாயிறு அழைப்பு விடுக்கின்றது.

"உனையன்றி உனை படைத்த இறைவன்
உன் துணையன்றி உனை மீட்க மாட்டார்."
மிக ஆழமான கருத்துகள் பொதிந்த புனித அகுஸ்தினாரின் இந்த வரிகளே உயிர்ப்பு எனும் ஆன்மீகத்தின் சாரம்.
கடவுளின் ஓரே மகனாகிய இயேசு கிறிஸ்து அடிமையின் கோலம் பூண்டார். தமது மீட்பால் முழுமையாக அர்ப்பணித்து வெறுமையானார். பாவம் என்னும் அடிமை வாழ்விலிருந்து விடுவித்து இறைவனின் மக்களாக நம்மை மாற்றுகின்றது இந்த உயிர்ப்பு தான்..

இந்த மீட்பை நிலைநிறுத்தி கொள்வது அவரவர் கைகளில் தான் உள்ளது. மீட்பு எனும் கொடை அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதை நமதாக்கி வாழ்வது நமது வாழ்க்கை முறையினால் தான் என்பதை உணர்ந்திடுவோம். உயிர்ப்பின் உண்மை கருவியாக மாறிடுவோம்.! உயிர்த்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
 

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர் சென்னை.