ஏன் அஞ்சுகிறீர்கள்? நம்பிக்கை இல்லையா?
அருள்மொழி :பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். மாற்கு 4:40
வார்த்தை வாழ்வாக:
இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் சீடர்களை அக்கரைக்கு அழைத்தச் செல்கின்றார். பெரும் புயல்அடித்தது. படகு கடலலைகளின் மோதலால் தள்ளாடியது. இயேசு உறங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அச்சத்தோடு இயேசுவின் உடனிறுத்தலை உணரமுடியாமல் நம்பிக்கையற்றவர்களாகக் கூச்சலிட்டனர். அப்போது "போதகரே" என்று இயேசுவை எழுப்பியபோது இறைமகன் ஏன் அஞ்சுகிறீர்கள்? இறைமைந்தன் உடனிருக்கின்றார். இனி ஏன் அஞ்ச வேண்டும்? நம்பிக்கை உமக்கு இல்லையா? என்ற சாடுகின்றார். காற்றையும் கடலையும் ஒரு நொடியில் அடக்குகின்றார். இதனை கண்ட சீடர்கள் மிகுந்த அச்சத்தோடு இவர் யாராக இருப்பார், காற்றும் கடலும் அடங்கி போகின்றதே என்று எண்ணி வியந்தார்கள்.
அன்பர்களே! இறைமகனின் உடனிருத்தல் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். கடுகு அளவு விசுவாசம் இருந்தாலே நாம் இந்த வையகத்தை திடமாக வரம் வர முடியும். இறைநம்பிக்கை நம்மில் நன்கு ஊன்றப்பட வேண்டும் என்பதை மறவாதீர்கள். "அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்ற வரிகளை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம்.
சுயஆய்வு :அன்பு இயேசுவே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மில் அசைக்க முடியாத நம்பிக்கை அருளும் வரம் தாரும் ஆமென்..