பாஸ்கா புகழுரை

விண்ணகத் தூதர் அணி மகிழ்வதாக;
இப்புனித நிகழ்வில் பெருமகிழ்ச்சி பொங்குவதாக;
மாபெரும் மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெரும் சுடர்களால் ஒளிவீசப்பெற்று இவ்வுலகம் பெருமகிழ்ச்சி கொள்வதாக:
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி,
தன்னைச் சூழ்ந்த இருள் அனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
இப்பெரும் சுடர்களால் அழகுபெற்று
அன்னையாம் திரு அவையும் களிகூர்வதாக.
எனவே மக்கள் அனைவரின் பேரொலியால்
இக்கோவில் எதிரொலித்து முழங்குவதாக.


(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்து நிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
உங்களை வேண்டுகின்றேன். என்னுடன் சேர்ந்து,
எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவீர்களாக.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திட
அருள்கூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என் மீது வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
 
கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடும் முழு மனதோடும் வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

ஆதாமினால் வந்த கடனைக்
கிறிஸ்துவே என்றுமுள்ள தந்தைக்கு நமது பெயரால் செலுத்தி,
பாவத்துக்கு உரிய கடன்சீட்டைத்
தாம் சிந்திய திரு இரத்தத்தால் அழித்துவிட்டார்.

ஏனெனில் பாஸ்கா விழா இதுவே:
இதில் மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்;
அவரது இரத்தத்தால் நம்பிக்கையாளரின் கதவு நிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் எம் முன்னோரான இஸ்ரயேல் மக்களை
நீர் எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் கால் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

'நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவு இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும்
இந்த இரவேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்
இந்த இரவிலேதான்.

ஏனெனில் இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்,
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது அருள்கூர்ந்து காட்டிய பரிவிரக்கம்
எத்துணை வியப்புக்கு உரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த
அளவில்லா அன்புப் பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்கக்
கிறிஸ்துவின் சாவு திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைந்ததால்
பேறுபெற்ற குற்றமே!

ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த
காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும்
என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;
தவறினோருக்கு மாசின்மையையும்
துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;
பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது;
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே தூய தந்தையே, அருள்பொழியும் இவ்விரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்;
தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்
புனிதத் திரு அவை தன் பணியாளரின் கையால்
மிகச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

இறைவனின் மாட்சிக்காகச் செந்தழலாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்:
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்கு கொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை;
ஏனெனில் தாய்த் தேனீ தந்த மெழுகு உருகுவதால்
உயர்மதிப்புள்ள தீ வளர்க்கப்படுகின்றது.

விண்ணுக்கு உரியவை மண்ணுக்கு உரியவையோடும்
கடவுளுக்கு உரியவை மனிதருக்கு உரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பேறுபெற்ற இந்த இரவிலேதான்

எனவே ஆண்டவரே, உம்மை வேண்டுகின்றோம்:
உமது பெயரின் மாட்சிக்காக நேர்ந்தளிக்கப்பட்ட இந்த மெழுகுதிரி,
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்து கொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஒருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்;
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின் மீது அமைதியுடன் ஒளி வீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

பதில்: ஆமென்.
	
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு