நினைத்துப் பார், நன்றி சொல்!
ஆண்டின் இறுதிநாள்

அருள்திரு இ.லூர்துராஜ்

''ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று. உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று'' (தி.பா.92:1).

எப்பொழுதும் சுறுசுறுப்பான, நெரிசல் நிறைந்த அந்த உணவு விடுதிக்குள் ஒரு பெரியவர் சென்று இருக்கையில் அமர்ந்தார். அறிமுகமில்லாத இன்னொருவர் 'நானும் உங்களோடு இணைந்து கொள்ளலாமா என்று கேட்க, தாராளமாக' என்றார் பெரியவர்.

உணவு பரிமாறப்பட்டது. வழக்கம்போல் பெரியவர் தலை தாழ்த்திச் செபித்தார். அதைக்கண்ட நண்பர் ‘தலை வலிக்கிறதா?' என்று கேட்க 'இல்லை' என்றார் பெரியவர். “ஒருவேளை உணவில் ஏதாவது கோளாறா?” என்று கேட்க, அதற்கும் இல்லை' என்றார் பெரியவர். “பின் ஏன் ஒருமாதிரி தலைகுனிந்திருக்கிறீர்கள்? தலை வலியோ, உணவில் குறைபாடோ” என்று நினைத்து விட்டேன்.

“நான் எப்பொழுதும் இந்த உணவைத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் உணவருந்துவேன்” என்று பெரியவர் சொல்ல, நண்பர் சொன்னார்: “இந்த உணவுக்காக நான் யாருக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை. வியர்வை சிந்த நான் உழைத்துப் பெற்ற உணவு இது” சொல்லிக்கொண்டே உணவை அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். உடனே பெரியவர் சொன்னார்: “எங்கள் வீட்டு நாய் கூட அப்படித்தான். கடவுளுக்கு நன்றி கூறி உண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை".

எல்லா நலன்களுக்கும் இறைவனே ஊற்று என்பதை மறந்து விடுகிறோம். “நல்ல கொடைகள் அனைத்தும் நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன " (யாக்கோபு 1:17) 'நன்றி' என்று மிருகங்கள் சொல்லாமல் இருக்கலாம். நன்றியுள்ள மனிதர்கள் எப்போதும் சொல்வார்கள். நன்றியுணர்வு ஏதோ ஒரு நிகழ்வோடு தொடர்புடையதாக மட்டுமல்ல, அது ஒரு தொடர் மனநிலையாக அமைய வேண்டும்.

திருப்பாடல்களில் இழையோடும் நமது நன்றியுணர்வு வாசகம்: திருப்பாடல் 103:3-5.

  • நம்மைப் படைத்தற்காக நன்றி கூருவோம். “அஞ்சாதே, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் நான் உமக்கு நன்றி நவில்கின்றேன். உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்” (தி.பா.139:14)
  • நம் மீட்புக்காக, வழி நடத்துதலுக்காக நன்றி கூருவோம். ''அஞ்சாதே நான் உன்னை மீட்டுக் கொண்டேன். உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன். நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன். ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா. தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய், நெருப்பு உன்மேல் பற்றி எரியாது” (எசா.43:1-2)
  • இறைவனின் கனிவான செயல்களுக்காக நன்றி கூருவோம். “என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே” (தி.பா.103:2) ஏனெனில் -
  1. "அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார்'' (தி.பா.103:3) நாம் எல்லோரும் பாவிகள். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். "அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கேற்ப நம்மைத் தண்டிப்பதில்லை (தி.பா.103:10)
  2. “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்" (தி.பா.103:3) இன்றையச் சுற்றுச்சூழல் மாசுபட்ட நிலையில், எங்கணும் நோய்க் கிருமிகள் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் நாம் உயிர் வாழ்கிறோம் என்றால் காரணம் இறைவனின் பேரருளே!
  3. "அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கிறார்” (தி.பா.103:4) இளம்வயதில் விதவைக்கோலம், மருத்துவர் கைவிட நோயின் உச்சம் என்று எல்லாம் முடிந்தது என்பது போல் நம்பிக்கை இழந்து தவிக்கும் போது அவர் நம்மை அழிவினின்று கை தூக்கி விடுகிறார்.
  4. “பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகிறார்" (தி.பா.103:4). இறைவனின் பேரருளே எப்போதும் நம்மைத் தாங்குகிறது. வழி நடத்துகிறது. அவருக்கு அஞ்சி வாழ்வோரிடம் ஆயிரம் தலைமுறை வரை அவரது இரக்கம் இருக்கும்.
  5. "உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கிறார். உன் இளமை கழுகின் இளமையென புதிதாய்ப் பொலிவுறும்'' (தி.பா.103:5) அவர் தரும் நலன்களால் வாழ்கிறோம். அவர்தரும் பலத்தால் நடமாடுகிறோம்.

இந்த ஆண்டில் என்ன நன்மையைக் கண்டோம் என்று நொந்து போய் இருக்கிறீர்களா? நம்புங்கள், கடவுளால் எல்லாம் கூடும்.

கடவுளால் ஆகாதது ஒன்று உண்டு. அது தீமை செய்வது இயல்பாகவே இறைவனால் தீங்கு செய்ய முடியாது.

ஆனால் அவரால் தீமையை நன்மையாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் வாழ்க்கை நிகழ்ச்சி. எகிப்தில் அவர் தன் சகோதரர்களைச் சந்தித்த போது சொன்ன வார்த்தைகள்: "யோசேப்பு அவர்களிடம் அஞ்சாதீர்கள். நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல் திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்” (தொ.நூ.50:20). அவர்கள் மட்டும் யோசேப்புக்கு எதிராக செயல்படாமல் இருந்திருந்தால் அன்று யாக்கோபின் குலமே பட்டினியால் மடிந்திருக்கும்.

"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் உம் விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன்''. (தி.பா.119:71)