நீதித்தலைவர்கள் நூலில் பெண்கள்

அருட்தந்தை ஏசு கருணாநிதி

('நீதித்தலைவர்கள் நூலில் பெண்கள்' என்று சிந்திக்கலாம். பெண்களைப் பற்றித்தான் அல்லது பெண்களைப் பற்றியேதான் சிந்திக்க வேண்டுமா? என கேட்க வேண்டாம். இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்கள் நிறைய ஆச்சர்யங்களைத் தருகின்றார்கள்)

லேவியரின் மறுமனைவி

அவர் அவளிடம், 'எழுந்திரு! புறப்படுவோம்' என்றார். பதில் இல்லை. எனவே அவர் அவளைக் கழுதை மீத தூக்கி வைத்துத் தன் வீட்டை நோக்கிச் சென்றார். (நீதி 19:28)

கோபம் - வேசித்தனம் - கண்டுகொள்ளாத்தன்மை - குடிவெறி - சொல்பேச்சு கேளாமை - ஓரினச் சேர்க்கை - வன்முறை - கற்பழிப்பு - படுகொலை

இந்த எல்லா வார்த்தைகளின் உருவகமாக இருக்கின்றது நீதி 19.

இதை வாசிப்பவர்களுக்கு, விவிலியத்தில் - இறைவார்த்தையில் - இப்படியொரு கொடூரமான நிகழ்வு நடப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இருக்கிறது இந்தப் பகுதி.

கதைக்கு வருவோம்.

லேவியர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு ஒரு மறுமனைவி (வைப்பாட்டி). லேவியர்கள் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள். இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அருட்பணியாளர்களாக இருப்பவர்கள். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் துர்மாதிரியாக இருக்கிறார். இதுவே முதல் பிறழ்வு.

இவரின் மறுமனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். காலங்காலமாக பெண்கள் செய்யும் விடயம்தான் என்றாலும்(!), இங்கே 'வேசித்தனம்' செய்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணவனைப் பிரிந்து தனியே இருக்கும் பெண்ணுக்குப் பாலியல் பிறழ்வுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததால் இங்கே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அவள் போன நான்காம் மாதம், லேவியர் அவளை அழைத்துவர தன் வேலையாள் மற்றும் இரு கழுதைகளோடு புறப்பட்டுச் செல்கிறார். அவள் போன நாலைந்து நாட்களில் அவளைத் தேடினால் பரவாயில்லை. இவர் நான்கு மாதம் காத்திருக்கின்றார்.

'நம்ம மாப்ள வந்திருக்கார்' என்று மனம் மகிழ்ந்த பெண்ணின் அப்பா, 'மூன்று நாட்கள் இருந்து நல்லா ஜாலியா இருந்துட்டு போங்க!' என்று விருந்து வைக்கின்றார். மூன்று நாட்கள் குடித்து முடித்த லேவியர் பயணத்துக்குப் புறப்படும்போது, 'இன்னும் ஒரு நாள் இருங்க!' என்கிறார் மாமா. நான்காம் நாளும் குடிக்கிறார் லேவியர். 'சரி மாமா நாங்க கிளம்புறோம்!' என ஐந்தாம் நாள் சொல்ல, 'இருங்க மாப்ள, மெதுவா போகலாம்' என இன்னும் ஊற்றிக்கொடுக்கின்றார் மாமா. ஐந்தாம் நாள் மாலையாயிற்று. 'மாமா, நாங்க கண்டிப்பா போயே ஆகணும்!' என தன் மறுமனைவியுடன் புறப்படுகின்றார் லேவியர்.

போகும் வழியிலேயே சூரியன் மறையத் தொடங்குகிறது. 'சூரியன் மறையத் தொடங்கினான்' என்ற சொல்லாடலே, 'ஏதோ நடக்குப் போகிறது!' என்று வாசகரை அலர்ட் செய்கிறது.

'நாம் எபூசு (வேற்று மனிதர்களின் நாடு) சென்று அங்கே இரவைக் கழிப்போம்!' என்று ஐடியாக் கொடுக்கின்றான் வேலைக்காரன்.

'இல்லை! நம் சொந்த மனிதர்கள் இருக்கும் பிபயாவில் போய் இரவைக் கழிப்போம்' என்று மறுமொழி சொல்கின்றார் லேவியர்.

கிபயாவுக்குப் போகிறார்கள். ஆனால் அவர்கள் ஊருக்குள் நுழைந்தவுடன் யாரும் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைக்கவில்லை. பாலைவன சமூகத்தில் 'விருந்தோம்பல்,' அல்லது 'அந்நியரை வரவேற்றல்' என்பது மிக முக்கியமான பண்பு. இதுதான் எல்லாப் பண்புகளிலும் மேலானதாகக் கருதப்பட்டது. ஏனெனில் பாலைநிலத்தில் வெட்ட வெளியில் தங்குவது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தானது. ஆனால் இங்கே விருந்தோம்பல் செய்ய யாருமில்லை.

அந்நேரம் வயலிலிருந்து வீடு திரும்பும் ஒரு முதியவர், 'வாங்க! என் வீட்டில் வந்து தங்குங்க!' என அழைக்கிறார்.

இவர்களும் செல்கின்றனர். சாப்பிட்டுவிட்டு குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்நகரின் இழிமனிதர்கள் அவ்வீட்டின் கதவைத் தட்டுகின்றனர். 'டேய் கிழவா! உன் வீட்டுக்கு வந்திருக்கும் அந்த மனிதனை வெளியே அனுப்பு. நாங்கள் அவனோடு உறவு கொள்ள வேண்டும்' என சத்தம் போடுகின்றனர்.

தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் அது விருந்தோம்பல் விதிக்கு முரணானது. ஆகையால், அந்த முதியவர், 'வேண்டாம்! இந்தக் கொடிய செயலைச் செய்யாதீர்கள் அந்த மனிதனுக்கு. வேண்டுமானால், கன்னியான என் மகளையும், அவரின் மறுமனைவியையும் வெளியே கொண்டு வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்' என்கிறார்.

விருந்திற்கு வந்திருக்கும் மறுமனைவிக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் வந்திருக்கும் ஆணுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதிலேயே தெரிகிறது பெண்களுக்கு இச்சமூகம் கொடுத்திருந்த அங்கீகாரம்.

அவர்கள் கேட்பதாக இல்லை.

இதற்கிடையில் லேவியர் தன் மனைவியை வெளியே தள்ளிவிடுகின்றார். தள்ளி விட்டு கதவை அடைத்து மீண்டும் முதியவரோடு சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கின்றார். வெளியே தள்ளப்பட்ட மறுமனைவியோடு இரவு முழுவதும் வைகறை வரை நகரத்தார் உறவுகொண்டு இழிவு படுத்துகின்றனர். இதைக் கண்டுகொள்ளாமல் குடித்துக் கொண்டிருக்கவும், தூங்கவும் அந்த லேவியருக்கு எப்படி மனம் வந்திருக்கும்?

விடிந்துவிட்டது. பயணத்துக்குத் தயாராகிவிட்டார் லேவியர். கதவைத் திறக்கிறார். வெளியே கதவின் நிலையில் சாய்ந்து கிடக்கிறாள் மறுமனைவி. அவள் உயிரோடு இருக்கிறாளா, அல்லது இறந்துவிட்டாளா என்று கூட கண்டுகொள்ளாத லேவியர் அவளை அப்படியே கழுதை மேல் ஏற்றி வழிநடக்கின்றார்.

தன் வீட்டிற்கு வருகின்றார். அவளின் உடலை ஒரு கத்தியால் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டுகின்றார். அவள் எப்போது இறந்தாள்? கழுதையில் ஏற்றும்போதா? அல்லது வழியிலா? அல்லது இவன் கத்தியால் குத்தும்போதா?

துண்டுகளாய்க் கூறுபோட்ட லேவியர், இஸ்ரயேலின் பன்னிரு குலத்துக்கும் பன்னிரு துண்டுகளை அனுப்புகின்றார்.

நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி தரம் தாழ்ந்து போயிருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

கதை முழுவதும் மறுமனைவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளின் மௌனம் நமக்கு பெரிய அலறலாகக் கேட்கின்றது.

கழுதைக்கும், வேலையாளுக்கும் இருந்து மரியாதை கூட அந்தப் பெண்ணுக்கு இல்லை.

கணவனும் மதிக்கவில்லை. தந்தை வீட்டிலும் ஏற்கப்படவில்லை. அந்நிய நாட்டில் அவமானம் மற்றும் கற்பழிப்பு. சொந்தக் கணவனின் கையால் படுகொலை. லேவியரின் தன்னலம் மற்றும் தன்மையப்போக்கு, கண்டுகொள்ளாத்தன்மை மற்றும் குடிவெறி கண்டிக்கத்தக்கதே.

அவரின் இந்த எல்லா தீய குணங்களுக்கும் பலிகடாவாகிறாள் ஒரு பச்சிளம் பெண்!

Top

மீக்காவின் அம்மா

மீக்கா தன் அம்மாவிடம், 'உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்' என்றார். அப்பொழுது அவர் தாய், 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்றார். (நீதி 17:2)

'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்'

- இந்த வசனம் நீதித்தலைவர்கள் நூலில் நான்கு முறை வருகின்றது. நீதித்தலைவர்கள் நூல் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி இருந்தது என்பதை இது படம்பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் நேர்மையாகச் செயல்பட்டனர் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் தனக்கு எது சரி என்று பட்டதோ அதைச் செய்து கொண்டிருந்தனர்.

இன்றைய நம் சிந்தனையின் நாயகி 'மீக்காவின் அம்மா'

'மீக்கா' என்றால் 'யார் நிகர்?' என்பது பொருள். இந்த மீக்கா எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்தவர். இங்கேதான் யாவே வழிபாடு சிறப்பாக இருந்தது.

இவரின் அம்மா வைத்திருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள் திருடு போய்விடுகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவருடைய மகனே இதைத் திருடியிருக்கின்றார். சொந்த வீட்டிலேயே திருட்டா? 'நான் தான் திருடினேன்' என மீக்கா சொல்ல, அவரைக் கடிந்து கொள்வதற்குப் பதிலாக, அவரை வாழ்த்துகின்றார் அவரின் அம்மா. ஒருவேளை காசு கிடைத்த மகிழ்ச்சியில் வாழ்த்தினாரோ? அல்லது 'நீ ஒரு நல்ல திருடன்' என்று வாழ்த்தினாரோ?

'இதை நீயே வைத்துக்கொள்!' என்று தன் மகனிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுக்கும் தாய், அந்தக் காசுகளை வைத்து, செதுக்கிய உருவமும், வார்ப்புச் சிலையும் செய்யும்படி கேட்கிறாள். மகனும் அப்படியே செய்கிறார்.

செதுக்கிய உருவம் என்பது மரத்தில் செதுக்கப்படும் சிலை.

வார்ப்புச் சிலை என்பது உலோகங்களை உருக்கி, வார்ப்பில் இட்டு செய்யப்படும் சிலை.

ஆக, சிலைவழிபாடு கண்டிக்கப்பட்டு, ஆண்டவரை மட்டுமே வழிபட வேண்டிய இடத்தில், ஆண்டவர் ஓரங்கட்டப்பட்டு, சிலைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் யாருடையவை என்றும் நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து மீக்கா, தன் சிற்றாலயத்திற்கென்று ஒரு குருவையும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தச் சிலைகள் திருடப்பட்டுவிடுகின்றன.

மீக்காவின் அம்மா - ஒரு புதிர்.

Top

தெலீலா

தெலீலா சிம்சோனிடம், 'மனம் திறந்து பேசாமல் நீர் என்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை' என்றாள். அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். (நீதி 16:15-16)

வீட்டிற்கு அடிக்கடி வந்து பாலைக் குடித்துவிட்டுச் செல்லும் பூனையை திருத்துவதற்கு கிராமத்தில் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாலை நன்றாகச் சுட வைத்து, கொதிக்க கொதிக்க அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைப்பார்கள். அதில் நாக்கை வைத்துச் சுட்டுக்கொள்ளும் பூனை மறுபடி பாலின் பக்கமே செல்லாது.

பூனை கற்றுக்கொள்ளும் அளவிற்குக் கூட சிம்சோன் கற்றுக்கொள்ளவில்லை.

திம்னாத்தில் உள்ள பெண்ணால் சூடுபட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு என நிறைய 'பட்டாலும்' சிம்சோன் இப்போது மூன்றாவதாக ஒரு பெண்ணிடம் தொடர்பு கொள்கின்றார். அவர் தொடர்பு கொண்ட இரண்டாம் பெண் காசாவின் விலைமகள். தான் முதலில் ஏமாற்றப்பட்டபோது, அது அந்தப் பெண்ணுக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும், அந்தப் பெண்ணின் ஊருக்கும் அழிவாய் முடிகிறது. இவ்வளவு அழிவு என்னால் நேர்ந்துவிட்டதே! என்ற வருத்தம் சிம்சோனிடம் அறவே இல்லை.

ஆகையால்தான் தெலீலாவின் மடியில் போய் விழுகின்றார்.

'தெலீலா' என்றால் 'மென்மை' அல்லது 'மென்மையானவள்' என்பது பொருள்.

சிம்சோனின் வீக்னஸ் என்ன என்பதை தெரிந்துகொள்ள, அவரின் வீக்னஸையே பயன்படுத்துகின்றனர் பெலிஸ்தியர். ஆம், பெண் என்ற வீக்னஸைப் பயன்படுத்தி, அவரின் திறன் எதில் அடங்கி இருக்கிறது என காண விழைகின்றனர். இந்த டீலை முடித்துக் கொடுக்க தெலீலாவுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை 'ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள்.'

'உன் ஆற்றல் எதில் அடங்கியுள்ளது?' என்று தெலீலா மும்முறை கேட்க, மும்முறையும் 'அங்கே, இங்கே' என ஏமாற்றி விடுகிறார் சிம்சோன். முதல் முறை இவர் ஏமாற்ற, பெலிஸ்தியர் அவர்மேல் பாய்ந்தபோது, அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கலாம். ஏமாற்றப்படுவதற்காக தன்னையே வலிந்து தருகின்றார். நான்காம் முறை, தெலீலா ரொம்பவே உருக, உயிர் போகுமளவிற்கு நச்சரிக்கப்படும் சிம்சோன், தன் ஆற்றலின் இரகசியத்தைச் சொல்லிவிடுகின்றார்.

'என்னிடம் மறைக்கிறீர்! என்னை ஏமாற்றுகிறீர்!' என்று உருகும் தெலீலா, தானும் அவரிடமிருந்து மறைக்கும் தன் இரகசிய திட்டம் பற்றி ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார்.

இந்த நேரத்தில் சிம்சோன் சபை உரையாளரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்திருந்திருந்தால், தப்பியிருப்பார்:

'சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும். உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்...மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையும் நான் கண்டதில்லை.' (சஉ 7:26-28) (சபை உரையாளரின் இந்த வார்த்தைகள் இன்றுவரை மறைபொருளாகவே இருக்கின்றன!)

தெலீலா ஒரு புத்திசாலி! சிம்சோனின் காம வேட்கையை வைத்து பணம் சம்பாதித்து விடுகிறாள்.

'தம்பி சிம்சோன் ஒன்றைப் புரிந்துகொள்: 'there is no such thing as a free lunch. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை நீ கொடுக்க வேண்டும்!'' எனச் சொல்லாமல் சொல்கிறாள் தெலீலா.

Top

திமினாத்தின் இளம்பெண்

சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், 'நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுதலை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே' என்றாள். அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர்முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்துவிட்டாள். (நீதி 14:16-17)

சிம்சோனுக்கு இளம் வயது ஆகிவிட்டது. திம்னாத் என்ற பெலிஸ்தியரின் ஊருக்குச் செல்கின்றார். அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார். 'அவளை எனக்கு மணம் முடியுங்கள்!' என தன் அம்மா-அப்பாவிடம் சொல்கிறார். 'தம்பி, நம்ம சொந்தத்திலேயே எவ்ளோ பொண்ணுங்க இருக்க, நீ அந்த விருத்தசேதனம் செய்யாதவன் வீட்டுலயா பொண்ணு எடுக்கணும்?' என்று புலம்பித் தவிக்கிறாள் அம்மா. மகன் விடுவதாயில்லை. 'எனக்கு அவா தான் வேணும்!' என்று அடம்பிடிக்கிறான் மகன். பெற்றோர்-பிள்ளை சகிதம் பெண் பார்க்கப் போகிறார்கள்.

'நீங்க போய்கிட்டே இருங்க, நான் வர்றேன்!' என சொல்லிவிட்டு கொஞ்சம் பின் நடக்கும் சிம்சோன், தன்னைத் தாக்க வந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொல்கின்றார்.

திம்னாத்துக்குப் போகிறார். பெண்ணுடன் பேசுகிறார். அவள் அவருக்குப் பிடித்தவராகத் தெரிகிறார்.

சில நாள்களுக்குப் பின் அவளைக் கூட்டிச் செல்ல பெற்றோர்-மகன் என மறுபடியும் திம்னாத் செல்கின்றனர். வழியில் தான் கொன்ற சிங்கத்தின் நிலை என்னாயிற்று என பார்க்கிறார் சிம்சோன். தேனீக்கள் சிங்கத்தின் பிணத்தில் கூடுகட்டியிருக்கின்றன. அந்தத் தேனை எடுத்து தான் நக்கியதும் அல்லாமல், தன் பெற்றோருக்கும் கொடுக்கின்றார்.

சிம்சோனின் முதல் தீட்டு இது. கடவுளுக்கான நாசீராக இருப்பவர் எந்தப் பிணத்தின் அருகிலும் செல்லக்கூடாது. அப்படியிருக்க, சிம்சோன் சிங்கத்தின் பிணத்தின் அருகில் சென்றதோடல்லாமல், அதில் கட்டியிருந்த தேனையும் பருகுகின்றார்.

திருமண வீடு. முப்பது நண்பர்கள். நன்றாகக் குடிக்கின்றார் சிம்சோன். குடித்தல் இரண்டாம் தீட்டு. வந்திருந்த நண்பர்களுக்கு விடுகதை ஒன்றைப் போடுகின்றார்:

'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது.'

விடை சொன்னால் நான் உங்களுக்கு 30 நார்ப்பட்டாடை (இன்றைய மதிப்புக்கு 30 லட்சம் ரூபாய்). சொல்லாவிட்டால் நீங்க எனக்கு கொடுக்கணும்.

விடை தெரியாத உறவுக்காரப் பையன்கள் சிம்சோனின் காதலி-மனைவியிடம் சென்று பயமுறுத்துகிறார்கள். 'நீ விடையைக் கேட்டுச் சொல். இல்லையென்றால் உன்னையும் உன் வீட்டையும் கொளுத்திவிடுவோம்!'

தன் கையிலிருந்த ஒரே ஆயுதமான அழுகையைப் பயன்படுத்தி விடுகதையின் விடையை சிம்சோனிடம் கேட்டுப்பெறுகிறாள் இளம்பெண்.

அவள் அவர்களிடம் சொல்ல, அவர்கள் அவனிடம் சொல்கிறார்கள்.

நம் கதாநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக அஸ்கலோன் சென்று அங்கிருந்த 30 பிலிஸ்தியர்களைக் கொன்று, அவர்களின் நார்ப்பட்டாடைகளைக் கொண்டு வந்து வந்து குவிக்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து தன் மனைவியைப் பார்க்க ஓர் ஆட்டுக்குட்டியுடன் வருகின்றார்.

இதற்கிடையில் அவரின் மனைவியை அவரின் மணமகன்தோழனுக்கு தாரை வார்த்துவிடுகிறார் அவளின் அப்பா. 'நீ அவளோடு தங்கையைக் கட்டிக்கொள்!' என்கிறார். மறுபடியும் கோபம் கொண்ட சிம்சோன் திம்னாத் நகரின் வயலைத் தீக்கிரையாக்குகிறார். கோபம் கொண்ட ஊர் மக்கள் இளம்பெண்ணையும், அவளின் அப்பாவையும் நெருப்பில் எரிக்கின்றனர்.

பார்க்கிறாள். பேசுகிறாள். அழுகிறாள். இரகசியம் உடைக்கிறாள். தீக்கிரையாகிறாள்.திம்னாத்தின் இளம்பெண்.

இந்தப் பெண்ணின் இறப்புக்கு யார் காரணம்?

இந்த நிகழ்வில் வரும் எல்லாரையும் காரணமாகச் சொல்லலாம். நாம் எங்கே நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து குற்றவாளி மாறுவார்.

சிம்சோன் மயக்க நினைத்தார். அந்த மயக்கத்தை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

கணவனா? உறவுக்கார பையன்களா? என்ற கேள்வி வரும்போது, கணவனைக் கைகழுவுகின்றாள் பெண்.

விடுகதைக்கு விடையும் கேள்வியாகவே இருக்கின்றது:

'தேனினும் இனியது எது?

சிங்கத்தினும் வலியது எது?'

Top

சிம்சோனின் அம்மா

மனோவாகு தம் மனைவியிடம், 'நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' என்றார். அவர் மனைவி அவரிடம், 'ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார். இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்' என்றார். (நீதி 13:22-23)

'ஐயோ! எல்லாம் போச்சு!' என்று பதறிய தன் கணவனுக்கு நம்பிக்கை ஊட்டும் இந்த புத்திசாலி மனைவி யார்?

இவர்தான் சிம்சோனின் (சாம்சன்) அம்மா.

சிம்சோனின் அம்மாவை கற்பனை செய்து பார்த்தால் நம் கிராமங்களில் காடு மேடுகளென்று பாராமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டு திரியும், 20 முதல் 25 வயதுவரை உள்ள, சாதாரண குடும்ப பின்புலத்தைக் கொண்ட, ஏற்றிக் கட்டிய சேலை, கையில் நீண்ட கம்பு, மற்றொரு கையில் தூக்குச்சட்டி, கழுத்தில் ஒரு துண்டு, கழுத்தில் மஞ்சளா, வெள்ளையா என்று தெரியாமல் வெளிறிப்போன தாலிக்கயிறு, அந்தக் கயிற்றில் சில ஊக்குகள், ஒரு முருகன் டாலர், காதுகளின் கம்மலை அடகு வைத்துவிட்டு, ஓட்டைகள் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக சொருகப்பட்ட வேப்ப இலைக் குச்சிகள், வறண்ட சருமம், கலைந்த முடியைக் கொண்ட, ஒரு அலமேலு, அல்லது முருகேசுவரி, அல்லது ருக்குமணிதான் நினைவிற்கு வருகிறார்.

சிம்சோனின் அம்மா ரொம்ப சாதாரணமான பொண்ணு.

கடவுள் என்னவோ சாதாரணமானவர்களைத் தேடியே போகிறார். இந்தச் சின்னப் பொண்ணுக்கு இருக்கும் ஒரே கவலை 'குழந்தையின்மை.' தன் கண்முன்னே தான் வளர்த்த ஆடுகள் எல்லாம் குட்டிகள் போட்டு பலுகிப் பெருக, தான் மட்டும் முதிர்கன்னியாகவே இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும், அதைப்பற்றி அவள் வருந்தவில்லை. 'சாப்பிடவே வழியில்லையாம்! இதுல குழந்தை குட்டிகள் வேறா!' என்று கூட தனக்குத் தானே தைரியம் சொல்லியிருப்பாள். அல்லது 'எல்லாம் நல்லதுக்குத்தான்! நடக்கும்போது நடக்கட்டும்!' என்று காத்திருப்பாள்.

இவள் தன் கணவனின் பெயரை வைத்தே அறியப்படுகிறாள். 'அங்க போறது யாரு? மனோவாகு பொண்டாட்டியா!' என்றுதான் பக்கத்து வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் பேசியிருப்பார்கள்.

இவளைத் தேடி வருகிறார் ஆண்டவரின் தூதர். 'இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்!' என்று தொடங்கி ஏதேதோ சொல்கின்றார். மரியாள், 'ஆமென்!' என்று சொல்லியது போல, இந்தப் பெண் ஒன்றும் பதில் சொல்லவில்லை. நேரே தன் கணவனிடம் ஓடுகிறாள். 'என்னங்க! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்குக் காலையில ஆடு மேய்ச்சுகிட்டு இருந்தப்போ...' என்று தொடங்கி ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றாள்.

இவளின் கணவன் ஓர் ஆர்வக்கோளாறு. அதே நேரத்தில் கடவுள் பக்தியும் உள்ளவர். 'ஐயா! கடவுளே! இன்னைக்கு வந்த தூதர் மறுபடியும் ஒரு நாள் வரட்டும்!' என்று கடவுளிடம் கேட்கி;ன்றார். தன் மனைவி சொல்வதை நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கடவுளின் தூதர் மறுபடியும் வருகின்றார். ஆனா, இப்போவும் இந்தப் பொண்ணு தனியா வயலில் நின்றுகொண்டு இருக்கிறாள். இரண்டு முறையும் இவள் தனியாக நிற்கக் காரணம் என்ன? 'குழந்தையில்லை' என்பதால் ஒருவேளை மனோவாகு இவளுடன் ஒட்டவில்லையோ? காரணம் தெரியவில்லை.

'ஐயா! ஒரு நிமிட் இருங்க! என் ஹஸ்பெண்டைக் கூட்டி வருகிறேன்!' என்று அரைகுறை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தன் கணவனைத் தேடி ஓடுகிறாள். கணவனும் தூதரைப் பார்க்க விரைந்து வருகின்றார்.

தான் முன்பு சொன்னதை கடவுளின் தூதர் திரும்பவும் சொல்கிறார்.

'ஆமா! உங்க பேரு என்ன? நாங்க உங்களுக்கு ஏதாவது செய்யணுமா?' என்று வெகுளித்தனமாகக் கேட்கிறார் மனோவாகு.

'என் பேரை நீ ஏன்ப்பா கேட்குற?' என முறைத்துக்கொள்ளும் தூதர், 'நீ கடவுளுக்கு வேண்டுமாhனல் பலி செலுத்து என்கிறார்!' பலி செலுத்துகிறார் மனோவாகு. அந்தப் பலியின் நெருப்பில் கரைந்து மறைந்து போகிறார் தூதர்.

மனோவாகுவிற்கு பயம். 'கடவுளையே பார்த்துட்டோம்! கடவுளையே சோதிச்சுட்டோம்! சாகப்போறோம்!' என்கிறார்.

'தோடா...ஏன் இப்படி பயந்து சாகுற? இப்போ என்ன ஆய்டுச்சு? அவர் நம்மள தண்டிக்கிறதுனா நம்மகிட்ட வந்திருப்பாரா...சும்மா கம்முனு கிட!' என ஆறுதல் சொல்கிறார் அம்மணி.

மனோவாகின் மனைவி மூன்று விடயங்களைக் கற்பிக்கிறாள் நமக்கு:

1. தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள சீக்ரெட். கடவுளின் தூதரின் வார்த்தைகளைத் தன் கணவரிடம் சொல்லும் இவள் ஒரு முக்கியமான விஷயத்தை மறைத்துவிடுகிறாள். 'பிள்ளை கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என்று சொன்னவள், 'அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது,' என்பதையும், 'அவன் இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிப்பான்' (13:5) என்பதையும் மறைத்துவிடுகிறாள். இந்த விஷயம் மூவருக்கு மட்டுமே தெரிகிறது: கடவுள், அம்மா, மகன். யாருக்குமே தெரியாத இந்த சீக்ரெட்டை தெலீலாவிடம் சொன்னதால்தான் சிம்சோன் சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒவ்வொரு குழந்தையை தன் கருவில் தாங்கும்போதும் ஒரு தாய் கடவுளிடமிருந்து ஒரு செய்தியைப் பெறுகிறாள். அந்தச் செய்தியை அவள் தன் குழந்தைக்கு மட்டும் சொல்கிறாள். தன் கணவனுக்கும் அவள் சொல்வதில்லை. இதுதான் தொப்புள்கொடி உறவு. இந்த தொப்புள்கொடி வழியாக தாய் தன் குழந்தைக்கு உணவை மட்டும் பகிர்வதில்லை. தன் எண்ணம், ஏக்கம், கலக்கம், கனவு அனைத்தையும் பகிர்கிறாள்.

2. தாயின் தியாகம். கடவுளுக்கான நாசீராக இருப்பவர்தான் மதுவோ, திராட்சை ரசமோ அருந்தக் கூடாது (காண். எண் 6:1-5). ஆனால், இங்கே தன் மகன் நாசீராக ('அர்ப்பணிக்கப்பட்டவனாக') இருப்பதற்காக, தான் பட்டினி கிடக்கின்றாள் இந்த ஏழைத்தாய்.

3. அறிவாளி. ஆண்களுக்குப் புரியாத பல விஷயங்களை பெண்கள் மிக எளிதாக புரிந்து கொள்கிறார்கள். இங்கே கடவுளின் மனதையே புரிந்து கொள்கிறாள் இந்தச் சின்னப் பொண்ணு. தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருக்கும் ஒருவர் எல்லா மறைபொருள்களையும் அறிந்து கொள்வார். வாழ்வின் எல்லா சூழல்களிலும் பதற்றமின்றி செயலாற்றுவார். சிம்சோனின் அம்மாவும் தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருந்தாள்.

சிம்சோனின் அம்மா - நம் அம்மாக்களின் உருவகம்!

Top

இப்தாவின் மகள்

அவள் அவரிடம், 'அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்' என்றாள்... ... ... இரண்டு மாதங்கள் முடிந்து அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படியே அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை. (நீதி 11:36, 39).

நாம கோயிலுக்குப் போய் வைக்கும் நேர்ச்சைகள் நமக்கும், நம் குடும்பத்தாருக்கும் அழிவைத் தருவதாக இருந்தால் எப்படி இருக்கும்?

ஒரு அப்பாவின் முட்டாள்தனமான நேர்ச்சையால் ஒரு அப்பாவி மகள் உயிரிழக்கிறாள் நீதிித்தலைவர்கள் நூலில்.

அந்த அப்பாவின் பெயர் இப்தா. 'இப்தா' என்றால் 'திறப்பவன்,' அல்லது 'ஆண்டவர் திறப்பார்' என்பது பொருள்.

இப்தா ஒரு அன்ஃபுல்ஃபில்ட் சைல்ட் (unfulfilled child). அதாவது அவரது குழந்தைப் பருவம் இனிமையாக இல்லை. 'விலைமாதின் மகனான' இவர், இவரின் உடன் பிறந்தவர்கள் மற்றும் ஊராரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றார். குழந்தைப் பருவத்தில் அன்பு செய்யப்படாத, அல்லது கண்டு கொள்ளப்படாத, அல்லது ஒதுக்கப்பட்ட பிஞ்சுகள், வளர்ந்து வரும்போது உள்ளத்தில் கோபம் மற்றும் வன்மம் கொண்டவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை (low self-esteem or inferiority complex) இவர்களை 'உயர்வு மனப்பான்மை' (superiority complex) கொண்டவர்களாக உருவாக்கி, இவர்களின் பிரசன்னமே அடுத்தவர்களின் அழிவுக்குக் காரணமாகிவிடுகிறது.

ஆக, இப்தாவின் குழந்தைப்பருவம் பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்தது. மேலும், இவரது சேர்க்கையும் சரியில்லை. 'வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்து கொண்டு அவருடன் திரிந்தனர்' (11:4). பிறப்பும் சரியில்லை. வளர்ப்பும் சரியில்லை. சேர்க்கையும் சரியில்லை.

இதற்கிடையில் அம்மோனியர்கள் இஸ்ரயேலரோடு சண்டைக்கு வருகின்றனர். இந்த சண்டையில் தங்களை வழிநடத்திச் செல்ல இப்தாவே சரியான ஆள் என முடிவெடுக்கின்றனர் கிலயாது என்னும் ஊரின் மக்கள்.

'நீ வந்து எங்களுக்குத் தலைவராக இரு!'

'நீங்கதானே என்னை அடிச்சு விரட்டினீங்க! இப்ப எந்த மூஞ்சியை வச்சிகிட்டு என் முன்னால வந்து நிக்குறீங்க?'

'தப்புதான். நாங்க செஞ்சது தப்புதான். அந்த தப்புக்கு இப்போ பரிகாரம் செய்றோம். நீயே வந்து எங்களுக்குத் தலைவனாக இரு!'

'நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்கனு எனக்கு எப்படித் தெரியும்?'

'ஆண்டவர் சாட்சியா சொல்றோம், 'நீதிான் எங்கள் தலைவன்.''

ரொம்ப பெருந்தன்மையோடு இறங்கி வரும் இப்தா முதலில் அம்மோனியரைப் பேச்சிலேயே மடக்கி விடலாம் என நினைக்கிறார். அவர்களை நோக்கி தூது அனுப்புகிறார். ஆனால் அவர்கள் பணிவதாக இல்லை.

'சரி! சண்டைதான் சரியா வழி!' என நினைக்கும் இப்தா போருக்குத் தயாராகின்றார்.

போருக்குப் போகுமுன் ஆண்டவருக்கு எசகுபிசகான ஒரு நேர்ச்சை செய்கின்றார்:

'நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால், அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும்போது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிருந்து புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரிபலியாக்குவேன்!'

ஆண்டவர் அவருக்கு வெற்றியும் அருள்கின்றார்.

ஏதோ ஒரு ஆடோ, மாடோ வரும் என நினைத்து நேர்ச்சை செய்தவர் முன் அவளின் ஒரே மகள் மேள தாளத்துடன் ஆடி வருகிறாள்.

'ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!' என்று கூப்பாடு போடுகின்றார் இப்தா.

ஆனால் மகள் ரொம்ப கூலாக பதில் சொல்கிறாள்.

'அம்மோனியரிடமிருந்து வெற்றி கிடைத்துவிட்டது. நீங்கள் சொன்னதுபோலவே செய்துவிடுங்கள். நான் ரெண்டு மாசம் என் தோழிகளோடு போய் என் கன்னித்தன்மை குறித்து அழுது புலம்பவிட்டு வர விடை கொடுங்கள்' என மலையை நோக்கிப் புறப்படுகின்றாள் அந்த மடந்தை.

துக்கம் கொண்டாடிவிட்டு வந்தவள் எரிபலியாகிறாள்.

ஒரு தந்தையின் வீணான நேர்ச்சைக்குப் பலியாகிறாள் இந்த 'அநாமிகா' (பெயரில்லாதவள்).

தன் தந்தையின் வாக்கு தவறக்கூடாது என்பதற்காவும், தன் இனம் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டது என்று மகிழ்வதற்காகவும் தன்னையே பலியாக்கிய இந்த மெழுகுதிரியின் பெயர் என்ன என்பது இருட்டடிக்கப்பட்டிருக்கிறது. முதல் ஏற்பாட்டு ஆணாதிக்கத்தின் எச்சம் இது.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:

அ. குழந்தைப்பருவத்தில் அன்பு செய்யப்படாத குழந்தைகளாக நாம் இருந்தால், அதற்கேற்ற மாற்றைக் கண்டுபிடித்து அன்பை நாம் முழுமையாக அனுபவித்தல் வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால், அல்லது நம் பெற்றோரின் உடல்நலமின்மையால், அறியாமையால் நாம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நம்முள் எழும் கோபம், பயம், பொறாமை போன்றவற்றை இனம் கண்டு அவற்றை நாம் குணமாக்க வேண்டும். இல்லையென்றால் அது நம் அன்பிற்குரியவர்களின் அழிவாக உருமாறிவிடும்.

ஆ. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்போது ப்ராமிஸ் பண்ணவும், ரொம்ப கோபமாக இருக்கும்போது முடிவெடுக்கவும் கூடாது. மேலும் ஆண்டவர் முன் வாக்குறுதி அல்லது நேர்ச்சை கொடுக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். 'கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. மிகச்சில சொற்களே சொல்' (சஉ 5:2).

இ. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கின்றது. அதிக மதிப்புள்ள ஒன்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும். குறைவான விலை கொடுத்து அதிக மதிப்புள்ளதைப் பெற முடியாது. ஆண்டவர் தரும் வெற்றிக்கு விலை இப்தாவின் மகளின் உயிர்.

பாவம்! இப்தாவின் மகள்! தான் அன்பு செய்யப்படாததால் என்னவோ, இப்தாவுக்கு தன் மகளையும் அன்பு செய்யத் தெரியவில்லை. தன் வீட்டு ஆடு, மாடு போல தன் விருப்பப்படி நடத்துகின்றார் அவளை.

ஊர் மக்கள் இப்தாவைப் 'பயன்படுத்தி' தங்கள் பாதுகாப்பு என்னும் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். இப்தா தன் மகளைப் 'பயன்படுத்தி' தன் நேர்ச்சை என்னும் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.

மனிதர்கள் அன்பு செய்யப்படவும், பொருள்கள் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்ற நிலை மாறி, மனிதர்கள் பயன்படுத்தப்படவும், பொருள்கள் அன்பு செய்யப்படவும் என்று ஆகிவிட்டது.

இப்தாவின் மகள் - எடுப்பார் கைப்பிள்ளை!

Top

ஒரு பெண்

அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான். அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான். அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள். உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், 'உன் வாளை உருவு. ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு' என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான். (நீதி 9:53-55)

தன் அரசனின் மேல் கல்லைப் போட்டுக் கொன்ற இந்த 'அனாமிகா' (பெயரில்லாதவள்) பற்றி இன்று நாம் பார்ப்போம்.

'பெண்ணின் கையால் கொல்லப்படுவதை' தாழ்வாகக் கருதிய இந்த அரசனின் பெயர் அபிமெலக்கு.

'அபிமெலக்கு' என்றால் 'என் அப்பா ஓர் அரசன்' என்று பொருள். அபிமெலக்கைப் பற்றி தெரிந்து கொள்ள அவனது அப்பா கிதியோன் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம். 'கிதியோன்' என்றால் 'கல் உடைப்பவன்' அல்லது 'குடைபவன்,' அல்லது 'அழிப்பவன்' என்பது பொருள். மிதியானியார்களின் கை ஓங்கி இருந்தபோது, அவர்களை அழித்து இஸ்ரயேலுக்கு நீதிி வழங்க இவரை அழைக்கிறார் ஆண்டவர். தன் குடும்பத்தில் புழக்கத்தில் இருந்த பாகால் மற்றும் அசேரா வழிபாட்டை அழித்ததால், இவரின் ஊர்க்க்காரர்கள் இவருக்கு 'எருபாகால்' ('பாகாலோடு போரிடுபவன்') எனப் பெயரிடுகின்றனர். ஆண்டவரின் அருட்கரத்தின் துணை கொண்டு மிதியானியர்களை வெல்கின்றார் கிதியோன். ஆனால், வெற்றி கிடைத்தவுடன் அவரின் மனம் ஆண்டவரிடமிருந்து விலகி மீண்டும் பாகால்-அசேரா நோக்கித் திரும்புகிறது.

இவருக்குப் பல மனைவியர் இருக்கின்றனர். இந்தப் பல மனைவியர் வழியாக இவருக்கு எழுபது குழந்தைகள். செக்கேமிலிருந்து இவரின் வேலைக்காரி, இவரின் வைப்பாட்டியாகவும் இருக்கிறாள். அவள் வழியாகப் பிறந்தவனே அபிமெலக்கு. தான் உயிருடன் இருக்க வேண்டும், தன் தந்தைக்குப் பின் அரசாள வேண்டும் என நினைக்கும் இவன், தன் உடன்பிறந்த 70 பேரையும் கொன்று விடுகின்றான். ஆனால், அவர்களில் ஒருவன், கடைக்குட்டி, யோத்தாம் தப்பி விடுகின்றான். தப்பியோடிய கடைக்குட்டியையும் பயமுறுத்தி விரட்டிவிடுகிறான் அபிமெலக்கு.

அப்புறம் என்ன? 'நானே ராஜா! நானே மந்திரி!' என தனக்கென்று ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தன் ஊர் மக்களை ஆளத் தொடங்குகின்றான். தன் ஊர் மக்கள் தன்மேல் அதிருப்தி அடைவதைக் கண்டு, தன் ஊர் மொத்தத்தையும் அழித்துவிடத் தீர்மானிக்கிறான்.

மனதில் தோன்றும் வன்மத்தின் குணம் இதுவே. சின்னத் தவறிலிருந்து பெரிய தவறு நோக்கி அது மனத்தை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஊர் மக்களை எப்படி எளிதாக அழிப்பது என்று யோசிக்கின்ற மனம் சின்ன வழியையும் கண்டுபிடிக்கிறது. அதாவது, மக்கள் இரண்டே வகை. ஒன்று ஊருக்குள் இருப்பவர்கள். இரண்டு, ஊரை விட்டு வெளியே வயலில் வேலை செய்பவர்கள். வேலை செய்பவர்கள் ஊருக்குள் வரும்போது வழி மறித்து அவர்களைக் கொன்றுவிட வேண்டும். ஊருக்குள் இருப்பவர்களை அப்படியே ஊரோடு எரித்துவிட வேண்டும். ஊருக்குள் வெளியே இருப்பவர்களை ஒருவழியாகக் கொன்றுவிடுகிறான். ஊருக்குள் இருக்கும் மக்களை அழிப்பதுதான் கடினமாக இருக்கிறது. ஊரின் நடுவில் இருந்து ஒரு கோட்டையின்மேல் எல்லாரும் ஏறிக்கொள்கின்றனர். 'கோட்டைக்கே தீ வைத்துவிடலாம்' என எண்ணி கோட்டையைச் சுற்றி விறகுகளை அடுக்குகின்றான் நம்ம அபி. அடுக்கி வைத்த விறகுகளுக்கு தீயிட அதை நெருங்கும்போதுதான் அந்த விபரீதம் நடக்கின்றது. கோட்டையின் மேலிருந்து ஓர் இளவல் மாவரைக்கும் கல்லை அவன்மேல் தூக்கிப் போட்டு அவன் மண்டையைப் பிளக்கின்றாள்.

மாவரைக்கும் கல்லை கோட்டையின் மேல் கொண்டு சென்றிருக்கிறாள் அந்தப் பெண். அப்படியெனில் இது ஒரு திட்டமிட்ட செயல். கீழிருக்கும் கல்லை மேலே தூக்கிக் கொண்டு போயிருக்கிறாள். 'என்னடாமா கல்லைத் தூக்கிக் கொண்டு வர்றீங்க?' என்ற நிறையப் பேர் அவளிடம் கேட்டிருப்பார்கள். அபிமெலேக்கு எந்தப் பக்கம் வருவான் என்று அவள் கண்ணமிட்டுக் காத்திருக்கிறாள். சரியாக தலைமேல் போடுகின்றாள்.

கோட்டை உயரமானது. கல் எடை கொண்டது. எடையும், உயரமும் கல்லின் வேகத்தைக் கூட்ட அது அபிமெலக்கை நிலைகுலையச் செய்கிறது.

ஆனால், அந்த நிலையிலும் தன் படைக்கலம் தாங்குவோனோடு பேசும் திடம் பெற்றிருக்கிறான் அபிமெலக்கு. இறக்கும்போது கூட ஒரு இறுமாப்பு. ஒரு வளைக்கரம் தன்னைக் கொன்றுவிட்டது என்று யாரும் சொல்லக்கூடாது என்பதில் அக்கறையாயிருக்கிறான்.

ஆக, இனி வரும் நீதித்தலைவர்கள் நூலில் பெண் எப்படி சித்தரிக்கப்படுவாள் என்பதை இந்நிகழ்வு முன்னோட்டமாகக் காட்டுகிறது. பெண் வலுவின்மையின் அடையாளமாக, அவமானத்தின் அடையாளமாக, எடுப்பார் கைப்பிள்ளையாகவே இனி இருப்பாள் இந்த நூலில்.

ஆனாலும், இந்தப் பெண்ணின் துணிச்சலும், வீரமும் பாராட்டப்பட வேண்டியதே.

அடுத்தவர் தலைமேல் கல்லைப் போட்டு அழித்த அபிமெலக்கின் தலைமீதும் கல் விழுகின்றது.

'உன் தலையில கல்லு வந்து விழ!' என்று யாரோ அபிமெலக்கை சபித்திருப்பார்கள் போலும்!

Top

யாவேல்

giaele

'நான் உம்முடன் வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்' (நீதி 4:9) என்று தெபோரா பாராக்கிடம் சொல்கிறார்.

இந்த இடத்தில் பாராக்கும், வாசகரும் என்ன நினைப்பர்? இங்கே குறிப்பிடப்படும் பெண் தெபோரா என்று. ஆனால் இங்கே தெபோரா தன்னைப் பற்றிக் குறிப்பிடவில்லை. 'யாவேல்' என்ற பெண்ணைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றார்.

'பாராக்கு' என்றால் 'மின்னல்' என்று பொருள். பாராக்கு எதிரியின் படைத்தலைவனான சீசராவை மின்னல்போலத் துரத்திச் செல்கின்றார். தன் இரும்புத் தேர்கள், தன் மக்கள் எல்லாரும் அழிக்கப்பட தான் மட்டும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடுகின்றான் சீசரா.

அப்படி ஓடும் வழியில் ஒரு கூடாரம் தென்படுகிறது. இவன் ஓடி கூடாரத்தை நெருங்கும் அதே நேரம், கூடாரத்தை விட்டு வெளியே அவனை எதிர்கொண்டு வருகிறாள் யாவேல் (ஜேயல்). 'யாவேல்' என்றால் 'காட்டு மான்' அல்லது 'காட்டு ஆடு' என்பது பொருள். காடுகளிலும், பாலை நிலங்களிலும் கூடாரம் அமைத்து வாழும் 'கேனியர்' என்ற நாடோடி இனத்துப் பெண்ணுக்குப் பொருத்தமான பெயரே இது. யாவேல் கெபேரின் மனைவி (5:24). இவளுக்கு வயது கண்டிப்பாக 20க்குள் தான் இருக்க வேண்டும்.

சீசராவை எதிர்கொண்ட யாவேல், 'இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும். அஞ்ச வேண்டாம்' (4:16) என்கிறார்.

தப்பித்துச் செல்லும் எலி நேராக கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொள்வது போல, யாவேலின் கூடாரத்துக்குள் நுழைகிறான் சீசரா.

இந்த நேரத்தில் எதிரி தன்னை நோக்கி ஓடிவருவான் என்று யாவேலுக்கு எப்படி தெரிந்தது?

'இவன்தான் அவன்!' என அவள் எப்படி தன் உள்ளுணர்வால் அறிந்து கொண்டாள்?

அவனை எதிர்கொண்டு சரியாக எப்படி 'என் தலைவரே' என அவளால் அழைக்க முடிந்தது?

இங்கேதான் கடவுளின் கரம் இருக்கிறது. தெபோரா பாராக்குடன் நேருக்கு நேர் உரையாடி இறைத் திருவுளத்தை அவருக்கு வெளிப்படுத்துகிறார். ஆனால், தெபோராவுக்கும், யாவேலுக்கும் இடையே உள்ள உரையாடல் மானசீகமாக, ஆன்மாவும்-ஆன்மாவும் பரிமாறிக்கொள்வதாக இருக்கிறது.

கூடராத்துக்குள் நுழைந்த சீசராவை போர்வையால் மூடுகிறார் யாவேல்.

'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு! தாகமாயிருக்கிறது!' என்கிறான் சீசரா.

'தண்ணீர் என்ன! பாலே தருகிறேன்' என்று சொல்லி பால் வைக்கும் தோற்பையைத் திறந்து குடிக்கக் கொடுக்கின்றாள் யாவேல்.

இங்கே மற்றொரு அதிசயம். பாலைநிலத்தில் தண்ணீர் கிடைப்பதே அரிது. பால் கிடைப்பது சில நேரங்களில் எளிதாயினும், அதை மொட்டை வெயிலில் பாதுகாப்பது மிகவும் சிரமம். வெப்பமான இடத்தில் பால் சீக்கிரம் கெட்டுவிடும். ஆனால், இங்கே பால் பாதுகாப்பாவும், தயாராகவும் இருக்கிறது.

பால் கொடுத்துவிட்டு மீண்டும் அவனை மூடுகிறாள் யாவேல்.

'கூடாரத்தின் வாயிலில் நின்று கொள். எவனாவது வந்து, 'இங்கு ஒர் ஆள் இருக்கின்றானா?' என்று உன்னைக் கேட்டால், நீ 'இல்லை' என்று சொல்!' என்று சீசரா யாவேலுக்குக் கட்டளையிடுகின்றான்.

சொல்லி முடித்தவுடன் அயர்ந்து தூங்கி விடுகிறான்.

'சரி!' என்று சொல்லும் நம் இளவல், அவன் தூங்கிய சில நிமிடங்களில், கூடார முளை ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக்கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளை தரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிகின்றான்.

தாவீது கோலியாத்தை நெற்றிப் பொட்டில் அடித்துக் கொன்ற நிகழ்வுதான் இங்கே நினைவிற்கு வருகிறது.

கூடார முளை மிகவும் திடமாக இருக்கும். ஏனெனில் அதுதான் கூடாரத்தை பாலைநிலத்துக் காற்றிலிருந்து காப்பாற்றும். அந்தத் திடமான முளையை அடித்து இறக்கும் சுத்தியலும் கனமாக இருக்கும். ஒருவர் பிடித்துக்கொள்ள மற்றவர்தான் சுத்தியல் கொண்டு அடிக்க முடியும். ஆனால், இங்கே யாவேல் தானே முளையையும் பிடித்துக்கொண்டு, மற்ற கையால் சுத்தியல் கொண்டு அடிக்கின்றாள். மிக வேகமாக அவள் சுத்தியலால் அடிக்க வேண்டும். மேலும் மிக கவனுமாகவும் அடிக்க வேண்டும். முளை நெற்றிப்பொட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சுத்தியல் முளையில் விழாவிட்டாலோ எதிரி பிழைத்துக் கொள்வான். யாவேலின் மூளையும், அவளின் உடலும் மிக அசாத்தியமாக ஒருங்கிணைந்து வேகமாகவும், விவேகமாகவும் இந்த வேலையைச் செய்து முடிக்கின்றன. நெற்றிப்பொட்டில் இறங்கும் முளை தரை வரை இறங்குகிறது. சீசரா தன் இரும்புத் தேர்மேல் பெருமிதம் கொண்டான். இங்கே அந்த இரும்பே அவனின் தலையில் இறங்குகிறது.

'இல்லை' என்று சொன்ன சீசரா இப்போது இல்லை என்றே ஆகிவிட்டான்.

அந்த நேரத்தில் பாராக்கு சீசராவைத் தேடி வருகின்றான். அவன் யார், யாரைத் தேடுகிறான் என்று தெரியாமலேயே, யாவேல் நேரடியாக அவனிடம் சென்று, 'வாரும் நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன்!' என்கிறாள் யாவேல்.

அவரும் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது.

ஒருவேளை, பாராக்கு முதலில் வந்து, சீசரா இரண்டாவது வந்தால் என்ன நடந்திருக்கும்? பாராக்கின் நெற்றிப்பொட்டல்லவா ஆணி அடிக்கப்பட்டிருக்கும்!

பாலைநில உலகில் யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியாது. அப்படியிருக்க, எதிரி யார், நல்லவன் யார் என்று யாவேல் உணர்ந்தது எப்படி? தண்ணீர் கேட்க பால் தயாராக இருந்தது எப்படி? கூடார முளையை ஒரு கையிலும், சுத்தியலை மறு கையிலும் தாங்கும் வலிமை அவளுக்கு வந்தது எப்படி? அந்நேரம் யாரும் கூடாரத்திற்கு அருகில் வராதது எப்படி?

யாவேல் - ஒரு காட்டு மான்!

(பெண்கள் தனியாக இருக்கும் வீட்டில் போய், 'நான் கொஞ்ச நேரம் இங்கே தூங்கிக்கிறேன்! யாராவது வந்து கேட்டால், 'நான் இல்லை' என்று சொல்!' என்று சொல்லிடாதீங்க பாஸ். கூடாரத்து முளை, சுத்தியல் எல்லாம் கண்முன் வந்து போகும்போது, தூக்கம் எப்படி பாஸ் வரும்!)

Top

'தெபோரா'

DEborah

'தெபோரா' என்றால் 'தேனீ' என்பது பொருள். இவர் ஒரு பெண் இறைவாக்கினர். முதல் ஏற்பாட்டில் இவரைத் தவிர்த்து நான்கு பெண் இறைவாக்கினர்கள் உள்ளனர் - மிரியம் (மீக் 6:4), குல்தா (2 அரச 14:22), நொவாதியா (நெகே 6:14), மற்றும் எசாயாவின் மனைவி (எசா 8:3).

இவரை 'இஸ்ரயேலின் இறைவாக்கினர்,' 'லப்பிதோத்தின் மனைவி,' மற்றும் 'நீதித்தலைவி' என அறிமுகம் செய்கிறது நீதி 4:4. 'லப்பிதோத்து' என்றால் 'தீப்பந்தங்கள்' என்று பொருள்.

நீதித்தலைவர்கள் வழக்கமாக எதிரிகளைப் போரிட்டு அழிக்கக் கூடியவராக இருக்கின்றனர். ஆனால் தெபோரா ஒருவர் மட்டும்தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே எதிரிகளை அழிக்கின்றார்.

'எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் 'தெபோராப் பேரீச்சை' என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்பு பெறுவதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.'

கல் மற்றும் மரங்களை வைத்துத்தான் இடங்கள் அறியப்பட்டன. தெபோரா உட்கார்ந்திருந்ததால் அந்த இடத்திற்கு அவரின் பெயரே வழங்கலாயிற்று. 'போதி மரம்' போல. 'போதி' மரம் என்று ஒன்றும் கிடையாது. அந்த மரத்தின் கீழ் சித்தார்த்தர் அமர்ந்து 'புத்த' நிலை அல்லது 'போதி'நிலை அடைந்ததால் அந்த மரம் 'போதி மரம்' என அழைக்கப்படுகின்றது.

தெபோரா குறிசொல்பவராகவும், வழக்குகளைத் தீர்த்து வைக்கும் ஞானம் பெற்றவராகவும் இருக்கிறார்.

மேலும், யாபினின் படைத்தலைவன் சீசரா இஸ்ரயேலுக்கு அச்சுறுத்தலாய் இருந்தபோது, அவனை அழிப்பதற்காக 'பாராக்கு' என்ற இளைஞனைத் தேடி அனுப்புகிறார் தெபோரா.

'நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன்.

நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்.' என தயக்கம் காட்டுகிறார் பாராக்கு.

'நான் உம்மிடம் வருவேன்' என்று சொல்லி தானும் உடன் செல்கின்றார்.

ஆண்களால் ஒரு வேலை செய்யப்பட முடியாதபோதுதான், அந்த வேலையை பெண்களுக்குத் தருகிறார் முதல் ஏற்பாட்டுக் கடவுள்.

பாராக்கு படைவீரன்போலத் தோன்றினாலும், அவர் செய்ததெல்லாம் ஆட்களை விரட்டிக் கொண்டு ஓடியது மட்டுமே. வேறு ஒன்றும் அவருக்குத் தெரியாது.

அந்த நேரத்தில் உடனிருப்பாக இருக்கின்றார் தெபோரா.

தெபோரா - உடனிருப்பு.

Topஅக்சா

அக்சா - நீதி 1:10-15 ல் வருகிறார் இவர். இதே நிகழ்வு யோசுவா 15:13-19-இலும் உள்ளது.

'அக்சா' என்றால் 'கொலுசு,' 'வளையல்,' அல்லது 'சிலம்பு' என்பது பொருள்.

இவரைப் பற்றிய பாபிலோனிய தால்முத் என்னும் நூல் இப்படிச் சொல்கிறது: 'அவளின் பெயர் அக்சா என ஏன் வழங்கப்பட்டது? ஏனெனில் அவளைக் காணும் எந்த ஆணும் தன் மனைவி மேல் கோபப்பட்டான்.'

அதாவது, நம்ம 'அக்சா'வின் அழகைப் பார்த்து அதில் பிரமிக்கும் ஆண்கள் அனைவரும், தம் மனைவியர் 'அழகு குறைவாக' இருப்பதாக அவர்கள்மேல் கோபப்படுவார்களாம். மேலும், இவளின் பெயர் 'கஆஸ்' ('கோபம்') என்ற எபிரேய மூலத்திலிருந்து வருகின்றது.

இவளின் அப்பா பெயர் 'காலேபு'. தெபீர் என்ற நகரை யார் அழிக்கிறார்களோ அவர்களுக்கு என் மகளை மணம் முடித்துக்கொடுப்பேன்! என அறிக்கை விடுகின்றார் காலேபு.

பெண் என்பவள் எபிரேய சமூகத்தில் ஆணின் (தந்தையின்) உடைமையாகக் கருதப்பட்டாள் என்பதற்கு இது சான்று. அதாவது, வெற்றி பெற்ற ஒருவருவருக்கு வழங்கப்படும் பரிசு அல்லது அன்பளிப்பு என மாற்றப்படுகிறாள் அக்சா.

மேலும், எபிரேய சமூகத்தில் வரதட்சணை என்பது 'பெண்-விலை' என அழைக்கப்பட்டது. அதாவது, விவசாய சமூகத்தில் ஒவ்வொருவரும் முக்கியமானவர். ஒரு பெண்ணை அவளது குடும்பத்திலிருந்து ஒரு ஆண் திருமணம் செய்து செல்கிறான் என்றால், அவன் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை பணம் கொண்டு நிரப்ப வேண்டும். ஆக, பெண் எடுக்கும் ஆண்தான், பெண்ணின் குடும்பத்திற்கு 'பணம்' அல்லது 'ஆடுகள்' அல்லது 'வேலை' என எதையாவது கொடுக்க வேண்டும்.

தெபீர் நகரை அழிக்கின்ற ஒத்னியேல் ('கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுளின் சிங்கம்') அக்சாவைக் கரம் பிடிக்கின்றான்.

'என் தந்தையிடம் ஒரு நிலம் கேள்!' என அவள் ஒத்னியேலைத் தூண்டுகிறாள். ஆனால், கழுதையை விட்டு இறங்கியபோது அவள், 'எனக்கு நீரூற்றுக்கள் வேண்டும்!' என்கிறாள்.

ஒத்னியேல் என்பவன் வறண்ட நிலம் என்றும், எனக்கு வேறு 'நீரூற்றுக்கள்' வேண்டும் என தன் தந்தையிடம் வேறு ஆடவர்களை அவள் கேட்பதாகவும் சிலர் வேறு பொருள் கொள்கின்றனர்.

தந்தையும் தன் மகள் கேட்டபடி 'மேல் ஊற்றுக்களையும், கீழ் ஊற்றுக்களையும் கொடுக்கின்றார்.'

போர்கள் மறைந்து, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக நிலங்களில் குடியிருக்க ஆரம்பிக்கிறார்கள். ஒத்னியேலும், அக்சாவும் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் வாழும் முதல் தம்பதியினர். இனி எல்லாமே மாறும்.

'அக்சா' அழகியோ இல்லையோ, ஆனால் அவள் தான் விரும்புவதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் திறமைசாலி.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் - அக்சா.

Top