நிலை வாழ்வை அடைய ''நாம் என்ன செய்யவேண்டும்''.

பேராசிரியர் அ. குழந்தை ராஜ் - காரைக்குடி

நிலை வாழ்வை அடையநிலை வாழ்வு அடைய நாம் என்னன்னவெல்லாம் முயற்சி செய்கிறோம். பூசைக்கருத்து ஒப்புக்கொடுப்பது, மெழுகுத்திரி ஏற்றுவது, ஜெபமாலை சொல்வது, திருத்தலங்களுக்குச் செல்வது, பைபிளை வாசிப்பது இத்யாதி இத்யாதிச் செய்கிறோம். ஒரு பாஸ்டிங் பிரேயர், ஒருசந்திப் போன்றவற்றைச் செய்து விட்டு மோட்சக் கதவு எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சிலர் மோட்சத்தின் திறவு கோலை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இது தவிர ஏழு முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி, குணமளிக்கும் வழிபாடுப் போன்றவற்றில் மனநிறைவு அடைகிறோம்.

இதை வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது போதாது என்று தான் கூறுகிறேன் லூக் 3-10 நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கூட்டத்தினர் கேட்டார்கள். அதற்குப் பதில் “இரண்டு அங்கி உள்ளவன் ஒன்றை கொடுத்து விடவேண்டுமென்கிறார்" திருமுழுக்கு யோவான். நம்ம வீட்டில் எத்துனைத் தேவைக்கு அதிகமான ஆடைகள் உள்ளன. இதைக் கொடுக்க மனம் வருகிறதா? பழைய கிழிந்தத் துணிகளல்ல. மாறாகப் புதுத் துணிகளைக் கொடுக்க மனம் வருகிறதா?

வரி தண்டுவோர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு மேல் வசூலிக்காதீர்கள்". நம் கல்விநிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கும் பணம் எவ்வளவு? படை வீரர்கள் நாங்கள் என்ன செய்யவேண்டும் கேட்டதற்கு “எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள், பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள் உங்கள் ஊதியமே போதும் என்று இருங்கள்” என்கிறார்.

யோவான் 6-28ல் நாங்கள் என்ன செய்யவேண்டும். என்று சீடர்கள் கேட்டதற்கு இயேசு கூறியதாவது “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்றச் செயல்” என்று கூறுகிறார். “மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்றச் செயல்களால் காட்டவேண்டும்” (திரு. பணி 26-20 ).

இப்போதையத் திருவிழாக் காலங்களிலும் வேகவேகமாகச் சப்பரத்தைச் சுற்றிவந்து விட்டு ஒரு கூண்டிற்குள் அடைத்து விட்டு இரவே 10 மணிக்கு மேல் கலக்கல் டான்ஸ் போடுகிறார்கள் இதை அனைவரும் ஆனந்தமாக ரசித்துப் பார்க்கிறார்கள். பரிவட்டம் கட்டுகிறார்கள். மாதாவுக்குப் பட்டுச் சேலை உடுத்துகிறார்கள். கண்ணுக்குத் தெரிந்த ரோட்டோரமாக இருக்கும் மாதாவை விட்டு விட்டுப் பீடத்தில் உள்ள மாதாவுக்கு இவ்வளவு வேண்டுமா? மாதா இதை விரும்புவர்களா?

நாம் பெரும்பாலும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் நம்மை நாம் புனிதர் நிலைக்கு உயர்த்திகொள்ளுகிறோம்.