இன்றைய நற்செய்தி:

மாற்கு 3:20-21

மதிமயங்கி இருக்கிறார்

அருள்மொழி :

அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டு வரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மாற்கு 3:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவை மக்கள் கூட்டம் பின் தொடர்ந்ததை கண்டு அவர் மக்கள் மீது பரிவுக் கொண்டு அவர்களது தேவைகளைச் செய்து கொண்டிருந்தார். நேரம் போனதும் தெரியவில்லை, பசியும் எடுக்கவில்லை. அவரது பசி அனைவரின் தேவைகளை குறிப்பறிந்து தீர்த்து வைப்பதே தன் வருகையின் உச்சகட்டம் என்பதை உணர்ந்து அல்லும் பகலும் அவர்களோடு இருந்தார். இதை கண்ட மறைநூல் அறிஞர்கள் "பெயல்செபூல் பிடித்திருக்கிறது" என்றும், எனவே தான் இத்தகைய ஆற்றலோடு பணியாற்ற முடிகின்றது என்ற பேசுவதை கேட்ட இயேசுவின் உறவினர்கள் அவரை அழைத்து செல்ல விரும்பினர். ஆனால் இயேசுவோ தந்தையின் மீட்புதிட்டத்தை நிறைவு செய்வதில் மதிமயங்கி இருந்தார். இதனை உணரமுடியாத அன்றைய மக்களும் சரி இன்றைய சூழலிலும் சரி இறைமகனின் வாஞ்சையோடு செய்பவர்களை இப்படி தான் பார்க்கின்றார்கள். நண்பர்களே! நாமும் இறைமகனின் மீட்பு திட்டத்தில் பணியாற்ற அல்லும் பகலும் பசியறியாது பணியாற்ற அழைக்கப் பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்திடுவோம். தூயஆவி நம்மில் நிலைக் கொண்டு நமது பணியை ஊக்குவிப்பராக!

சுயஆய்வு :
  1. மதிமயங்கியிருக்கின்றார் என்பதின் கருப்பொருளை உணர்கின்றேனா?
  2. அவரது திட்டத்திற்கு எனது முயற்சி என்ன?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! மக்களின் மத்தியில் உமது மீட்பு பணியில் நான் தொடர்ந்து பணியாற்ற தூய ஆவியாரின் ஆற்றலை வழங்கி வரம் தாரும். ஆமென்.